ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வசித்து வந்தார். மிகவும் திமிர் பிடித்தவர். ஊர் மக்கள் அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.
அந்த கிராமத்தில் ஜார்ஜ் எனும் ஒரு இளைஞன் சிறிது காலமாக வசித்து வந்தான். அவன் மிகவும் புத்திக் கூர்மை உடையவன். அவனுக்கென்று எந்த வேலையும் கிடையாது. ஊர் ஊராகச் சுற்றி வருவதே அவன் வேலை. தற்போது இந்த கிராமத்தில் இருக்கிறான். ஊர்மக்கள் அவன் மீது அன்பு பாராட்டி வந்தார்கள். அவ்வப்போது அவர்கள் தரும் வேலையைச் செய்வான். அதற்கு பதிலாக அவனுக்கு ஊர்மக்கள் சாப்பாடு தருவார்கள்.
ஒரு நாள் பண்ணையார் தனது குதிரையில் அமர்ந்து கிராமத்தை சுற்றி வந்தார். ஊர் மக்கள் அவரைக்கண்டால் நடுங்குவார்கள். அதனால் அவர் எதிரே வருவதைக் கண்டவுடன் அவரை வணங்க ஆரம்பித்தார்கள்.
ஜார்ஜ் மட்டும் அவரை வணங்கவில்லை.
இதை கவனித்த அந்த பண்ணையார் ஜார்ஜை அழைத்தார்.
“நீ யார் ?”
“என் பெயர் ஜார்ஜ்”
“நீ எந்த ஊர். உன்னைப் பார்த்தால் இந்த ஊர் மாதிரி தெரியவில்லையே”
“இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஊர்களும் எனது ஊர்தான். தற்போது இந்த ஊரில் இருக்கிறேன்”
“நீ ஏன் என்னை வணங்கவில்லை”
“நான் எதற்காக உங்களை வணங்க வேண்டும். என்னைவிட புத்தி அதிகம் உள்ளவர்களைத்தான் நான் வணங்குவேன்”
இதைக் கேட்ட பண்ணையாருக்கு கோபம் வந்துவிட்டது.
“நான் உனக்கு ஒரு சவால் விடுகிறேன். அதில் நீ ஜெயித்துவிட்டால் உன்னை புத்திசாலி என்று ஒப்புக்கொள்ளுகிறேன்”
பண்ணையார் இவ்வாறு சொன்னதும் ஜார்ஜ் அதற்கு ஒப்புக்கொண்டான்.
“என்ன சவால் என்று சொல்லுங்கள்”
“என்னை குதிரையின் மீதிருந்து நீ உன் பேச்சு சாமர்த்தியத்தால் இறக்க வேண்டும். இதுவே சவாலாகும்”
ஜார்ஜ் யோசித்தான்.
“பண்ணையார் அவர்களே. நீங்கள் கீழே நின்றால் உங்களை குதிரையின் மீது ஒரு நொடியில் ஏற்றிவிடும் சாமர்த்தியம் எனக்கு இருக்கிறது. நீங்கள் குதிரையிலிருந்து இறக்கச் சொல்லுகிறீர்களே”
“அப்படியா. சரி உன்னுடைய சாமர்த்தியத்தை நான் பார்க்கிறேன்”
உடனே கீழே இறங்கினார் பண்ணையார்.
“சரி இப்போது என்னை குதிரை மீது ஏறச்செய் பார்க்கலாம்”
இதைக்கண்ட ஜார்ஜ் சத்தம் போட்டு சிரித்தான்.
“என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ?”
“குதிரை மீது இருந்து உங்களை இறக்க வேண்டும் என்று சொன்னீர்கள். குதிரை மீதிருந்து நான் உங்களை இறக்கி விட்டேன் பார்த்தீர்களா ?”
ஜார்ஜின் வாய் ஜாலத்தால் தான் ஏமாந்து போனதை உணர்ந்த பண்ணையார் கோபமாக குதிரை மீது ஏறி அமர்ந்து புறப்படத் தயரானார்.
“பண்ணையாரே மீண்டும் நீங்கள் தோற்று விட்டீர்கள். குதிரை மீது உங்களை ஏற்றி உட்கார வைத்துவிட்டேன் பார்த்தீர்களா ?”
இப்போது மீண்டும் தான் ஏமாந்து விட்டதை உணர்ந்த பண்ணையார் அவமானத்தால் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்று விட்டார்.
ஊர் மக்கள் ஜார்ஜின் புத்திசாலித்தனத்தை வியந்து பாராட்டினார்கள்.