
விறகுவெட்டி ஒருவர் காட்டிலிருந்து விறகுச் சுமையோடு திரும்பிக்கொண்டிருந்தபோது வழியில் ஒரு பெரிய தாழியைக் கண்டார். அது பழங்காலத் தாழி என்றாலும் உடையாமல் சிதையாமல் நல்ல நிலையில் இருந்தது. அதை எடுத்துச் சென்றால் வீட்டில் தானியங்களும், மளிகைப் பொருள்களும் போட்டு வைப்பதற்கு உபயோகமாகும் என எண்ணிய அவர் அதை எடுத்துச் செல்ல வழி பார்த்தார்.
அது ஆள் உயரம் உள்ள தாழி. ஏற்கனவே அவரிடம் தலையில் விறகுச் சுமையும், கையில் கோடரியும் இருந்தன. அதோடு இந்தத் தாழியையும் எடுத்துச் செல்ல இயலாது. அதனால் விறகுச் சுமையையும் கோடரியையும் தாழிக்குள் போட்டார். காட்டுக் கொடிகளால் தாழியைக் கட்டி, மறுமுனையைத் தன் இடுப்பில் கட்டிக்கொண்டு இழுத்து வந்தார். பாரம் அதிகமாக இருந்தது. எனினும் சிரமப்பட்டு இழுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.
“எங்கிருந்து இந்தப் பழைய தாழியை வாங்கி வருகிறீர்கள்?” மனைவி கேட்டாள்.
“இதை வாங்கி வரவில்லை. காட்டில் ஒரு இடத்தில் இது இருந்தது. நாம் உபயோகித்துக் கொள்ளலாம் என்று எடுத்து வந்தேன்.”