புராணக் கதை: பலராமரின் பலம்!

ஓவியம்; வேதா
ஓவியம்; வேதா

ழக்கம்போல் கோகுலத்துச் சிறுவர்களோடு மாடு கன்றுகளை ஓட்டிக்கொண்டு கிருஷ்ணரும், பலராமரும் யமுனா நதிக்கரைக்கு வந்தனர். ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் பலராமரைக் கொல்லக் கம்சனால் அனுப்பப்பட்ட பிரலம்மாசுரன் சிறுவனாக உருமாறி அவர்களோடு கலந்திருந்தான்.

இதை அறிந்த கிருஷ்ணர் தோழர்களிடம், “இன்று நாம் கல்தட்டு (கில்லி) விளையாடப் போகிறோம். என் கட்சிக்கு நான் தலைவன்” என்றவர் பிரலம்பனிடம், “நீ புதிதாய் இருக்கிறாய். ஏதாவது ஆயர் குடும்பத்துக்கு விருந்தினராய் வந்திருப்பாய் என்று நினைக்கிறேன். உன் பெயரென்ன?” எனக் கேட்டார்.

“என் பெயர் பிரலம்பன்” என்று அசுரன் கூற, “பிரலம்பா! புதிதாக வந்தவர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். அதனால் நீ என் கட்சிக்குத் துணைத் தலைவனாக இரு. சரிதானே நண்பர்களே?” என்று தனது தோழர்களைப் பார்த்து வினவ, “கிருஷ்ணா! நீ எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்” என சினேகிதர்கள் ஆமோதித்தனர்.

“எதிர்கட்சிக்குப் பலராமன் தலைவன். துணைத் தலைவன் ஸ்ரீதாமன். வென்றவர்களைத் தோற்றவர்கள் முதுகில் சுமந்து மந்தையைச் சுற்றி வரவேண்டும். சம்மதமா?” என்று கிருஷ்ணர் நிபந்தனை விதித்தார். “சம்மதம்” என்று உற்சாகமாகப் பதில் வந்தது.

பிள்ளைகளை இரு குழுக்களாகப் பிரித்தார் கிருஷ்ணர். விளையாட்டு சுறுசுறுப்பாக நடந்தது. எதிர்க் கட்சியின் உப தலைவனாயிருந்த ஸ்ரீதாமன் மீது கிருஷ்ணருக்கு மிகுந்த அன்பு. ஸ்ரீதாமன் மாடுகள் மேய்க்கும்போது கிருஷ்ணர் இளைப்பாறினால் அவர் தலையைத் தன் மடியில் வைத்துக் கொள்வான். கிருஷ்ணரின் கால்களை இதமாகப் பிடித்து விடுவான். யாரோடும் எதற்காகவும் சண்டை போடமாட்டான்.

எனவே தான் தோற்று, ஸ்ரீதாமனைத் தன் முதுகில் சுமக்க வேண்டுமென்று கிருஷ்ணர் திட்டமிட்டார். அவரது விருப்பப்படியே கிருஷ்ணர் கட்சி தோற்றது. நிபந்தனைப்படி தான் ஸ்ரீதாமனை முதுகில் உப்புமூட்டை தூக்குவதென்றும், பிரமலம்பன் பலராமரை முதுகில் ஏற்றிக்கொள்வதென்றும் முடிவாயிற்று.

ஓவியம்; வேதா
ஓவியம்; வேதா

பிரலம்பனுக்கு ஏக சந்தோஷம். பலராமனைக் காட்டுக்குள் கொண்டுபோய்க் கொன்று விடலாம் என்று திட்டமிட்டான். ஸ்ரீதாமன் முதலில் கூச்சப்பட்டான். பின்னர் கிருஷ்ணர் வற்புறுத்தவே அவரது முதுகில் ஏறிக்கொண்டான். பிரலம்பனோ பலராமரைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குள் ஓடினான். பலராமரைத் தூக்கிக் கொண்டு ஏன் இப்படி பிரலம்பன் ஓடுகிறான் என்பது புரியாமல் ஆயர்பாடி சிறுவர்கள் பின்தொடர்ந்தனர். பலராமருக்கு அப்போதுதான் விஷயம் புரிந்தது.

தனது எடையை அதிகரித்துக்கொண்டே போனார். கனம் தாங்க முடியாமல் பிரலம்பனுக்கு மூச்சு முட்டியது. தனது சுய வடிவத்தை அடைந்து, ஆகாயத்துக்குக் கிளம்பினான்.

அவன் சென்ற வேகத்தில் மரங்கள் சடசட என்று முறிந்தன. பிரலம்பன் தலையில் பலராமர் ஓங்கி ஒரு குட்டு வைத்தார். பிரலம்பன் மண்டை இரண்டாகப் பிளந்து இரத்தம் கொட்டியது. “ஐயோ” என்று அலறியபடி கீழே விழுந்து உயிரை விட்டான் பிரலம்பன்.

இதையும் படியுங்கள்:
பிரெஞ்சு நாட்டிற்கும் இந்த 5 விஷயங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது தெரியுமா…?
ஓவியம்; வேதா

அசுரன் மண்டை உடைந்து கிடப்பதையும், பலராமர் அருகில் நிற்பதையும் கண்டு தோழர்கள் திகைத்தனர். நடந்ததை விவரித்தார் பலராமர்.

எல்லோரும் ஆனந்தக் கூச்சலிட்டுப் பலராமரையும், கிருஷ்ணரையும் தழுவிக் கொண்டனர்.

-ஆர். பொன்னம்மாள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com