
பன்னெடுங்காலமாகவே காசி புகழ் வாய்ந்த மாநகரமாகத் திகழ்ந்து வருகிறது. அங்கு மிகப் பழமையான கோவில் ஒன்று உள்ளது. ஒரு நாள் விஸ்வநாதரைப் பூஜிக்கும் அர்ச்சகரின் கனவில் பகவான் விஸ்வநாதர் தோன்றி, கோவிலில் பண்டிதர்களையும் தர்மம் செய்பவர்களையும் கூட்டி ஒரு சபை ஏற்படுத்த வேண்டும் எனச் சொல்வதாகக் கண்டார். அர்ச்சகர் இதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்பினார். காசியிலுள்ள பண்டிதர்கள், சன்யாசிகள், புண்ணியாத்மாக்கள் என அனைவரையும் கோவிலுக்கு அழைத்தார். எல்லோரும் வந்தபின் அர்ச்சகர் தன் கனவைத் தெரிவித்தார். ஈசனுக்கு தீபாராதனை முடிந்ததும் மணி அடிக்கும் சப்தமும் நின்றது. அப்போது கோவிலில் திடீரென்று வெளிச்சம் தோன்றுவதை அனைவரும் பார்த்தனர். லிங்கத்தின் பக்கத்தில் ஒரு தங்க ஓலைத் தென்பட்டது. அதில் வைர எழுத்துக்களால், ‘அனைவரிலும் சிறந்த கொடையளிக்கும் புண்ணியம் செய்தவருக்கு இந்த ஓலை தரப்பட வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது.
நாட்டின் நான்கு பக்கமும், இந்தச் செய்தி பரவியது. வெகு தொலைவிலிருந்தும் விரதம் மேற்கொள்பவர்கள், கொடையாளிகள் காசிக்கு வரத் தொடங்கினர். ஒரு மனிதர் பல பள்ளிக்கூடங்கள், சேவை இல்லங்கள் என்று தன் சொத்து முழுவதையும் செலவிட்டார். அவர் பெயர் எங்கும் தெரியவந்தது. அவரும் தங்க ஓலை வாங்க வந்தார். அவர் கை அதில் பட்டதும் அது மண்ணாகிவிட்டது. அர்ச்சகர்
சொன்னார்: “நீங்கள் பட்டம், கீர்த்தி பெறும் ஆசையால் கொடையளித்தீர். பெயருக்கு ஆசைப்பட்டு செய்யும் கொடை உண்மையான கொடை அல்ல.”
பலரும் தங்க ஓலையைப் பெறுவதற்காகக் பல விதமான தான தர்மங்களைச் செய்தனர். யாருக்கும் தங்க ஓலை கிடைக்கவில்லை. ஒரு நாள் ஒரு முதிய குடியானவர் வெளியூரிலிருந்து வந்தார். அவர் விஸ்வநாதரை தரிசிக்க வந்திருந்தார். அவரிடம் துணியில் முடியப்பட்ட சில தின்பண்டங்களும் ஒரு கிழிந்த கம்பளமும் இருந்தன. கோவிலுக்குப் பக்கத்தில் தங்க ஓலைக்கு ஆசைப்பட்ட மக்கள் ஏழைகளுக்கு துணிகளும் உணவுகளும் கொடுத்து கொண்டிருந்தனர். ஒரு தொழுநோயாளி கோவிலிருந்து தொலைவில் இருந்தான். அவனால் எழுந்து செல்ல முடியவில்லை. அவன் உடல் முழுவதும் புண்களாயிருந்தன. அவன் பசியோடிருந்தான். ஆனால் யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்ல. குடியானவருக்குத் தொழுநோயாளி யிடம் இரக்கம் ஏற்பட்டது. தன்னிடமிருந்த தின்பண்டங்களை அவனுக்குக் கொடுத்தார். கம்பளியை அவன் மேல் போர்த்தினார். பிறகு அங்கிருந்து கோவிலுக்குள் சென்றார்.
ஆலயம் வருகின்ற பக்தர்கள் அனைவரது கையிலும் ஒரு முறை அந்த ஓலையை கொடுக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார் அர்ச்சகர். குடியானவர் விஸ்வநாதரைத் தரிசித்து வெளியே வந்ததும், அர்ச்சகர் தங்க ஓலையை அவர் கையில் கொடுத்தார். குடியானவரின் கைபட்ட துமே அதிலுள்ள ரத்தினங்கள் இரு மடங்கு ஒளிரத் தொடங்கின. எல்லாரும் அவரைப் பாராட்டினார்கள்.
அர்ச்சகர் சொன்னார்: “இந்தத் தங்க ஓலையை விஸ்வநாதர் உனக்குக் கொடுத்துள்ளார். யார் பேராசையில்லாமல், பிரதிபலன் கருதாமல் கொடை தருகிறாரோ, துயருற்றவர்களுக்கு உதவுகிறாரோ அவரே அனைவரிலும் சிறந்த புண்ணியவான்.”
குடியானவர் புன்னகைத்தார். “ஐயா! எனக்கும் எனது குடும்பத்துக்கும் எந்தக் குறையும் இல்லாமல் ஆண்டவன் காப்பாற்றுகிறார். இந்த விலைமதிப்புமிக்க ஓலையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? இதனைக் கொண்டு தேவைப்படும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறிவிட்டு மெல்ல நடந்து போகலானார்!