வழி விடு மனிதா - இப்படிக்கு பாம்பு!

Snakes
Snakes
Published on

பாம்பைக் கண்டாலே அஞ்சி நடுங்கும் நாம், என்றும் அதன் இடத்தில் இருந்து சிந்தித்துப் பார்ப்பதில்லை. பாம்புகள் மனிதர்களிடம் பேசினால் என்ன பேசும் என்பதன் கற்பனைப் பதிவு தான் இது.

வணக்கம் மனிதர்களே! நான் உங்கள் பாம்பு பேசுகிறேன். நீண்ட நாட்களாகவே உங்களிடம் கேட்பதற்காக, சில சந்தேகங்கள் என் மனதில் உள்ளன. இன்று அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி நான் சொல்வதைக் கேளுங்கள்!

நாங்கள் ஊர்வன வகையைச் சேர்ந்த ஓர் உயிரினம். முதுகெலும்புள்ள நீளமான உடலும், சிறு தலையும் கொண்டுள்ளோம். எங்களுக்கு கால்கள் இல்லை; எனினும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகருவோம். உலகத்தில் ஏறக்குறைய 3,600 வகையான பாம்பினங்களாக உள்ளோம். எங்களில், இராஜநாகப் பாம்பு தான் மிகப் பெரியது. அதே நேரம் கூடுகட்டி வாழும் ஒரே பாம்பு. சுற்றுப்புறத்தின் வாசனையை அறிந்து கொள்ளத் தான் நாங்கள் நாக்கினை வெளியே நீட்டுகிறோம். எங்களின் பற்கள் உள்நோக்கி வளைந்திருப்பதால், நாங்கள் இரையைப் பிடித்தால், அது ஒருபோதும் தப்பாது.

மனிதர்களிடையே எங்களைப் பற்றி நிலவும் ஓர் பழமொழி, 'பாம்பென்றால் படையும் நடுங்கும்'. ஆம், அது உண்மைதான், நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், மற்றுமொரு உண்மை இங்கே மறைக்கப்பட்டுள்ளது. மனிதர்களைக் கண்டால் நாங்களும் தான் அஞ்சி நடுங்குகின்றோம். மனிதர்களின் கண்களில் அகப்பட்டு விட்டால், ஓடி ஒளிந்து கொள்கிறோம். நீங்கள், எங்களைக் கண்டு அஞ்சி, உடனே கையில் மரக்கொம்பு எடுத்து, தேடி கண்டுபிடித்து அடித்துக் கொல்கிறீர்கள். இருவருமே பயம் கொள்கிறாம். ஆனால் தண்டனை மட்டும் எங்களுக்கு. இது எந்த விதத்தில் நியாயம்?

எங்களிடம் விஷத் தன்மை இருப்பதால் தான் மனிதர்கள் பயம் கொள்கிறார்கள் என்றாலும் இழப்பு எங்களுக்கே அதிகம். நாங்கள் கடித்ததால் பாதிக்கப்பட்ட அல்லது இறந்த மனிதர்களின் எண்ணிக்கையை விட, மனிதர்களால் கொல்லப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கையே பல மடங்கு அதிகம். இரை தேடி வரும் பாம்புகளைக் கண்டாலே, கடித்து விடும் என்ற பயத்தில் அல்லவா எங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இது போதாதென்று, தோலுக்காகவும் நாங்கள் கொல்லப்படுகிறோம்.

நாக சதுர்த்தி தினத்தன்று மட்டும் பாம்புப் புற்றினைத் தேடி வந்து, பால் மற்றும் முட்டையை வைத்து தெய்வமாக வழிபடுவது, எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அன்றைய தினம் மட்டும் எங்களைக் கண்டால் பயம் வரவில்லையா உங்களுக்கு? தினந்தினம் நாகசதுர்த்தியாக இருந்து விடக் கூடாதா என்ற ஆசை எங்களுக்குத் தோன்றுகிறது. பாம்புகளைக் கண்டவுடன் மனிதர்களுக்கு எப்போதும் தெய்வ ஞாபகம் வந்து விட்டால், பாம்புகளின் உயிர் தப்புமல்லவா!

இதையும் படியுங்கள்:
பாம்பு பழிவாங்கும் என்பது உண்மையா? அறிவியல் சொல்வது என்ன?
Snakes

மனிதர்களாகிய உங்களிடம், பாம்புகளாகிய நாங்கள் வேண்டிக் கொள்வது ஒன்றே ஒன்று தான். இரை தேடி வரும் எங்களைக் கண்டால், அடிக்க நினைக்காமல் வழி விடுங்கள். மனிதர்களுக்கு இடையூறு செய்யாமல் விலகிச் செல்கிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com