- தா. சரவணா
பொதுவாக ஆங்கிலம் என்றாலே பலருக்கும் வேப்பங்காய் சாப்பிட்டதுபோல இருக்கும். ஆனால், ஆங்கிலம் என்பது அறிவு இல்லை. அது ஒரு மொழி என்பதை அனைவரும் புரிந்துகொண்டால், அதைப்பற்றி எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. ஆனால், பள்ளி மாணவர்களைப் பொறுத்தமட்டில் ஆங்கிலம் என்றாலே குருட்டு மனப்பாடம் செய்து, தேர்வு எழுதுவதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒன்று. மலைக்கிராம மாணவர்களும் இதற்கு விதி விலக்கல்ல.
இதைக் கருத்தில்கொண்ட அரசு, மலைக்கிராம மாணவர்களும் ஆங்கிலத்தில் புலமை பெற, சிறப்பு வசதி செய்துகொடுத்துள்ளது. இதன் பெயர் ‛கரடி பாத் ஜாய்புல் இங்கிலீஸ்’ ஆகும். இது ஒரு தனியார் நிறுவனம் மூலமாக செயல்படுத்தப் படுகிறது. ஆங்கிலம் குறித்த தெளிவான பார்வையுடன், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டாகப் புரிந்துகொள்ளும் வகையில் கார்ட்டூன் திரைப்படம் வாயிலாக பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் முழுக்க, முழுக்க மலைக்கிராம மக்களுக்கானது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்ட மலைக்கிராமங்களான சேம்பரை, நெல்லிப்பட்டு, நடுக்குப்பம், அரச மரத்து கொல்லை, ரங்க சமுத்திரம் ஆகிய ஊர்களில் இயங்கிவரும் நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ‘கரடி பாத்’ மூலம் கற்றுத் தரப்படுகிறது. இது குறித்து சேம்பரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாலிங்கம் கூறுகையில், ‛டிவியில் கார்ட்டூன் வடிவில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுகிறது. இதை குழந்தைகள் மிகவும் விரும்பிக் கற்கின்றனர். எங்கள் பள்ளியில் 56 மாணவ, மாணவிகள் இதைக் கற்று வருகின்றனர். இதனால் அவர்களின் ஆங்கில அறிவு சற்று மேம்பட்டுள்ளது’ என சந்தோஷமாக கூறினார்.