உங்கள் வகுப்பில் பல மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள்?
சிலர் உயரம், சிலர் குள்ளம், சிலர் பணக்காரக் குடும்பங்களிலிருந்து வருகிறவர்கள், சிலர் ஏழைகள், சிலர் நன்றாகப் படிக்கிறவர்கள், சிலர் தேர்ச்சிபெறத் தடுமாறுகிறவர்கள், சிலர் அழகாக எழுதுகிறவர்கள், சிலர் கோழிக்கிறுக்கல்போல் எழுதுகிறவர்கள், சிலர் நன்கு சாப்பிடுகிறவர்கள், சிலர் சாப்பாடு என்றாலே ஓடிவிடுகிறவர்கள், சிலருக்குக் கணக்கு நன்றாக வரும், சிலருக்கு அறிவியலில் ஆர்வம்...
இப்படி ஒரு சிறிய வகுப்புக்குள்ளேயே பல மாணவர்கள் பல விதமாக இருக்கிறார்கள் என்றால், இந்த உலகம் எத்துணை பெரியது! அங்கே எப்படிப்பட்ட மனிதர் களெல்லாம் இருப்பார்கள், அவர்களுக்கு எத்தகைய பலங்கள், பலவீனங்கள், உணர்வுகள், பிரச்னைகள், தேவைகள் இருக்கும்!
ஒரு தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான பேனாக்கள் தயாராகின்றன. அவை அனைத்தும் பார்ப்பதற்கு ஒரேமாதிரியாக இருக்கும், ஒரே மாதிரியாகதான் செயல்படும். ஆனால், மனிதர்கள் அப்படியில்லை... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். உடல்சார்ந்த வேறு பாடுகளில் தொடங்கி, அவர்கள் வளர்ந்த பின்னணி, கற்றுக்கொண்டவை, கற்றுக்கொள்ளாதவை, அனுபவம் எனப் பல விஷயங்கள் அவர்களுடைய உணர்வுகளை, செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றன.
இந்த வேறுபாட்டைச் சிலர் புரிந்துகொள்வதே இல்லை. தங்களைப்போலவே பிறரையும் நினைக்கிறார்கள். தங்களுக்கு ஒரு விஷயம் நன்றாகவருகிறது என்றால், மற்றவர்களும் அதை நன்றாகச் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்; அப்படிச் செய்யாதவர்கள்மீது கோபப்படுகிறார்கள்.
பலர் இணைந்து குழுவாகச் செயல்படும்போது, ஒருவரை யொருவர் புரிந்துகொள்ளவேண்டும். ஒருவேளை மற்றவர்கள் வேறு விதமாக இருந்தாலும், அவர்களிடம் குறைகள் தென்பட்டாலும், அதனைப் பரிவோடு அணுகுவது அவசியம், ‘உன் நிலையை நான் புரிந்துகொள்கிறேன்’ என்று உணர்த்துவது, அன்பைப் பகிர்ந்து கொள்வது, ஆதரிப்பது அவசியம்.
ஆங்கிலத்தில் இதனை 'Empathy' என்கிறார்கள், தமிழில் பச்சாதாபம், பிறர்நிலை உணர்தல், ஒத்துணர்வு என்றெல்லாம் அழைக் கலாம். அதாவது, இன்னொருவருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல், அவர்களுடைய நிலையிலிருந்து அதனை உணர்தல்.
நாள்தோறும் நாம் பிறரிடம் பேசும்போது, அவர்கள் சொல்லுகிறவற்றைக் கேட்கிறோம், அதற்கேற்பச் செயல்படுகிறோம்.
எடுத்துக்காட்டாக, ஒருவர் ‘எனக்குப்பசிக்கிறது’ என்று சொன்னால், ‘இதோ, சாப்பாடு’ என்று பரிமாறுகிறோம். அவருடைய பசியை அவர் சொற்களால் வெளிப்படுத்து கிறார்; நாம் அதனைத் தீர்த்துவைக்கிறோம்.
மாறாக, அவர் எதுவுமே சொல்லாமல் அமர்ந்திருக்கிறார். அவருடைய முகத்தைப் பார்த்து, செயல்பாடுகளைப் பார்த்து அவர் பசியோடிருப்பதை நாம் புரிந்து கொள்கிறோம்; சட்டென்று சாப்பாட்டைக் கொண்டுவந்து வைக்கிறோம்.
முதல் நிகழ்வுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு, இங்கே அவர் சொற்களால் எதையும் வெளிப்படுத்தவில்லை; அவருடைய பசியை நாமே புரிந்துகொண்டு, வேண்டியதைச் செய்கிறோம்.
