முதல் மாணவன்!

வரலாற்றுக் கதை!
முதல் மாணவன்!

சுருள் சுருளான தலைமுடி. அதைவிடவும் சுருள் சுருளான நீளமான தாடி. போர்வை போல் ஓர் அங்கியை மேலுக்குப் போர்த்தியிருப்பார். ஐயோ, கிட்டேயே போகமுடியாது. அதைக் கடைசியாக எப்போது துவைத்துப் போட்டாரோ தெரியாது. துவைத்தா, அதையெல்லாம் தூக்கித்தான் போட வேண்டும். இடது பக்கமாக நடந்துகொண்டே இருப்பார், திடீரென்று பாதை மாறி வலது பக்கமாக நடப்பார். சட்டென்று சாலையின் ஓரமாக அமர்ந்துகொள்வார். அப்படியே கண்களைமூடிப் படுத்துக்கொள்வார். ஐந்து நிமிடம்கூட ஆகியிருக்காது, சட்டென்று எழுந்து உற்சாகமாகச் சிரிப்பார். யாரைப் பார்த்து என்று கேட்கிறீர்களா, அது தெரியாது. அவராகவே சிரிப்பார். மீண்டும் நடப்பார். நட, நட என்று நடந்துகொண்டே இருப்பார். சாக்ரடீஸ், சாக்ரடீஸ் என்று இரண்டு முறை கத்தினால் அவர் ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம். பார்க்காமலும் போகலாம்.

இதையெல்லாம் நீ ஏன் பார்த்துக்கொண்டிருந்தாய் என்று கேட்பீர்கள். எனக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா? எனக்கு மட்டுமல்ல... என் நண்பர்களுக்கும்கூட அவர் ஒரு நல்ல வேடிக்கைப் பொருள். நாங்கள் மட்டு மல்ல வயதான பலரும்கூட அவரை விநோதமாகவே பார்ப்பார்கள். தூரத்திலிருந்து பார்ப்பார்களே தவிர பேசமாட்டார்கள்.

ஏன் என்றா கேட்கிறீர்கள்? இரண்டும் இரண்டும் நான்கு என்று சென்னால் ஏன் என்பார். வானம் நீலமாக இருக்கிறது என்றால் எதனால் என்பார். எனக்கு இசை பிடிக்கும் என்றால் இசை என்றால் என்ன என்பார். பிடிக்கும் என்றால் எதனால் என்பார். எனக்கு என்று சொல்கிறாயே அப்படியென்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா என்பார். நீங்களே சொல்லுங்கள். இப்படியெல்லாம் யாராவது தொணதொணவென்று கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அவரிடம் யார் போய்ப் பேசுவார்கள்? யார் பழகுவார்கள்? யார் நண்பர்களாக இருப்பார்கள்?

போன வாரம் சந்தையில் பணக்கார சீமான் ஒருவரிடம் அவர் அடித்த கூத்து தெரியும் அல்லவா? என் இரண்டு கண்ணால் அதை நான் கண்டேன். தான் பாட்டுக்குக் குதிரைமீது ஏறி அமர்ந்து வந்துகொண்டிருந்தார் அந்தச் சீமான். ஒவ்வொரு கடையாக அவர் வலம் வந்துகொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் அவர் குதிரை கொஞ்சம் அதிகம் வேகம் எடுத்து ஓட... அங்கே தேங்கியிருந்த குட்டையில் இருந்த சேறு மேலே எகிற... அந்த நேரம் பார்த்தா சாக்ரடீஸ் வரவேண்டும்? அதிகம் இல்லை ஐயா... கொஞ்சம்போல் சேறு அவர்மீது தெளித்துவிட்டது.

அதுவும் அவர்மீது அல்ல. அந்தப் போர்வை மீது. அது எப்படிப்பட்ட போர்வை என்பதையும் நான் முன்பே சொல்லிவிட்டேன். இப்போது அவர்களுக்குள் நடைபெற்ற உரையாடலைக் கொஞ்சம் சுருக்கிக் கீழே தருகிறேன். சாக்ரடீஸைக் கண்டால் ஏதென்ஸ் ஏன் அலறி ஓடுகிறது என்பது உங்களுக்கே புரியும்.

சாக்ரடீஸ் : உன் குதிரையால் என் ஆடை சேறாகிவிட்டது. அதற்கு நீ நியாயப்படி வருத்தப்பட வேண்டும்.

