மைசூரின் தசராக் கொண்டாட்டங்கள் 14ஆவது நூற்றாண்டில், விஜயநகர சாம்ராஜ்யத்தின்போதே தொடங்கிவிட்டன. அப்போது அது மகாநவமி கொண்டாட்டமாக அரசாங்கத்தால் அனுசரிக்கப்பட்டது. ஹம்பியின் ஹசாரா ராமர் கோயிலின் வெளிச்சுவரில் அதன் கொண்டாட்டங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இத்தாலிய பயணியான நிக்கோலா டே காண்டி, இந்தக் கொண்டாடங்களை விவரித்துள்ளார். துர்கா தேவி, போர் தேவதையாக இந்த விழாவில் கொண்டாடப்பட்டார்.
விஜயநகர சாம்ராஜ்யம் தலைகோட்டை போரில் தக்காண சுல்தான்களிடம் தோல்வியடைந்த பின்னர், இந்த விழாக்கோலங்கள் நின்றுபோயின. மைசூரினைச் சேர்ந்த வோடயார்கள் இதை மறுபடி துவக்கினர். குறிப்பாக, ராஜா வோடயார்(1578 - 1617) காலத்தில், 1610 செப்டம்பரில் இது மறுபடி தொடங்கப்பட்டது. பின்னர், கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1805ஆம் ஆண்டு முதல் அரசரின் பிரத்யேக தர்பார் சபை இந்தத் திருவிழாவின் போது கூட்டப்பட்டது. 1880ஆம் ஆண்டு முதல், புதிய கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல, இதில் கண்காட்சிகளும் சேர்க்கப்பட்டன. துர்கையின் அம்சமான சாமுண்டேஸ்வரி மகிஷாசுரனை வென்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
தசராத் திருவிழா இப்போது கர்நாடக மாநிலத்தின் அரசாங்க விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இது மைசூர் ராஜவம்சத்தினாரால் நடத்தப்படுகிறது. நாதஹப்பா என்றழைக்கப்படுகிறது. நவராத்திரியின் 9 நாட்களில் 6 ஆவது நாள் முதல் இந்த விழா சூடுபிடிக்கத் தொடங்குகிறது. 6 ஆவது நாள் சரஸ்வதி தேவி, 8 ஆவது நாள் துர்கா தேவி, 9 ஆவது நாள் லட்சுமி தேவி என்று மூன்று தேவிகளும் சிறப்பிக்கப்படுகின்றனர். 10 ஆவது நாள் விஜயதசமி நாள், தீமையை நன்மை வென்ற நாளாக கொண்டாடி, திருவிழா இனிதாக நிறைவேறுகிறது. 750 கிலோ எடையுள்ள தங்கமண்டபத்தில் மைசூர் அரச பரம்பரையின் குல தெய்வமான சாமுண்டேஸ்வரி சிலை ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொண்டு செல்லப்படுகிறது. நடனக் குழுக்கள், வாத்தியக் குழுக்கள், வண்ண அலங்காரங்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் அடங்கிய ஊர்வலம் மைசூர் அரண்மனையில் தொடங்கி, பன்னிமண்டபம் என்றழைக்கப்படும் வன்னிமர மைதானத்தில் முடிவடைகிறது.
தசரா விழாவின் போது, மைசூர் அரண்மனை லட்சம் விளக்குகளால் தினம் இரவு 7 மணி முதல் 10 மணிவரை அலங்கரிக்கப்படுகிறது. வருடா வருடம் கிட்டத்தட்ட 25000 பல்புகள் மாற்றப்படுகின்றன. இதற்காக மட்டும் வருடா வருடம் அரசாங்கம் 1 கோடி செலவிடுகிறது. ஜகஜோதியாக விளங்கும் அரண்மனை முன்பு, பல்வேறு இசை, நடனம் மற்றும் கலை சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. திரைப்படங்களைத் திரையிடுதல், உணவுத் திருவிழா, கவிதைத் திருவிழா, மல்யுத்தம், விளையாட்டுப் போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அரண்மனையில் நடத்தப்படுகின்றன.
இந்த தசரா விழாவின் போது, மைசூர் அரண்மனைக்கு எதிரேயுள்ள பெரிய மைதானத்தில் பெரும் கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்போது இது கர்நாடகாவின் கண்காட்சி நிர்வாகத்தினால் நடத்தப்படுகிறது. தசராவில் தொடங்கும் இந்தக் கண்காட்சி டிசம்பர் மாதம் வரை நடைபெறுகிறது. மேலும், பல்வேறு அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களை சந்தைப்படுத்திக் கொள்ள, கடைகளை இங்கு போடுகின்றன. இதில் உடை, சமையல் சாமான்கள், உணவு, அலங்காரப் பொருட்கள், நெகிழிப் பொருட்கள் என பல்வேறு கடைகள் நடத்தப்படுகின்றன. ரங்கராட்டினம் போன்ற பல்வேறு விளையாட்டு அம்சங்களும் உண்டு. தசரா விழாவில் மைசூரில் பல்வேறு கலையரங்கங்களில் இசை, மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு கலைஞர்கள், இசை வல்லுநர்கள், நாட்டிய குழுக்கள் இங்கு வந்து தங்களது நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. மேலும், குஸ்தி ஸ்பர்தே என்ற மல்யுத்தம் நடத்தப்படுகிறது. நாடெங்குமுள்ள மல்யுத்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
நவராத்திரியின் போது தசரா திருவிழாவைக் கண்டு களிக்க, லட்சக்கணக்கில் மக்கள் மைசூருக்கு வருகின்றனர். நாமும் செல்வோமா?