7 வகை கொக்குகளின் இனமும் இயல்பும் அறிவோம்!

கொக்கு ...
கொக்கு ...

கொக்கு பறக்கும் தன்மை கொண்ட நீர்ப்பறவை. மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்களை சாப்பிட்டு வாழும். ஆண் கொக்கு, தன் இணையை கவருவதற்காக ஆடும் நடனம், உலகப்புகழ் பெற்றது. சில வகை கொக்குகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

1. உண்ணிக்கொக்கு:

உண்ணிக்கொக்கு
உண்ணிக்கொக்கு

உண்ணிக்கொக்கு. இதை மாட்டுக்கொக்கு என்றும் அழைப்பர். இது மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகளின் ஊடே கூட்டமாக நின்று பறந்து செல்லும். அவற்றின் மேல் அமர்ந்து பூச்சிகளைப் பிடித்துத் தின்னும். காடுகளில் யானைகள் கூட்டத்தின் நடுவிலும் இவை நின்று பூச்சிகளை வேட்டையாடும். கால்நடைகள் மேல் இப்பறவைகள் சவாரி செய்வது மிக அழகு.

2. சிறு வெண் கொக்கு:

சிறு வெண் கொக்கு
சிறு வெண் கொக்கு

கொக்கு இனத்தில் சிறியவகை வெள்ளைக் கொக்கு ஆகும். இது ஒரு நீர்ப்பறவையாகும். இது வெண் கொக்கை விட சற்று சிறியது. இதன் இறகுகள் வெள்ளை நிறமுடையவை. உடல் முழுவதும் தூய வெண்மை நிறத்தில் இருக்கும். இனப்பெருக்க காலத்தில் உச்சந்த தலையில் கம்பிபோன்ற இரண்டு தூவிகள் சுமார் எட்டு செ.மீ. நீளம் வளர்ந்து பின் நோக்கி தொங்கும்.

3. குருட்டுக் கொக்கு:

குருட்டுக் கொக்கு
குருட்டுக் கொக்கு

மடையான் என்பது அளவில் சிறிய கொக்கினம். இது பரவலாகக் காணப்படும் பறவைகளுள் ஒன்றாக இருப்பினும் இவற்றின் நிறத்தின் காரணமாக எளிதாக கண்ணுக்குப் புலப்படாது. பறக்கும் போது இதன் வெண்ணிறச் சிறகுகளைப் பார்க்கலாம். இப்பறவையின் கழுத்து குறுகிக் காணப்படும். குட்டையான வலிமையான அலகினைக் கொண்டிருக்கும்.

4. பெரிய வெள்ளைக் கொக்கு:

பெரிய வெள்ளைக் கொக்கு
பெரிய வெள்ளைக் கொக்கு

நீர் நிலைகளில் தாவரங்கள் அற்றப் பகுதிகளில் இரை தேடும். கழுத்து நன்கு நீண்டு வளைந்திருக்கும். பெரிய வெண்ணிற பறவை. இனப்பெருக்கக் காலங்களில் அலகு கருநிறமாக மாறிவிடும். நீர்நிலைகளின் அருகில் உள்ள மரங்களில் இனப்பெருக்கம் நடக்கும்.

5. வெண் கொக்கு:

வெண் கொக்கு:
வெண் கொக்கு:

நத்தை, நண்டு, தவளை, பூச்சிகளை காட்டிலும் இதனின் பிராதான உணவு மீன்களாகவே திகழ்கிறது. கொக்குகளுக்கு வேட்டையாடும் தந்திரத்தோடு, தேர்ந்த பொறுமையும் அதிகம். தன் உணவை அடைய ஒரு கொக்கு அத்துணை பசியிலும் அசையாமல் பல மணி நேரம் பொறுமையுடன் காத்திருக்கும் வல்லமை பெற்றது. கோரை புற்களில் உள்ள சிறிய புழுக்களை கொத்தி நீரில் போட்டுவிட்டு, மீனின் வருகைக்காக அசையாமல் அங்கேயே காத்திருக்கிறது, புழுவை இரையாக உட்கொள்ள மேலே வரும் மீன்களை லாவகமாக லபக்கென்று கொத்தி தூக்கி தனக்கு இரையாக்கி கொள்கிறது. அதிகாலை மற்றும் அந்தி மாலைகளிலே இதன் அத்தியாவசிய வேட்டை நேரமாக ஒதுக்கி கொள்கிறது. முட்டைகள், குஞ்சுகளை இரையாக உட்கொள்ள கீரி, நரி, பாம்புகள் அவ்வபோது படையெடுக்கும் போது, தன் இரண்டு இறக்கைகளையும் கேடயமாக மேலே விரித்து சிலிர்த்து பயமுறுத்தி முட்டைகளையும், குஞ்சுகளையும் அவைகளிடமிருந்து சிப்பாய்களாக இருந்து காப்பாற்றுகிறது.

6. வக்கா என்ற இராக்கொக்கு:

வக்கா என்ற இராக்கொக்கு:
வக்கா என்ற இராக்கொக்கு:

வக்கா என்று அழைக்கப்படும் இப்பறவைகள் நீர்நிலைகளை சார்ந்திருப்பவை. இவை பகல் முழுதும் ஏதாவதொரு மரக்கிளையிலோ புதர்களிலோ ஓய்வெடுத்துவிட்டு, மாலைப்பொழுதுகளிலும் இரவிலும் வேட்டையாடக் கிளம்புகின்றன. இவற்றின் ஒலி காகம் கரைவதைப் போலிருப்பதால் 'இரவின் காகம்' என்றும் அழைக்கப்படுகின்றன. வக்காக்கள் நீரின் கரையருகே இரவிலும் அதிகாலையிலும் அசையாது தன் இரையின் அசைவுகளை பார்த்திருக்கும். சரியான நேரம் அமையும்போது இரையை கொத்திப்பிடித்து உண்கின்றன. இவற்றின் முக்கிய உணவு சிறியமீன்கள், தவளைகள், தேரைகள், பூச்சிகள், ஓடுடைய நீர்வாழ் உயிரினங்களாகும்.

7. சிறிய பச்சைக்கொக்கு:

சிறிய பச்சைக்கொக்கு:
சிறிய பச்சைக்கொக்கு:

குருட்டுக் கொக்கையொத்த, அதைவிட சற்று சிறியதான கொக்கு. இது தேசியக்கொக்கு என்றும் அழைக்கப் படுகிறது. வளர்ந்த பறவை, இளம்பருவ பறவை என்று இரு நிலைகளில் காணப்படுகிறது. புதர் நிறைந்த ஓடை, ஆறு, ஏரி, குளங்களின் கரைகளிலும் அலையாத்திக் காடுகள், கடல் கழிமுகப் பகுதிளிலும் இக்கொக்கைக் காணலாம். அமைதியாகவும், தனியாகவும் காணப்படும் கூச்ச இயல்பு கொண்டவை. பெரும்பாலும் மரத்தில் இருக்கும். மீன், கூனிறால், தவளை, நண்டு, நீர் வண்டுகள் உள்ளிட்ட பூச்சிகளை இரையாகப் போட்டு மீனை வேட்டையாடும் இயல்பு உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com