சீமான் : நான் யார் என்று உனக்குத் தெரியுமா?

சாக்ரடீஸ் : ஓ, தெரியும். ஒரு தவறைச் செய்துவிட்டு அதற்கு வருந்தக்கூடத் தெரியாதவன்.

சீமான் : என்ன திமிர் இருந்தால் இப்படிப் பேசுவாய்?

சாக்ரடீஸ் : தவறைச் சுட்டிக்காட்டுவது திமிரா அல்லது வருந்தாமல் இருப்பது திமிரா?

சீமான் : நீயும் உன்னுடைய போர்வையும்! அதன் மீது சேறு பட்டதற்கு மன்னிப்பு வேறு ஒரு கேடா?

சாக்ரடீஸ் : உன்னுடைய ஆடைக்கும் என்னுடைய ஆடைக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசத்தை நீ கண்டுவிட்டாய்?

சீமான் : (சிரித்தபடி) நீ அணிந்திருப்பது ஆடையே அல்ல. அழுக்குக் கிழிசல்.

சாக்ரடீஸ் : உன்னுடையது வெண்மை. என்னுடை யது பழுப்பு. உன்னுடையது கிழியவில்லை. என்னு டையது கிழிந்திருக்கிறது. உன் ஆடையில் வாசம் இருக்கலாம். என்னுடையதில் இல்லை. மற்றபடி நாம் இருவரும் மனிதர்கள். இருவரும் அவரவர் ஆடைகளை அணிந்திருக்கிறோம். அவரவர் வழியில் சென்றுகொண்டிருக்கிறோம். இல்லையா?

சீமான் : (கோபத்துடன்) உன்னுடைய ஆடையும் என்னுடைய ஆடையும் ஒன்றா?

சாக்ரடீஸ் : அதிலென்ன சந்தேகம்? 

சீமான் : அப்படியானால் நீயும் நானும்கூட ஒன்றா?

சாக்ரடீஸ் : இல்லை. உன் தவறை நீ இன்னமும் உணரவில்லை என்பதால் நீயும் நானும் ஒன்றல்ல.

சீமான் : (கிண்டலுடன்) ஆ, என்னைவிட நீ உயர் வானவன் ஆகிவிட்டாயா?

சாக்ரடீஸ் : இல்லை. எப்போது நான் அப்படி உணர்கிறேனோ அப்போது முதல் சேறு என்னுடன் ஒட்டிக்கொண்டுவிடும்.

சீமான் : இப்போது உனக்கு என்னதான் வேண்டும்?

சாக்ரடீஸ் : எனக்கு எதுவும் வேண்டாம். என் ஆடையில் படிந்துள்ள சேறு அதுவாகவே மறைந்துவிடும். நீ உன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டால் உனக்கு நல்லது. அவ்வளவுதான். இரண்டு கைகளையும் தட்டிக்கொண்டு தன் போர்வையின்மீது ஒட்டியிருந்த சேறை ஒரு தட்டு தட்டிவிட்டு நடக்கத் தொடங்கிவிட்டார். இவருடன் வாதம் புரிவதற்குப் பதில் மன்னிப்புக் கேட்டு விடலாம் என்று அந்தக் குதிரையேகூட நினைத்திருக்கலாம். மற்றபடி அந்தச் சீமான் மன்னிப்பு கேட்டாரா என்று தெரியவில்லை.

‘சாக்ரடீஸைக் கண்ட ஏதென்ஸைப் போல’ என்று ஒரு பேச்சு வழக்கு எப்படித் தோன்றியிருக்கும் என்று இப்போது புரிகிறது அல்லவா? இது நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். ஆரகிள் பார்க்கப் போயிருந்தோம். ஒருவேளை நீங்கள் கிரேக்கத்துக்குப் புதிது என்றால் ஆரகிள் பற்றித் தெரிந்திருக்க வாய்ப் பில்லை. ஒரு சிறிய மண்டபம். உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் கேட்கலாம். உள்ளிருந்து குரல் மட்டும் வரும். அதை ஆரகிள் என்று சொல்வார்கள். ஆரகிள் சொன்னால் எப்போதும் சரியாகத்தான் இருக்கும். கடவுளின் குரல் என்றும் ஆரகிளைச்சொல்வார்கள்.

