வயிற்றில் காணப்படும் உணவு சேமிப்புக் கிடங்கு... இது ஒரு விசித்திர எறும்பு!

Honey Ants
Honey Ants

எறும்புகள் என்றாலே மிகவும் சுறுசுறுப்பானவை. நாம் தினமும் காணும் எறும்புகள் இப்படித் தான் இருக்கும். ஆனால், நம் கண்ணில் அதிகம் படாத, தேனை தனக்குள்ளேயே சேமிக்கும் தேன் எறும்புகளைப் பற்றிய பதிவு தான் இது.

தேனீக்கள் பொதுவாக தேனை கூடுகளில் தான் சேமித்து வைக்கும். தேனீ மட்டுமின்றி பல்வேறு வகையான பூச்சியினங்கள் கூட தங்களுக்குத் தேவையான உணவை கூடுகளில் தான் சேமித்து வைக்கும். ஆனால், தனது உடலின் ஒரு பாகத்தையே உணவை சேமித்து வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் தேன் எறும்புகளைப் பற்றி நீங்கள் அறிந்தது உண்டா!

ஆம், தேன் எறும்புகளின் அடிப்பகுதியில் இருக்கும் வயிற்றுப்பகுதி தான் பிற்காலத்திற்குத் தேவையான உணவைத் திரவமாக சேமிக்க உதவுகிறது. வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் போது சக தேன் எறும்புகளால், இந்தத் திரவம் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

தேன் எறும்புகளை தேன்குட எறும்புகள் என்றும் அழைக்கின்றனர். இவற்றின் வயிற்றுப் பகுதி பெரிதாக வீங்கும் அளவிற்கு உணவை சேமிக்கும். இதன் அடிவயிறு மிகவும் மென்மையான மற்றும் அதிகளவு நெகிழ்வுத் தன்மையுடன் மூட்டு இணைப்புச் சவ்வின் மூலம் இணைக்கப்பட்ட, மிகவும் கடினமான முதுகுப்புற வன்தகடுகளைக் கொண்டுள்ளது. தேன் எறும்புகளின் வயிறு உணவின்றி காலியாக இருக்கும் போது, மூட்டுச் சவ்வானது மடிந்து, வன்தகடுகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடும். ஆனால், அடிவயிற்றை உணவால் நிரப்பும் சமயத்தில் மூட்டுச் சவ்வானது முழுவதுமாக நீட்டப்பட்டு, வன்தகடுகள் பரவலாகப் பிரிக்கப்படும்.

தேன் எறும்புகள் வறண்ட மற்றும் வெப்பமான பகுதிகளில் தான் வாழ்கின்றன. சில சிற்றினங்கள் வனப்பகுதிகளிலும் காணப்படுகின்றன. இச்சிற்றினத்தில் இருக்கும் மலட்டு வேலைக்கார தேன் எறும்புகள் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் போது பிளெர்கேட்டுகள் அல்லது நிரப்பிகளாக செயல்படுகின்றன. பிளெர்கேட்டுகள் முழுவதுமாக நிரம்பியிருக்கும் நேரத்தில் அசைவுகள் ஏதுமின்றி, நிலத்தடி கூடுகளின் கூரையில் தொங்கி விடும். மற்ற தேன் எறும்புகள் கூட்டமைப்பில் இருக்கும் சில பகுதிகளுக்கு உணவளிக்கத் தங்களுடைய திரவ உணவு சேகரத்தில் இருந்து உணவை வெளியேற்றும். பிளெர்கேட்டுகள் கூட்டில் எங்கு வேண்டுமானாலும் வாழலாம். இருப்பினும் காடுகளில் இவை மிகவும் ஆழமான நிலத்தடியில் காணப்படுகின்றன. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர முடியாமல், திராட்சையின் அளவிற்கு வீங்கி இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கருப்பு எறும்பை ஏன் சாமி எறும்பு என்று சொல்கிறோம் தெரியுமா?
Honey Ants

ஆஸ்திரேலியாவில் வாழும் பழங்குடியின மக்களின் விருப்ப உணவாக இந்த தேன் எறும்புகளின் திரவம் இருக்கிறது. தேன் எறும்புகளை கண்டறிய மண்ணில் அதிகபட்சம் 2 மீட்டர் வரை பள்ளம் தோண்டுவார்கள். இந்தத் திரவத்தைப் பருக எறும்புகளைத் தாக்க வேண்டிய அவசியமில்லை. வயிற்றில் இருக்கும் தேனைப் பிரித்தெடுத்தால் மட்டும் போதும்.

ஒரே நாள் இரவில் தனது வயிற்றில் உணவை நிரப்பிக் கொள்ளும் திறனை இவ்வகை எறும்புகள் பெற்றுள்ளன. அதிகளவு எடையின் காரணமாக மற்ற எறும்புகளைப் போல நடக்க முடியாத இந்தத் தேன் எறும்புகளை நாம் காண்பதும் மிகவும் அரிதாகவே இருக்கும்.

தனது வயிற்றை, உணவு சேமிக்கும் கிடங்காகப் பயன்படுத்தும் தேன் எறும்புகளைப் பற்றித் தெரியும் போது, இயற்கையின் படைப்பில் எல்லாமே அதிசயம் தான் என்பது மீண்டும் ஒருமுறை நினைவுக்கு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com