தோழிகள்!

தோழிகள்!

தோழிகளிடம் என்னென்னவோ கதைகள் பேசிச் சிரித்துக்கொண்டே நடந்து வந்துகொண்டிருந்த ஜென்னி, பள்ளிக்கூடத்தின் வாசலருகே வந்ததும் பேச்சை நிறுத்திக்கொண்டாள். குரலில் இருந்த உற்சாகமும் ஓடி ஒளிந்துகொண்டது. பெர்லின், பாம்பே, மெட்ராஸ் என்று உலகின் எந்த மூலையில் இருந் தாலும் மாணவர்கள் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். விளையாட்டு, ஜாலி, கிண்டல், கேலி, மகிழ்ச்சி எல்லாம் பள்ளிக்கூடத்தை நெருங்கும்வரைதான்...

ஜென்னிக்குக் கூடுதலாக இன்னொரு கவலை. இன்று அவள் வகுப்புக்கு ஒரு புதிய ஆசிரியர் வரப்போகிறார். வரலாறு பாடங்கள் எடுக்க! வரலாறு என்றாலே உடல் நடுங்கும். வீட்டுப்பாடம், அது இது என்று பிழிந்து எடுத்தால்? நீட்டு கையை என்று அடி விளாசி எடுத்துவிட்டால்?

இரண்டாவது வரிசையில் உள்ள தன் இருக்கைக்குச் சென்று ஜென்னி அமர்வதற்கும் ஆசிரியர் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. சுவிட்ச் போட்டது போல அனைவரும் எழுந்து நின்றனர்.

“டியர் ஸ்டூடண்ட்ஸ்” என்று ஆங்கிலத்தில் சற்றே உரக்கக் குரல் கொடுத்தபடி உள்ளே நுழைந்தார் புதிய ஆசிரியர். கறுப்பு கோட், வெள்ளைச் சட்டை. கண்ணாடி போட்டிருந்தார். தலையில் பெரிய வழுக்கை. ஐம்பது வயதுக்கு மேல் ஆகியிருக்கும்.

உட்காருங்கள் என்று கூடச் சொல்லாமல் அவர் தன் மேஜையில் தாவி ஏறி அமர்ந்து, அனைவரையும் ஒருமுறை பார்வையிட்டார். ஒரு சிறு புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

“என் பெயர் டொமினிக். என்னைப் பற்றி நீங்கள்  என்னென்னவோ கற்பனைகள் செய்து வைத்திருப்பீர் கள். ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் நினைப்பதைப் போல நான் இருக்கமாட்டேன்.”

ஜென்னி நிம்மதியடைவதற்குள் அவர் தொடர்ந்தார்.

“இதுவரை நீங்கள் பார்த்த ஆசிரியர்களைவிட நான் அதிகக் கண்டிப்பானவன். ஒழுக்கத்தை மீறுபவர்கள்மீது நான் இரக்கமே காட்டமாட்டேன். என்னைப் பற்றி இந்த அறிமுகம் போதும் என்று நினைக்கிறன். இனி நீங்கள் உட்காரலாம்.”

“அடடா! எவ்வளவு பிரமாதமான ஆசிரியர்” என்று காதருகில் கிசுகிசுத்தாள் அருகில் அமர்ந்திருந்த ஆன். ஜென்னி அவளை ஒருமுறை முறைத்துவிட்டு மீண்டும் ஆசிரியரிடம் திரும்பினாள்.

“உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள். உங்கள் பெயர் என்ன? உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?”

முதல் பெஞ்சில் இருந்து தொடங்கியது. முதலில் டெய்ஸி. அடுத்து மேரி. பிறகு ராபர்ட். அடுத்தது ஆன்.

“என் பெயர் ஆன் ஃப்ராங்க். எனக்கு எழுதுவது பிடிக்கும்.”

அடுத்து ஜென்னி. “என் பெயர் ஜென்னி பிரவுன். நான் பியானோ கற்றுக்கொள்கிறேன்.”

அனைவருடைய அறிமுகங்களும் முடிந்ததும் வகுப்பறை மீண்டும் அமைதியானது. டொமினிக் மீண்டும் மேஜை மீது தாவி அமர்ந்தார்.