இப்படி ஒருவர் சொல்லாத உணர்வுகளையும் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், நாம் அவர்களைத் தொடர்ந்து கவனிக்கவேண்டும். ‘உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் என்னிடம் வந்து பேசுங்கள்’ என்று சொல்லி விட்டுச் சும்மா அமர்ந்துகொண்டிருக்கக்கூடாது. எல்லாரும் எல்லாவற்றையும் பேசிவிடுவதில்லை; சிலருக்குச் சில விஷயங்களைச்
சொல்லத்தெரியாது; சிலர் சொல்ல விரும்புவதில்லை; சிலர் எப்படிச் சொல்வது என்று தயங்குகிறார்கள்.
அதனால்தான், சொற்களால் வெளிப்படாத உணர்வுகளைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. பிறர் மீது உண்மையான அன்புகொண்டவர்கள், அக்கறையுள்ளவர்கள் அவர்களுடைய சிறிய, வெளிப்படுத்தாத உணர்வுகளைக் கூடச் சட்டென்று புரிந்துகொண்டு செயல்படுவார்கள்.
இதற்குப் பரந்த மனம் தேவை; அதாவது, தன்னுடைய சிந்தனைக் கோணம் ஒன்றுதான் சரி என்கிற மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும்.
'Walk in Others' shoes' என்று ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது, அடுத்தவர்களுடைய காலணியைப் போட்டுக்கொண்டு நடந்து பார்ப்பது. அவர்களுடைய கோணத்திலிருந்து சூழ்நிலையை உணர்வதைக் குறியீடாக இப்படிச் சொல்வார்கள்.
எடுத்துக்காட்டாக, கண்தெரியாத ஒருவருடைய உலகம் எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? பிறந்தது முதல் கண் பார்வையோடு வாழ்ந்துவரும் ஒருவர் அதனைக் கற்பனைசெய்து புரிந்துகொள்வது சிரமம்தான்.
ஒரே ஒரு நிமிடம், கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்துபாருங்கள்; பிறர் உதவியுடன் சிறிதுதூரம் நடந்துபாருங்கள்; அவர்களுடைய உலகம் எப்படிப்பட்டது என்பதற்கான ஒரு சிறு புரிந்துகொள்ளல் உங்களுக்குக் கிடைக்கும்.
கண்பார்வை என்பது உடல்சார்ந்த விஷயம், இதேபோல் மனம் சார்ந்த விஷயங்களும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சரியாகப் படிக்கமுடியாமல், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கமுடியாமல் ஒரு மாணவன் தடுமாறுகிறான். நன்கு படிக்கிற இன்னொரு மாண வனால் இவனுடைய நிலையைப் புரிந்துகொள்ள இயலுமா?
நன்கு படிக்கிற மாணவன், ‘பாடம் எளிமையாதானே இருக்கு’ என்பான். ’உனக்கு இதைப் படிக்கவரலைன்னா நீ முட்டாள்’ என்பான்.
அவனுடைய கோணத்திலிருந்து பார்க்கும்போது அந்தப் பாடம் எளிமையானதுதான். ஆனால் இன்னொரு வனுடைய கோணத்தில் அது கடினமாக இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு, ‘உனக்கு இந்தப் பாடத்துல எது புரியலைன்னு சொல்லு, நான் உனக்குக் கற்றுத்தர்றேன்’ என்று சொல்லும்போது, அவன் படிப்பில் மட்டுமின்றி, பச்சாதாபத்திலும் சிறந்தவனாகிறான்.
மழை பெய்கிறது. நாம் வீட்டுக்குள் அமர்ந்தபடி அல்லது ஒரு குடைக்குள் நின்றபடி அதை ரசிக்கிறோம். அது நம்முடைய கோணம். அங்கே மழை என்பது அருமையான விஷயம்.
ஆனால், அதே மழையில் பலர் குடை இல்லாமல் சிக்கிக்கொண்டு விட்டார்கள்; அவர்களுடைய உடைகள், பை, அதிலிருக்கும் பொருள்களெல்லாம் நனைகின்றன; குளிரில் நடுங்குகிறார்கள். அவர்களுடைய கோணத்தில் மழை என்பது தொந்தரவு.
அப்போது, குடைக்குள் இருக்கும் ஒருவர் இன்னொருவரை அழைக்கிறார், ‘வாங்க, ரெண்டு பேரும் சேர்ந்து நடப்போம்’ என்கிறார்.
இன்னொருவர், தன் கடை வாசலைத் திறந்துவிடுகிறார், ‘வாங்க, மழை நிற்கும்வரை இங்கே நின்னுக்கோங்க’ என்கிறார்.
இப்படிச் சிறிய விஷயங்களில் தொடங்கி மிகப் பெரிய பிரச்னைகள்வரை அனைத்துக்கும் வெவ்வேறு பார்வைக் கோணங்கள் இருக்கின்றன. அவற்றை உணர்ந்து கொண்டால் சக மனிதர்களை இன்னும் நன்கு புரிந்துகொள்ளலாம், அவர்களோடு அன்போடும் நட்போடும் பணியாற்றலாம், உலகம் மேலும் அழகாகும்!