அம்மாவுக்கு உதவி!

பிருந்தாவனக் கதையரங்கம்
அம்மாவுக்கு உதவி!
Published on
gokulam strip
gokulam strip

பாலன் தன் கையில் ஒரு கூடையுடன் மார்க்கெட்டிற்குக் காய்கறிகளை வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தான். வருத்தமாய்க் காணப்பட்ட பாலாவை அவனுடைய நண்பன் மணி வழியில் யதேச்சையாக சந்திக்க இருவரும் பேசிக்கொண்டு நடந்தனர்.

“பாலா! நீ ஏன் வருத்தமாய் இருக்கிறாய்?” என மணி கேட்டான்.

அதற்கு பாலன், “என் தாயார் ஒவ்வொரு சிறு வேலையையும் நானே செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறாள். இன்று காலை, படுக்கையை விட்டு எழுந்து என்னுடைய முகத்தைக் கழுவும் முன்னரே இன்று சாப்பாட்டிற்கு வேண்டிய காய்களை வாங்கி வரும்படி சொல்லிவிட்டாள். அதனால்தான் வருத்தமாய் இருக்கிறேன்” எனக் கூறினான்.

மணி, “அது சரி, நீ எப்பொழுது எழுந்திருந்தாய்?” எனக் கேட்டான்.

“வழக்கம்போல ஏழு மணிக்கு” என பாலன் கூறினான்.

“உன்னுடைய அம்மா எப்பொழுது எழுந்திருந்தார்கள்?”

“எனக்குத் தெரியாது. ஆனால், காலையில் வெகு சீக்கிரமாக எழுந்து எல்லோரையும் தொந்தரவு செய்து விடுகிறாள்.”

“காலையில் உனக்கு எப்படிக் காப்பி கிடைக்கிறது?”

“ஏன்? நான் காலையில் எழுந்திருக்கும்போதே என் அம்மா தயாராகக் காப்பியைச் சூடாக வைத்திருப்பார்களே.”

“உன்னுடைய தம்பி, தங்கையை யார் கவனித்துக் கொள்கிறார்கள்?”

“என்னுடைய அம்மாதான்! வேறு யார் அவர்களைக் கவனிப்பார்கள்?”

“உன்னுடைய அம்மா, உன் தம்பி, தங்கையைக் கவனித்துக் கொள்வார்கள். அப்படியானால் சமையலை யார் செய்வார்கள்?”

“அதையும் என் அம்மாதான் செய்கிறார்கள். ஆனால், அவள் மெதுவாகச் செய்வதால் சில நாட்களில் நான் பள்ளிக்கு லேட்டாக வருகிறேன்.”

“உண்மைதான். நீ காய்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு 8.30 மணிக்குச் சென்றால், உன் அம்மா எப்படி 9.00 மணிக்குள் உங்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்க முடியும்?”

இதைக் கேட்ட பாலன் பதில் கூற முடியாமல் மெளனம் சாதித்தான். பாலனுடைய மெளனத்தைக் கண்டு, மணி பின்வருமாறு கூறினான். “பாலா! நீ எப்பொழுதும் உன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறாய். உன் அம்மா, வீட்டு வேலைகளை எல்லாம் செய்கிறார்கள் என்பதை நீ மறந்து விடுகிறாய். உன்னால் முடிந்தவைகளைக் கூட நீ அம்மாவுக்கு உதவியாகச் செய்வது இல்லை. அப்படி இருந்தும் நீ சொல்வதுபோல் உன்னைப் பற்றி உன் அம்மா குறை கூறுவதே இல்லையே. இதை எண்ணிப் பார்த்தாயா?”

பாலன் அவனுடைய பேச்சைக் கேட்டு, தன் தவறை ஒப்புக்கொண்டாள். அன்றிலிருந்து அவன் அம்மா சொல்லும் வேலைகளைச் சந்தோசமாகச் செய்வதாக மணியிடம் உறுதி கூறினான். அவ்வாறே செய்தும் வந்தான்.

-சு. சிவகுமார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com