“இசை, ஓவியம், விளையாட்டு, நடனம் என்று உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருப்பதுபோல என்னுடைய விருப்பம் வரலாறு. இதைக்கூட ஒருவருக்குப் பிடிக்குமா என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் படிக்க ஆரம்பித்துவிட்டால் இதைவிட சுலபமான, இதைவிட உபயோ கமான இன்னொரு விஷயம் இல்லை என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.”

டொமினிக் மேஜை மீதிருந்து கீழே இறங்கி குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கினார்.

“ஆன் ஃப்ராங்க் எழுதும் டைரியைப் போன்றதுதான் வரலாறு. அதில் பல விஷயங்கள் பலரால் பதி வாகியுள்ளன. கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொண்டால் தான் இப்போது நம் முன்னால் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அப்போதுதான் எதிர்காலத் துக்கு நம்மால் தயாராக முடியும்.”

தன் பெயரை ஆசிரியர் சொல்லி விட்டதில் ஆனுக்கு ஒருவித பூரிப்பு. ஜென்னியைப் பார்த்துப்  புன்னகைத்துக்கொண்டாள். ஜென்னி பதிலுக்கு ஏதோ சொல்ல வரும்போது படாரென்று கதவைத் திறந்துகொண்டு ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. மொத்தம் பத்து பேர் இருந்தார்கள். பழுப்பு நிறச் சீருடை அணிந்திருந்த அவர்களை ஆன் உடனே அடையாளம் கண்டுகொண்டாள்.

“டொமினிக்கா?”  என்றான் ஒரு வீரன்.

“ஆமாம்”  என்றார் டொமினிக்.

“உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் எங்கள் ஃப்யூரர் பற்றிச் செய்தித்தாளில் தவறாக எழுதுவாய்?”

டொமினிக் பதில் எதுவும் சொல்வதற்குள் இன்னொரு வீரன் அவரை முரட்டுத்தனமாகப் பிடித்து கீழே தள்ளினான்.  இன்னொருவன் மேஜை மீதிருந்த புத்தகங்களை எடுத்து விசிறியெறிந்தான். தரையிலிருந்து எழுந்து நிற்க முயற்சி செய்த டொமினிக் வயிற்றின் மீது ஒருவன் ஓங்கிக் குத்தினான்.

ஒட்டுமொத்த வகுப்பறையும் அலறத் தொடங்கியது. சிலர் இருக்கையில் இருந்து எழுந்து ஓட முயற்சி செய்தனர். ஜென்னி ஆனின் கரங்களைப் பிடித்துக்கொண்டாள்.

டொமினிக் தன் வயிற்றைப் பிடித்தபடி தள்ளாடிக் கொண்டே எழுந்து நிற்க முயற்சி செய்தார்.

“உன் வேலை இன்றோடு பறிக்கப்பட்டுவிட்டது. இனி நீ யாருக்கும் பாடம் எடுக்கவேண்டியதில்லை” என்று ஒரு வீரன் கத்தினான்.

டொமினிக்கின் முகத்தில் அதிர்ச்சியும் வேதனையும் தெரிந்ததை ஜென்னி கவனித்தாள். அவரது நெற்றியில் சிவப்பாக ஒரு துளி ரத்தம்.

படாரென்று கதவை உதைத்து தள்ளியபடி அவர்கள் வெளியேறினார்கள்.

டொமினிக்கை நோக்கி ஆன் ஓடினாள். அவளைப் பின்தொடர்ந்து ஓடிய ஜென்னி கீழே விழுந்திருந்த மூக்குக்கண்ணாடியை எடுத்தாள்.  சுக்கல்நூறாக உடைந்திருக்கும் அந்தக் கண்ணாடியால் பயனில்லை.

“கவலைப்படாதீர்கள்!” என்று புன்னகை செய்தார் டொமினிக். கசங்கியிருந்த தன் சட்டையை அவர் சரிபடுத்திக்கொண்டார்.

“முதல் வகுப்பு எடுப்பதற்குள் நாஜிக்கள் விடை கொடுத்துவிட்டார்கள்!”

அப்படி அவர் சொன்னது ஜென்னியைப் பாதித்தது.

“சார் உங்கள் நெற்றியில் ரத்தம்..” என்றாள் ஆன்.

