

காந்திஜி நினைவு நாளான இன்று, அவர் குழந்தைகள் மீது வைத்திருந்த பாசத்தைப் பறைசாற்றும் சில நெகிழ்ச்சியான சம்பவங்களை நினைவு கூர்வோமா?
காந்திஜி எங்கு சென்றாலும், சிறைக்குச் சென்றாலும் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளை மறக்கவே மாட்டார். அவர் எரவாடா சிறையில் இருந்தபோது, ஆசிரமக் குழந்தைகளுக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். குழந்தைகளும் ஆர்வத்துடன் பதில் கடிதம் எழுதுவார்கள்.
அப்போது ஷாமல் என்ற சிறுவனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது: "கடவுளை எப்படி வழிபடுவது?"
உடனே காந்திஜி, "அனைவருக்கும் சேவை செய்வதுதான் கடவுளை வழிபட மிகச் சிறந்த வழி" என்று இரண்டே வரிகளில் பதில் அனுப்பினார். இதைத் தொடர்ந்து ஷாமல் மீண்டும் ஒரு கடிதம் எழுதினான்:
"பாபுஜி, பகவத் கீதையில் அர்ஜுனன் கேட்ட ஒரு கேள்விக்குக் கிருஷ்ணர் பக்கம் பக்கமாகப் பதில் சொன்னார். ஆனால், நான் ஒரு பக்கம் முழுக்கக் கேள்வி கேட்டால், நீங்கள் மட்டும் ஏன் ஒரே வரியில் பதில் சொல்கிறீர்கள்? இது நியாயமா?"
இதைக் கண்டு ரசித்த காந்திஜி, அடுத்த நாளே பதில் எழுதினார்: "ஷாமல், உன் கேள்வி நியாயமானதுதான். ஆனால், அந்தக் காலக் கிருஷ்ணனுக்கு ஒரே ஒரு அர்ஜுனன் தான் இருந்தான். எனக்கோ உன்னைப் போல் ஏகப்பட்ட அர்ஜுனன்கள் இருக்கிறார்கள்! அத்தனை பேருக்கும் பதில் சொல்ல என் உடலில் அவ்வளவு சக்தி இல்லை. அதனால்தான் சுருக்கமாக பதில் சொல்கிறேன்!" என்று குறும்பாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஒருமுறை பம்பாயில் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க காந்திஜி சென்றிருந்தார். அவசர அவசரமாகப் புறப்பட்டபோது, தனது மேஜை மீதிருந்த ஒரு பென்சிலைத் தேடினார். தரையிலும் மேஜை அடியிலும் தேடுவதைக் கண்ட காக்கா காலேல்கர், "பாபுஜி, எதைத் தேடுகிறீர்கள்?" எனக் கேட்டார்.
பென்சிலைத் தேடுவதை அறிந்த காலேல்கர், தன்னிடம் இருந்த புதிய பென்சிலை நீட்டி, "நேரம் ஆகிறது, இதை வைத்துக்கொள்ளுங்கள்" என்றார். ஆனால் காந்திஜி அதை மறுத்துவிட்டு, தனது வேட்டி மடிப்பில் ஒளிந்திருந்த அந்தச் சிறிய இரண்டு அங்குலப் பென்சிலைக் கண்டுபிடித்து எடுத்தார்.
ஆச்சரியப்பட்ட காலேல்கர், "இந்தச் சிறிய பென்சிலுக்காகவா இவ்வளவு நேரம் தேடினீர்கள்?" எனக் கேட்டார். அதற்கு காந்திஜி அன்புடன் சொன்னார்: "இந்த பென்சிலைச் சென்னையில் நடேசன் என்பவரின் சிறு பிள்ளை எனக்குப் பரிசாக அளித்தான். அந்தக் குழந்தையின் அன்பின் அடையாளமாக இதை நான் பாதுகாத்து வருகிறேன்."
காந்தியடிகளின் மேஜையில் எப்போதும் மூன்று குரங்கு பொம்மைகள் இருக்கும். சீன நண்பர் ஒருவர் கொடுத்த அந்தப் பொம்மைகளை அவர் தன் "குரு" என்று அழைப்பார். அதன் தத்துவங்களை அவர் இவ்வாறு விளக்கினார்:
முதல் குரங்கு (வாயைப் பொத்தியபடி): ஒருபோதும் பொய் பேசாதே, எவரையும் பழித்துப் பேசாதே.
இரண்டாவது குரங்கு (கண்களைப் பொத்தியபடி): தீயவற்றைப் பார்க்காதே.
மூன்றாவது குரங்கு (காதுகளைப் பொத்தியபடி): தீய சொற்களைக் கேட்காதே.
"தீயவற்றைக் கேட்பது மனிதனின் மன அமைதியைக் குலைக்கும். இந்தத் தத்துவங்கள் மனித சமூகத்தை முன்னேற்ற உதவும். இந்த பொம்மைகள் நான் செல்லும் இடமெல்லாம் எனக்குப் பாடம் கற்பிக்கின்றன" என்றார் காந்திஜி.