விநோதமான கடல்வாழ் உயிரினம் - நட்சத்திர மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

star fish
star fishImagecredit - pixabay
Published on
gokulam strip
gokulam strip

ட்சத்திர மீன்கள் பார்ப்பதற்கு விநோதமான உருவத்தில் அமைந்திருக்கும். இவை கடலில் வாழும் ஒரு உயிரினம். கடலுக்குள் காணப்படும் பல்வேறு பாறைகளுக்கு அடியில் தங்களை மறைத்துக் கொண்டு வாழ்கின்றன. இவை நட்சத்திர மீன்கள் என்று அழைக்கப்பட்டாலும் மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல. மீன்களைப்போல செவுள்கள், செதில்கள் அல்லது துடுப்புகள் முதலானவை நட்சத்திர மீன்களிடம் அமைந்திருக்கவில்லை. நட்சத்திர மீன் இனத்தில் சுமார் இரண்டாயிரம் வகைகள் உள்ளன. நட்சத்திர மீன்கள் சாதாரண மீன்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நகரும் தன்மை உடையவை. பொதுவாக மீன்கள் தங்கள் வால்களால் தங்களைத் தாங்களே உந்திச் செல்லும். ஆனால் நட்சத்திர மீன்கள் சிறிய குழாய்க் கால்களைக் கொண்டு அவற்றின் உதவியுடன் நகர்கின்றன.

நட்சத்திர மீன்களுக்கு பொதுவாக ஐந்து கைகள் அமைந்துள்ளன. சன்ப்ளவர் ஸ்டார்பிஷ் என்ற வகை நட்சத்திர மீன்களுக்கு அதிகபட்சமாக பத்தொன்பது கைகள் காணப்படுகின்றன. மேலும் நட்சத்திர மீன் இனத்தில் ஒன்பது கை நட்சத்திர மீன் என்று ஒரு வகையான மீன் காணப்படுகிறது. இம்மீன்களுக்கு ஒன்பது கைகள் அமைந்துள்ளன. நட்சத்திர மீன்களின் கைகளில் ஏதாவது ஒரு கையானது வெட்டுபட்டுவிட்டால் வெட்டுபட்ட இடத்திலிருந்து மீண்டும் கையானது வளர்ந்து பழைய நிலையை அடைந்துவிடும்.

நட்சத்திர மீன்களுக்கு ஐந்து கைகள் மட்டுமின்றி கால்களும் அமைந்துள்ளன என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம். நட்சத்திர மீன்களின் ஒவ்வொரு கைகளின் முடிவிலும் அதன் கால்கள் அமைந்துள்ளன. கால்களில் உறிஞ்சுவான் போன்ற ஒரு அமைப்பு காணப்படுகிறது. இதன் உதவியுடன் இவை கடலுக்கு அடியில் உள்ள பாறைகளின் மீது ஒட்டிக் கொண்டு வாழ்கின்றன.

நட்சத்திர மீன்களின் உடலை இரண்டாக வெட்டினால் இரண்டு உடலும் இரண்டு புதிய நட்சத்திர மீன்களாக மாறிவிடும் அதிசய ஆற்றலைப் பெற்றுள்ளன.

நட்சத்திர மீன்கள் தங்களின் கால்களின் வழியாகவே சுவாசிக்கின்றன. இவற்றின் உடல் முழுவதும் மெல்லிய சுவாசக் குழாய்கள் பரவியுள்ளன. நட்சத்திர மீன்களின் வாயானது அதன் உடலின் கீழ்ப்பகுதியில் மையத்தில் அமைந்தள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒருமனதோடு போராடினால் வெற்றி கிடைக்கும்!
star fish

நட்சத்திர மீன்கள் ஷெல்பிஷ் எனும் ஒரு வகை மீனை அதிக அளவில் சாப்பிடுகின்றன. நட்சத்திர மீன்கள் உணவை உட்கொள்ளும் விதம் முற்றிலும் வித்தியாச மானதாக உள்ளது. நட்சத்திர மீனானது தன் உணவான ஷெல்பிஷ்களின் மீது மிதந்து தன்னுடைய வயிற்றை மீனின் மீது தள்ளும். அதன் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு ஜீரண திரவமானது ஷெல்பிஷ் மீனைச் சிதைத்து ஜீரணித்து உணவு சத்தை தன் உடலுக்குள் இழுத்துக் கொள்ளும்.

நட்சத்திர மீன்கள் உடலில் ஆண் பெண் இரண்டு இனப்பெருக்க உறுப்புகளும் அமைந்துள்ளன. வருடந்தோறும் இலட்சக்கணக்கில் முட்டைகளையும் விந்தணுக்களையும் உற்பத்தி செய்கின்றன. நட்சத்திர மீன்களின் முட்டைகள் முதலில் லார்வா எனும் பருவத்தை அடைகின்றன. லார்வாக்கள் 2 மில்லிமீட்டர் அளவிற்கு வளர்ச்சியடைந்த பின்னர் முதிர்ந்த நட்சத்திர மீன்களாக மாறுகின்றன.

அதிசய கடல்வாழ் உயிரினமான நட்சத்திர மீன்களுக்கு கண்கள் என்ற அமைப்பு கிடையாது. இவ்வகை உயிரினத்தின் கைகள் போன்ற அமைப்பின் முனைப்பகுதியில் விசேஷமான செல்களால் ஆன ஐ ஸ்பாட் எனும் ஒரு அமைப்பு காணப்படுகிறது. நட்சத்திர மீன்கள் இதன் உதவியோடு தங்களுக்கு எதிரே உள்ள பொருட்களைக் காண்கின்றன.

நட்சத்திர மீன்கள் குறைந்த பட்சம் ஒரு அங்குலம் முதல் அதிகபட்சமாக பத்து அங்குலம் அளவு வரை காணப்படுகின்றன. நட்சத்திர மீன் இனத்தில் சன்பிளவர் ஸ்டார்பிஷ் என்ற நட்சத்திர மீனே மிகப்பெரியதாகும். பிரிட்டில் ஸ்டார்பிஷ் என்ற நட்சத்திர மீன் வகையே நட்சத்திர மீன் உலகில் அளவில் மிகச்சிறியதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com