பூச்சி கற்றுத் தந்த பாடம்

சிறுகதை
பூச்சி  கற்றுத் தந்த பாடம்
gokulam strip
gokulam strip

ரேஷ்மா ஒரு சோம்பேறி . நாள் முழுவதும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து கார்ட்டூன் பார்த்துக் கொண்டே இருப்பாள். அம்மாவிற்கு சமையலறையில் ஒரு சிறு உதவி கூட செய்ய மாட்டாள். தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவாள் . அவள் அம்மா பலமுறை அவளிடம் ‘’டிவி பார்த்துக்கிட்டே சாப்பிடாத ...அது கண்ணுக்கு கெடுதல்... நீ சாப்பிட்டு முடிக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகுது.... சாப்பிடும் போது வேறு எதிலும் கவனம் போகக்கூடாது ...’’ என்று சொல்லுவார். ஆனால் அதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டதில்லை ரேஷ்மா.

ஒருநாள் இரவு எட்டு மணிக்கு, அம்மா தந்த சப்பாத்தி களை தட்டில் எடுத்து வைத்துக் கொண்ட ரேஷ்மா தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அரைமணி நேரம் ஆயிற்று. ஹாலில் இருந்த ட்யூப் லைட்டில் நிறைய சிறு சிறு பூச்சிகள் சுற்றிக் கொண்டிருந்தன . அதில் இரண்டு  ரேஷ்மாவின் தட்டில் இருந்த உருளைக்கிழங்கு குருமாவில் விழுந்தன. அதை அவள் கவனிக்கவில்லை.

திரையில் காட்சியைப்  பார்த்துக்கொண்டே சப்பாத்தியை  குருமாவில் தேய்த்து வாய் அருகே கொண்டு சென்றாள்.  அவளுடைய  ஐந்து வயதுத் தம்பி ரங்கேஷ் ‘’ அச்சச்சோ...அக்கா.. பூச்சி..பூச்சி..’’ என்று கத்தினான். அப்போதுதான் கையைக் கவனித்த  ரேஷ்மா ‘’ அய்யோ அம்மா..!’’ என்ற படி கையை உதறினாள்.

அவள் அலறியதைக் கேட்ட  அம்மா ‘’ பார்த்தியா... நான் எத்தனை முறை சொல்லி இருக்கேன்...  இப்போ பூச்சியோட சேர்ந்து   சாப்பிடத்  தெரிஞ்ச இல்லை...?’’ என்றார். அப்போதுதான் தன் தவறு புரிந்தது ரேஷ்மாவுக்கு ‘’சாரிம்மா.. இனிமே இப்படி செய்ய மாட்டேன் . சாப்பிடும் போது டிவி பார்க்க மாட்டேன் என்றாள்.

குட்டீஸ் எப்பவும் சாப்பிடும் போது டிவி பார்க்கக் கூடாது. அது கண்களுக்கு மிகவும் கெடுதல். சரியா... ?  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com