கடலுக்கு அடியில் நெருப்புக்குழி!

ஆழ்கடல் அதிசயங்கள்!
கடலுக்கு அடியில் நெருப்புக்குழி!

ல்லோருக்கும் அட்லான்டிக் கடல் தெரியும். கொலம்பஸ் இந்தக் கடல் வழியே பயணம் மேற்கொண்ட போதுதான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

கொலம்பஸின் அந்தப் பயணத்துக்குப் பிறகு, கடந்த சுமார் 500 ஆண்டுகளில் அக்கடலின் அகலம் அதிகரித் துள்ளது. இன்னமும் அது ஆண்டுக்கு சுமார் ஐந்து சென்டிமீட்டர் வீதம் அகன்று வருகிறது.  

அட்லான்டிக்கின் அகலம் அதிகரித்துக் கொண்டே போனால் பூமியின் சுற்றளவு அதிகரிக்காதா, பூமியின் வடிவம் பெருத்துக் கொண்டே போகாதா என்று கேட்கலாம்.

அட்லான்டிக்கின் அகலம் அதிகரிக்கின்ற அதே வேளையில் பசிஃபிக் கடலின் அகலம் குறைந்து வருகிறது. ஆகவே பூமியின் பரப்பளவு மாறுவதில்லை.

அட்லான்டிக்கின் அகலம் அதிகரிக்கக் காரணம் உள்ளது. பூமியின் மேற்புறம் பல துண்டங்களால் ஆனது. நீங்கள் ஆரஞ்சுப் பழத்தின் தோலை உரிக்கிறீர்கள். தனித்தனியான எட்டு அல்லது பத்து தோல் துண்டுகள் கிடைக்கின்றன. மிகக் கவனமாக அந்தத் தோல்களை மறுபடி ஆரஞ்சுப் பழத்தின் மீது பொருத்துகிறீர்கள். தோல் துண்டுகள் அனைத்தும் ஆரஞ்சுப் பழத்தை முற்றிலுமாக மூடிக் கொள்கின்றன. இப்போது ஆரஞ்சுப் பழத்தைப் பல தோல் துண்டுகள் போர்த்தியுள்ளன.

பூமியானது இவ்விதம் பல பாறைத் துண்டங்களால் போர்த்தப்பட்டதாக அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் இதை பிளேட் என்று கூறுகின்றனர். இந்தத் துண்டங்கள் மீதுதான் கடல்களும், கண்டங்களும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. பூமியின் மீது எட்டு அல்லது பத்து பெரிய துண்டங்களும் மற்றும் பல சிறிய துண்டங்களும் உள்ளன. 

துண்டம் என்பது பல ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் மற்றும் அகலம் கொண்டதாகும். இதன் தடிமன் பல கிலோ மீட்டர் அளவுக்கு உள்ளது. வட அமெரிக்கத் துண்டம் மீது வட அமெரிக்கக் கண்டமும், அட்லான்டிக் கடலின் மேற்குப் பகுதியும் அமைந்துள்ளன. ஆப்பிரிக்கத் துண்டம் மீது ஆப்பிரிக்காவும் அதைச் சுற்றியுள்ள கடல்களும் அமைந்துள்ளன. இதேபோலத் தென் அமெரிக்கத் துண்டம், யுரேசியத் துண்டம், பசிஃபிக் துண்டம், ஆஸ்திரேலியத் துண்டம் ஆகியவை உள்ளன. இந்தியத் துண்டம் மீது இந்தியத் துணைக் கண்டமும், சுற்றியுள்ள கடல்களும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன.

இந்தத் துண்டங்கள் வெவ்வேறு திசையில் மெல்ல நகருகின்றன. வட அமெரிக்கத் துண்டமும், தென் அமெரிக்கத் துண்டமும் மேற்கு நோக்கி நகருகின்றன. ஆப்பிரிக்கத் துண்டம் கிழக்கு நோக்கி நகருகிறது. இதன் விளைவாகவே அட்லான்டிக் கடல் அகன்று வருகிறது. துண்டங்கள் நகருவதால் கண்டங்களும் நகருகின்றன. இது கண்டப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் இரு பெரும் கண்டங்களே இருந்தன. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்டிகா, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை ஒரே கண்டமாகச் சேர்ந்து இருந்தன. இது பூமியில் தென் பகுதியில் இருந்தது. அதே போல வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா முதலியவை ஒன்று சேர்ந்து இருந்தன. பின்னர் இவை விலகிப் போக ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் இந்தியா வடக்கு நோக்கி மெல்ல நகர்ந்து ஆசியாவின் தென் பகுதியில் ஒட்டிக் கொண்டது. இந்தியா இன்னமும் மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்தியா வடக்கு நோக்கி நகர்ந்த போது, ஆஸ்தி ரேலியா தென் கிழக்கு நோக்கி நகர்ந்தது. அன்டார்டிகாவும் அதேபோலத் தெற்கு நோக்கி நகர்ந்தது. ஆப்பிரிக்காவின் மேற்குப் புறத்தில் ஒட்டிக் கொண்டிருந்த தென் அமெரிக்கா மேற்கு நோக்கி நகர்ந்தது.

வட அமெரிக்கக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டிருந்த கண்டங்களும் இடம் பெயர்ந்தன.

