
திணேஷும் கணேஷும் அண்ணன் தம்பிகள். கணேஷுக்கு 7 வயதாகிறது. தினேஷுக்கு 10 வயதாகிறது. அவருடைய அப்பா அவர்களுக்கு மேல் சட்டை, கால் சட்டைக்கான துணியை வாங்கும் பொழுது ஒரே வண்ணத்தில் வாங்கி விடுவது வழக்கம். அதனால் வீட்டில் எப்பொழுதும் ஒரே போராட்டம்தான்.
நன்றாக இருக்கும் சட்டையை எல்லாம் தம்பி கணேஷ் எடுத்து அணிந்து கொள்வான். கால் சட்டையையும் அப்படித்தான். அதற்காகவே தினமும் காலையில் எழுந்த உடனே குளித்து விடுவான். அப்படி குளிக்காவிட்டாலும் சுத்தமாக இருக்கும் உடையை தனியாக எடுத்து மறைத்து வைத்து விடுவான். இந்த விஷயம் அண்ணன் தினேஷுக்கு தெரிய வந்து நெடுநாளாகிவிட்டது. இருந்தாலும், 'தம்பி தானே?’ என்று மீதமுள்ள உடைகள் ஏற்கனவே தம்பி அணிந்தவையாக இருந்தாலும், துவைக்காமல் இருந்தாலும், நாற்றமாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டு அதை அணிந்து கொண்டு செல்வது அண்ணனின் வழக்கம். வீட்டின் வறுமை நிலை அவனுக்கு நன்றாகத் தெரியும்.