ஜென்னி தன் கைக்குட்டையை நீட்டினாள். டொமினிக் நெற்றியைக் கைக்குட் டையால் ஒற்றியெடுத்தார்.

“சார், நீங்கள் செய்தித்தாளில் என்ன எழுதினீர்கள்?’ என்றாள் ஜென்னி.

கீழே சிதறிக்கிடந்த புத்தகங்களை எடுத்து அடுக்கி மேஜையின் மீது வைத்தாள் ஆன்.

“ஹிட்லரால் ஜெர்மனிக்கு மட்டுமல்ல உலகத்துக்கே தீமைகள் ஏற்படப் போகின்றன. மக்களின் சுதந்தரத்தைக் கட்டுப்படுத்தும் நாஜிகளின் ஆட்சி முறியடிக்கப்படும் என்று எழுதினேன்.”

“நீங்கள் இனி எங்களுக்கு வகுப்புகள் எடுக்கமாட்டீர்களா?” என்றாள் ஆன்.

“அது முடியாது ஆன். என்னைப் பள்ளியில் இருந்து இந்நேரம் நீக்கியிருப்பார்கள்.”

டொமினிக் தன் புத்தகங்களை எடுத்துக்கொண்டார். மாணவர்களுக்குக் கையசைத்தார். வகுப்பறை யைவிட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினார்.

ஒரு முடிவுடன் ஜென்னியும் ஆனும் அவரைப் பின்தொடர்ந்து நடந்தனர்.

“எங்களுக்கு வேறு ஆசிரியர் வேண்டாம், நீங்கள்தான் வேண்டும்” என்றாள் ஆன்.

டொமினிக் மறுத்தார். “நாம் மிகவும் கடினமான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். என்னுடைய தொழில் வகுப்புகள் எடுப்பது மட்டு மல்ல. நான் ஒரு எழுத்தாளனும்கூட. நாஜிக்களை எதிர்த்து நிறையப் போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன். இனியும் போராடத்தான் போகிறேன். என்னுடன் வந்தால் உங்களுக்குப் பிரச்னை.”

“நீங்கள் யூதரா?” என்றாள் ஜென்னி.

டொமினிக் ஆச்சரியத்துடன், “ஆமாம்” என்றார்.

“ஹிட்லருக்கு யூதர்களைப் பிடிக்காது என்று சொல்வது உண்மையா? நாங்கள் இருவரும் யூதர்கள்தான்” என்றாள் ஆன்.

டொமினிக் ஆனின் கைகளைப் பிடித்துக்கொண்டார். “அப்படியானால் நீங்கள்  எச்சரிக்கையுடனும் தைரியமாகவும் இருக்கவேண்டும்.  எதிர்ப்புகளைக் கண்டு பயந்துவிடக் கூடாது.”

“ஹிட்லரை யாராலும் தோற்கடிக்க முடியாதா?” 

டொமினிக் உறுதியான குரலில் சொன்னார்: “உலகையே வெல்வேன் என்று சொன்ன பல மாவீரர்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். நாஜிக்களை விடவும் பலமான ராணுவங்கள் சரிந்துள்ளன. பெரிய பெரிய சாம்ராஜ்ஜியங்கள் மறைந்து போயுள்ளன. நிச்சயம் ஹிட்லர் ஒருநாள் தோற்கத்தான் போகிறார். அதுவரை நாம் நம்பிக்கையைத் தொலைக்கக் கூடாது.”

“இப்போது புரிகிறது, வரலாறு வாசிப்பது எவ்வளவு முக்கியமென்று! தயவுசெய்து எங்களுக்குப்  பாடங்கள் எடுக்கவேண்டும்” என்றாள் ஜென்னி.

“ஆமாம், தினமும் மாலை உங்கள் வீட்டுக்கு நாங்கள் வந்துவிடுகிறோம்” என்றாள் ஆன்.

“சரி, ஆனால் நான் மிகவும் கண்டிப்பானவன். பரவாயில்லையா?’ என்றார் டொமினிக்.

“ஓ, பரவாயில்லை” என்று இருவரும் ஒரே குரலில் பதிலளித்தார்கள்.

அவர்கள் விடைபெறும்போது டொமினிக் ஏதோ நினைவு வந்ததைப் போல அழைத்தார். “ஆன், இன்று உன் டைரியில் எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com