
ஹாய் குட்டீஸ்...
நாம் தினசரி உபயோகப்படுத்தும் ஒரு பொருள் தான் டூத் பிரஷ். நம் அன்றாட காலை பணிகளில் முக்கியமான ஒன்று பல் துலக்குதல். உடலை எந்த அளவு சுத்தம் செய்கிறோமோ, அதே அளவு பற்களை சுத்தம் செய்வது அவசியமாகும்.
நாம் நம் இஷ்டத்திற்கு சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். அது அனைத்துமே பற்களில் தான் கரையாகவும், அழுக்காகவும் சேரும். இதை விடிந்ததும் சுத்தம் செய்வது அவசியமாகும்.
பலருக்கும் பல்துலக்காமல் பால், டீ, காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இது முற்றிலும் தவறானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏனென்றால் வாயில் கிருமிகள் இருக்கும் போது இவ்வாறு செய்தால் வயிற்றில் சென்று அந்த கிருமிகள் பிரச்சனைகளை உண்டு பண்ண வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தினசரி பல்துலக்க முந்தைய காலங்களில் வேப்பங்குச்சியை பயன்படுத்துவார்கள். பிறகு கையை வைத்து பற்களை துலக்குவார்கள். வேப்பங்குச்சிகள் எல்லாம் ஒரு முறை பயன்படுத்தக்கூடியவை. ஆனால் நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் டூத் பிரஷ் என்பதை எத்தனை முறை கழுவினாலும், அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அப்படியே தான் இருக்கும்.
இப்படி இருக்கையில் நீங்கள் உங்களது டூத் பிரஷை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுகிறீர்கள்? அதுவும் குறிப்பாக நமக்கு சளி, இருமல் போன்றவை இருந்தால் அதே டூத் பிரஷை அப்படியே பயன்படுத்தலாமா? இது போன்ற கேள்விகளுக்கு இங்கே பதிலை காணலாம்.
உங்களுக்கு சளி பிடித்திருக்கும் பொழுது நீங்கள் பிற தொற்றுகளுக்கு மிக எளிதாக ஆளாகலாம். எனவே ஒரு குறிப்பிட்ட நாள் இடைவெளியில் டூத் பிரஷில் நிச்சயமாக அதிக அளவு நுண்ணுயிரிகள் காணப்படும். அவை பார்ப்பதற்கு சுத்தமாக தோன்றினாலும் அவற்றில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். ஆகவே ஒவ்வொரு 2 மாதங்களுக்கு ஒரு முறை டூத் பிரஷை மாற்றுவது அவசியம்.
டூத் பிரஷை பயன்படுத்திய பிறகு வெறுமனே தண்ணீரில் கழுவுவது அவற்றில் உள்ள கிருமிகள் அனைத்தையும் அகற்றி விடுவதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. டூத் பிரஷை கிருமி நீக்கம் செய்வது அவசியம். அதற்கு டூத் பிரஷ் பிரஷ்களை நீங்கள் ஆன்டி பாக்டீரியல் மவுத் வாஷில் ஒரு சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். மாறாக பாக்டீரியாக்கள் குவிந்திருப்பதை தடுப்பதற்கு சுடு தண்ணீர் அல்லது ஹைட்ரஜன் பெராக்ஸைடிலும் வைக்கலாம். இது கிருமிகளை அகற்ற உதவும். இப்படி பயன்படுத்தினாலும் கூட நீங்கள் அடிக்கடி டூத் பிரஷை மாற்றுவது அவசியமாகும்.