எல்லோரும் போகிறார்கள் என்பதால் நானும் அன்று போயிருந்தேன். அரசர்கள், புலவர்கள், மேதைகள், ஆசிரியர்கள், அறிவாளிகள் என்று பலரும் திரண்டு வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கேட்டார். ஏதென்ஸில் இருப்பவர்களிலேயே சிறந்த புத்திசாலி யார்?

இருட்டான குகையிலிருந்து வருவதைப் போல் எதிரொலித்தது ஒரு குரல். ‘சாக்ரடீஸ்’!

அங்குள்ள அனைவருக்கும் அதிர்ச்சி. எனக்கு அதிர்ச்சியோடு சேர்த்து ஆச்சரியம். ஒருமுறைகூட தவறே செய்யாத ஆரகிள் ஏன் இந்த முறை சறுக்குகிறது? இங்கு திரண்டிருக்கும் இவ்வளவு பேரையும் விடச் சிறந்த வரா அந்தச் சண்டைக்கார, கோபக்கார, விதண்டாவாத அழுக்குத் தாத்தா?

ஏன் ஆரகிள் அப்படிச் சொன்னது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டையே வெடித்துவிடும் என்பதால் சாக்ரடீஸ் வீட்டுக்கே சென்றேன்.

நான் : ஆரகிள் ஏன் மற்றவர்களைவிட நீங்களே சிறந்தவர் என்று சொன்னது?

சாக்ரடீஸ் : (புன்னகைத்தபடி) எல்லாம் எனக்குத் தெரியும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். நான் அவ்வாறு என்றுமே நினைத்ததில்லை. எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான். எதுவுமே தெரியாது என்பதால் என்னால் தினமும் நிறையக் கற்றுக்கொள்ள முடிகிறது. எல்லாம் தெரிந்தவர்களால் எதுவுமே கற்க முடிவதில்லை.

அன்றே நான் சாக்ரடீஸின் மாணவனாகச் சேர்ந்துவிட்டேன். சரி, அவர் என்ன சொல்லிக் கொடுக்கிறார் என்று கேட்கிறீர்களா? ஒன்றுதான். கேள்வி கேள். அட இது சாதாரண விஷயம்தானே என்கிறீர்களா? இல்லை. நேற்றைய பாடத்தைச் சொன்னால் உங்களுக்கே புரியும்.

சாக்ரடீஸ் : நீ ஏன் உன் குருவாக என்னைத் தேர்ந்தெடுத்தாய்?

நான் : ஆரகிள் உங்களைச் சிறந்தவர் என்று சொன்னது. அதனால் உங்களிடம் சேர்ந்தேன்.

சாக்ரடீஸ் : ஆரகிள் சொன்னது சரி என்று உனக்கு எப்படித் தெரியும்?

நான் : அது...அது... ஆரகிள் சொன்னால் அது சரியாகத்தானே....

சாக்ரடீஸ் : அதெப்படி உனக்குத் தெரியும்?

நான் : (தடுமாறியடி) ஓ! இப்போது புரிகிறது. இனி ஆரகிள் சொல்வதை நான் நம்பமாட்டேன். என்ன? இத்தோடு முடிந்தது என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.

சாக்ரடீஸ் : ஆரகிளை நம்பக் கூடாது என்று ஏன் நினைக்கிறாய்?

நான் : யாரையும் நம்பக்கூடாது, எல்லாவற்றையும் கேள்வி கேள் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

சாக்ரடீஸ் : (அட்டகாசமாகப் புன்னகைத்தபடி) நான் சொன்னால் அதை உடனே கேட்கவேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்?

அவ்வளவுதான். இப்போது சொல்லுங்கள். இவரைவிடச் சிறந்தவர் ஏதென்ஸில், ஏன் இந்த உலகிலேயே இருக்கமுடியுமா?

அடுத்தமுறை நீங்கள் ஏதென்ஸ் வரும்போது

சொல்லுங்கள். சாக்ரடீஸிடம் உங்களையும் அறிமுகம் செய்துவைக்கிறேன். அவரை உங்களால் சந்திக்க முடியாமல் போய்விட்டால் என்னிடம் வாருங்கள், நான் உங்களை அவரிடம் அழைத்துச் செல்கிறேன். என் பெயர் பிளேட்டோ. சாக்ரடீஸின் முதல் மாணவன் என்று கேளுங்கள், போதும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com