கைம்மணளவையும்விட அதிகமாகக் கற்றுத் தேர்ந்துவிட துடிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தென்னிந்தியாவைச் சேர்ந்த ஸி. ராதாகிருஷ்ண ராவ், அவர்களில் ஓர் எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம்.
இன்றைய கர்நாடக மாநிலத்தின் விஜயநகரம் பகுதியைச் சேர்ந்த ஹுவினா ஹடகாலி என்ற கிராமத்தில் 1920ம் ஆண்டு பிறந்தவர் ஸி. ராதாகிருஷ்ண ராவ். தற்போதைய ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பள்ளிப் படிப்பை முடித்த ராவ், ஆந்திர பல்கலைகழகத்தில் கணிதப் பிரிவில் முதுநிலை பட்டம் (M.Sc), அடுத்து கல்கத்தா பல்கலைக்கழகத்தில் (1943ல்) புள்ளிவிவர இயல் பாடத்தில் முதுநிலை (MA) பட்டம், இதையடுத்து 1948ம் ஆண்டு இங்கிலாந்து கேம்பிரிட்ஜிலுள்ள கிங்ஸ் கல்லூரியில் புள்ளியியல் ஆராய்ச்சிக்காக முனைவர் (Ph.D) தகுதி பெற்றார். கூடவே டாக்டரேட் இன் சயன்ஸ் (D.Sc.) என்றும் உயர் தகுதி அடைந்தார்.
இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பள்ளியின் தலைவர், அடுத்து இயக்குநர் ஆகிய பதவிகளை வகித்தார். இவர் உருவாக்கிய திட்டங்கள் மூலமாக கணிதத் துறையில் பல மேதைகள் தோன்றினார்கள். அவருடைய பரிந்துரையின் பேரில் ஆசிய புள்ளியியல் நிறுவனம் (Asian Statistics Institute), ஜப்பானிய டோக்கியோ நகரில் நிறுவப்பட்டது.
‘கிராமர்-ராவ் பிணைப்பு‘, ‘ராவ்-பிளாக்வெல் தேற்றம்‘ என்பன போன்ற கணிதம், புள்ளியியல் துறைகளில் பல புது இலக்கணங்களை இவர் உருவாக்கினார்.19 நாடுகளின் பல்கலை கழகங்களிலிருந்து 38 கௌரவ முனைவர் பட்டங்களையும், ஏராளமான விருதுகளையும், பதக்கங்களையும் பெற்றார். இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இத்தாலி நாடுகளில் உள்ள எட்டு தேசிய அகாதமிகளில் உறுப்பினராகவும் திகழ்ந்தார்.
2002ம் ஆண்டில் அறிவியல், ஆராய்ச்சி துறைகளில் வாழ்நாள் சாதனையாளர் விருதான யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் மெடல் ஆஃப் சயன்ஸ் விருதைப் பெற்றது ஒரு கல்வியாளரின் உச்ச பட்ச சாதனை என்றே சொல்லலாம். அதேபோல 2010ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய கௌரவமான இந்திய அறிவியல் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் சர்வதேச புள்ளியியல் நிறுவனம், கணித புள்ளியியல் நிறுவனம் மற்றும் பயோமெட்ரிக் சங்கத்தின் தலைவராகவும் திகழ்ந்தார், ராவ். இவருடைய அரிய பங்களிப்பிற்காக இந்திய தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கான தேசிய நிறுவனத்தின் சென்னை கிளையில் ‘ஹால் ஆஃப் ஃபேம்‘ காலரியில் சேர்க்கப்பட்டார்.
இந்தியப் பணியிலிருந்து தன் 60வது வயதில் ஓய்வு பெற்ற ராவ், அமெரிக்காவில் வசிக்கும் தன் மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டார். அங்கேயும் தன் கல்வித் தாகத்துக்கு நீர் வார்த்துக் கொண்டார் அவர். ஆமாம், 62வது வயதில், பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தில் புள்ளியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 70வது வயதில் பென்ஸில்வேனியா பல்கலைகழகத்தின் துறைத்தலைவராகப் பொறுப்பேற்றார். 75வது வயதில் இவருக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைத்தது. இவரது கணித, புள்ளியியல் ஆற்றலுக்காக அமெரிக்க வெள்ளை மாளிகையின் அங்கீகாரம் கிடைத்தபோது அவருக்கு 82 வயது!
இதற்கிடையில் இந்தியாவின் பத்ம பூஷன் (1968 – பிரதமர் இந்திரா காந்தி வழங்கியது) மற்றும் பத்ம விபூஷன் (2001) பட்டங்களும் இவரை வந்தடைந்து தாம் பெருமை கொண்டன.
நிறைவாக, புள்ளியியல் துறையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசும் பெற்றார் ராதாகிருஷ்ண ராவ். அப்போது அவருக்கு வயது என்ன தெரியுமா? 102! நல்ல உடல்நிலையில், சென்ற ஆண்டு, நேரில் சென்று அந்த விருதைப் பெற்று வந்தார் இவர்!
ஆனால், ‘போதும், இனி உனக்குக் கொடுக்க விருது எதுவும் இந்த உலகத்தில் இல்லை‘ என்று சொல்வதுபோல காலன், இவரை அதே 2023ம் ஆண்டு தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான்!
தோன்றின் புகழொடு தோன்றும் வாய்ப்புப் பலருக்குக் கிட்டியிருக்கலாம். ஆனால் மறையும்வரை புகழோடு திகழ்வது என்பது ஒருசிலருக்குதான் சாத்தியமாகியிருக்கிறது.
அவர்களில் ஒருவர் ஸி. ராதாகிருஷ்ண ராவ்.