இதையும் படியுங்கள்:
கரகாட்டம் பார்த்திருக்கிறீர்களா?
கடலுக்கு அடியில் நெருப்புக்குழி!

நாம் மேலே குறிப்பிட்ட துண்டங்களின் விளிம்புகள் சந்திக்கும் இடங்களில் - ஒன்று அவை ஒன்றிலிருந்து மற்றொன்று விலகுகிறது - அல்லது ஒன்றோடு ஒன்று உரசிச் செல்கின்றன - அல்லது ஒன்றை ஒன்று நெருக்கு கின்றன - அல்லது ஒரு துண்டத்தின் விளிம்பு மற்றொன் றுக்கு அடியில் புதைந்து கொள்கிறது.

இந்தியத் துணைக் கண்டம் அமைந்த துண்டமும், ஆசியாத் துண்டமும் ஒன்றை ஒன்று நெருக்கிய போது விளிம்புகளில் அமைந்த நிலம் மேலே உயர ஆரம்பித்தது. இவ்விதமாகத்தான் இமயமலை தோன்றியது. இங்கு தொடர்ந்து நெருக்குதல் உள்ளதால்தான் இமயமலை அடிவாரத்தில் உள்ள மாநிலங்களில் அவ்வப்போது பூகம்பங்கள் ஏற்படுகின்றன.

பசிஃபிக் கடலைச் சுற்றியுள்ள இடங்களில் துண்டங்கள் புதைவது அதிகம் என்பதால் பசிஃபிக் கடலைச் சுற்றிலும் நெருப்பு வளையம் என்று சொல்லத் தக்க வகையில் பல எரிமலைகள் உள்ளன. பிரம்மாண்டமான பாறைத் துண்டங்கள் உள்ளே புதையும் போது அவை அரைபட்டு, மிகுந்த சூடேறி, நெருப்புக் குழம்பாக மாறுகின்றன. அந்த நெருப்புக் குழம்புதான் எரிமலைகள் வழியே வெளிப் படுகின்றன.

மறுபடி அட்லான்டிக் கடலுக்கே வருவோம். அட்லான்டிக் கடலின்  நடுவே வட கோடியிலிருந்து தென் கோடி வரை, கடலடித் தரையில் நீண்ட  மலைகள் உள்ளன. இவை துண்டங்கள் சந்திக்கும் இடமாகும். இந்த மலைகளில் பெரிய பள்ளத்தாக்குகள் உள்ளன. இவற்றை நீண்ட நெருப்புக் குழி என்றும் வர்ணிக்கலாம் இங்கு பூமிக்குள்ளிருந்து நெருப்புக் குழம்பு பிதுங்கி வெளியே வருகிறது. உள்ளிருந்து வந்ததும் இந்த நெருப்புக் குழம்பானது பாறைகளாகி விடுகிறது. இந்தப் பாறைகள், வட அமெரிக்கத் துண்டத்தை மேற்கு நோக்கியும், ஆப்பிரிக்கத் துண்டத்தைக் கிழக்கு நோக்கியும் தள்ளு கின்றன. அட்லான்டிக் கடலுக்கு அடியில் இவ்விதம் நிகழ்வதால் அந்தக் கடலின் அகலம் அதிகரிக்கிறது.

பூமியின் உட்புறத்தில் மிக மிக ஆழத்தில் நெருப்புக் குழம்பு பல சுழல்களாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தச் சுழல்கள், மேலும் கீழுமாக மெதுவாக நகருகின்றன. இதன் விளைவாக இவற்றின் மீது அமைந்த துண்டங்களும் நகருகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கண்டங்கள் இடம் பெயருகின்றன என்று 1912ஆம் ஆண்டிலேயே ஆல்ஃபிரெட் வெஜனர் என்ற நிபுணர் கருத்து வெளியிட்டார். ஆனால் அவரால் இக்கொள்கையை அறியவியல் ரீதியில் விளக்க இயலவில்லை. ஆகவே  அப்போது எல்லோரும் அவரை கேலி செய்தனர். பின்னர் கடல்கள் பற்றி - அதுவும் கடலடித் தரையில் உள்ள நிலை மைகளைப் பற்றி -  விரிவாக ஆராய்ந்த போதுதான் அவர் கூறியது சரியே என்பது தெரிய வந்தது.

கண்டப் பெயர்ச்சியின் ரகசியம் கடல்களுக்கு அடியில் பொதிந்துள்ளது என்பதைக் கனடா நாட்டு விஞ்ஞானி டூஸோ வில்சன் என்பவர் கண்டுபிடித்துக் கூறினார்.

உலகின் கடல்கள் பூமியின் மேற்பரப்பில் 71 சதவிகி தத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. உயிரினமே முதலில் கடல்களில்தான் தோன்றியதாகக் கருதப்படுகிறது. கடல்களின் உப்பு நீர் நமக்கு நேரடியாகப் பயன்படாமல் இருக்கலாம். ஆனால் கடல்களில் உள்ள நீர் ஆவியாகி மேகங்கள் வடிவில் நமக்கு மழையை அளிக்கின்றன. கடல்கள் நமக்கு மீன்கள், நண்டுகள், இறா, லாப்ஸ்டர் போன்றவற்றின் வடிவில் உணவையும் அளிக்கின்றன. கடல்கள் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொண்டுள்ள தாகக் கூற முடியாது. கடல்கள் பற்றி நிபுணர்கள் இன் னமும் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com