

பீர்பால் தன்னால் இயன்றவரை சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு உதவி செய்பவர். அவ்வாறு செய்வதற்குப் பேரரசர் அக்பரின் மனதைப் புண்படுத்தாமல், தன்னுடைய கருத்தைச் சொல்லி அவர் மனதை மாற்றுவதில் வல்லவர்.
ஒருமுறை போரில், தன்னுடைய வாழ்வாதாரமாக இருந்த ஒரே மகனை இழந்த தாய் ஒருத்தி, பீர்பாலைச் சந்தித்து உதவி கேட்டாள். அவளிடம் இருந்த ஒரே சொத்து, அவள் மகன் பயன்படுத்திய அந்தத் துருப்பிடித்த இரும்பு வாள் மட்டுமே.
அவளின் நிலைக் கண்டு பரிதாபம் கொண்ட பீர்பால், அந்த மூதாட்டியை அடுத்த நாள் அரசவைக்கு அந்த உடைவாளுடன் வந்து அரசரைச் சந்திக்கும்படி கூறினார். அப்போது என்ன பேச வேண்டும் என்பதையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தார்.
மறுநாள் அரசவைக்கு வந்த அந்தப் பெண்மணி அக்பரிடம், “அரசே! இந்தப் போர்வாள் இறந்த என் மகனுடையது. இது என்னிடம் இருப்பதால் எந்தப் பயனுமில்லை. ஆகவே, இதனை அரசிடமே கொடுத்துவிடலாம் என்று கொண்டு வந்தேன்,” என்றாள்.
வாளைக் கையில் வாங்கிக் கொண்ட அக்பர், அது துருப்பிடித்திருப்பதையும், இனி போரில் பயன்படுத்த முடியாது என்பதையும் உணர்ந்தார். உடனே அரண்மனை அதிகாரியை அழைத்த அவர், அந்த வாளைப் பெற்றுக்கொண்டு, மூதாட்டிக்கு ஐந்து பொற்காசுகள் வழங்கும்படி கட்டளையிட்டார்.
ஆனால், அந்தப் பெண்மணியின் வறுமை நீங்க அந்தத் தொகை போதாது என்று கருதிய பீர்பால், அவளுக்கு எப்படியாவது உதவ முடிவு செய்தார். அவர் அரசரிடம், “மன்னா! அந்த வாளை என்னிடம் கொடுங்கள், நான் ஒருமுறை பார்த்துவிட்டுத் தருகிறேன்,” என்றார்.
வாளை வாங்கிக் கொண்ட பீர்பால், அதனைப் பலமுறை முன்னும் பின்னும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த அக்பர், “என்ன பீர்பால்? அந்த வாளில் அப்படி என்ன இருக்கிறது? அதை ஏன் இவ்வளவு தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.
பீர்பால் புன்னகையுடன், “மன்னா! 'பரஸ்' என்ற ரசவாதக் கல்லைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் கல் இரும்பைத் தங்கமாக மாற்றும் சக்தி கொண்டதாம். அந்த ரசவாதக் கல்லை விடவும் உங்கள் கரங்கள் மேன்மையானவை. அப்படியிருக்க, உங்கள் கரம் பட்ட பிறகும் இந்த இரும்பு வாள் ஏன் இன்னும் தங்கமாக மாறவில்லை என்ற ஆச்சரியத்தில்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!” என்றார்.
அக்பர் புத்திசாலி. அந்த மூதாட்டிக்குத் தான் அளித்த வெகுமதி மிகக் குறைவு என்பதை பீர்பால் நாசூக்காக உணர்த்துகிறார் என்பதைப் புரிந்து கொண்டார். உடனே அதிகாரியை அழைத்து, “அந்த இரும்பு வாளின் எடைக்கு நிகரான தங்கக் காசுகளை இந்த ஏழை மூதாட்டிக்கு வழங்குங்கள்!” எனப் புதிய கட்டளை பிறப்பித்தார்.