
நாம் எப்பொழுதும் வாழ்க்கையில் வரும் முன் காப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். அவ்வாறு வரும் முன் காப்பதைக் கடைபிடிப்பதன் மூலம் பல்வேறு பிரச்னைகளை நாம் தவிர்த்துக் கொள்ளலாம்.
வாழ்க்கையில் நமது குறிக்கோள்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும். அவ்வாறு நாம் செயல்படாவிட்டால் குறிக்கோளுக்கான காலம் வரும் பொழுது, அதனைக் கையாள்வது கடினமாக இருக்கும். உதாரணமாக, தேர்வு வரும் நாள் நமக்கு முன்கூட்டியே தெரியும்போது முன்கூட்டியே படித்து விடுவது நல்லது. அவ்வாறு படிக்காவிட்டால் தேர்விற்கு முதல் நாள் படிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
வரும் முன் காப்பதைப் பற்றி ஒரு கதையைப் பார்ப்போம்.
ஒரு குளத்தில் பல மீன்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் மூன்று மீன்கள் நண்பர்களாக இருந்தன. அந்த மீன்களில் ஒன்று வரும்முன் காப்போம் என்ற எண்ணத்தை உடையது. மற்றொரு மீன் வரும்போது காப்போம் என்ற எண்ணத்தை உடையது. மூன்றாவது மீன் வந்த பின்பு காப்போம் என்ற எண்ணத்தை உடையது.
ஒரு நாள் மாலை இரண்டு நபர்கள் அந்தக் குளத்திற்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர். மறு நாள் பெரிய வலைகளைக் கொண்டு வந்து அந்த குளத்தின் மீன்களைப் பிடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தனர்.
அந்தப் பேச்சைக் கேட்ட வரும்முன் காப்போம் மீன் அன்று இரவே அந்த குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கு இருந்த நீர் வழிப்பாதை வழியாக தப்பிச் செல்ல முடிவெடுத்தது. மற்ற மீன்களுக்கும் அது அவ்வாறு அறிவுரை கூறியது. வந்தபோது காப்போம் மற்றும் வந்தபின் காப்போம் மீன்கள் வரும்முன் காப்போம் மீனின் அறிவுரையை அலட்சியம் செய்தன.
அடுத்த நாள் வந்தது. முதல் நாள் பேசிய அந்த இரண்டு நபர்களும் பெரிய வலையுடன் அந்தக் குளத்திற்கு வந்தனர். அதைக் கண்ட, வந்தபோது காப்போம் மீன், அவசர அவசரமாக அந்த குளத்தில் இருந்து தப்ப முயற்சி செய்தது. வந்த பின் காப்போம் மீனை தப்பிக்க அறிவுரை சொன்னது. அப்போதும் கூட வந்த பின் காப்போம் மீன் அந்த வலையைப் பற்றி அலட்சியம் செய்தது. வந்த போது காப்போம் மீன் தப்பித்துச் செல்லும்போது அங்கங்கே கற்களில் அடிபட்டு காயங்கள் ஏற்பட்டு தப்பித்துச் சென்றது.
அந்த நபர்கள் வலையை வீசியபோது வந்த பின் காப்போம் மீன் அந்த வலையில் சிக்கிக் கொண்டது. அந்த வலையில் இருந்து அது தப்பிக்க முயற்சி செய்தது. ஆனால் அதனால் தப்பிக்க இயலவில்லை. வலையில் சிக்கிக் கொண்ட அதனை அந்த நபர்கள் ஒரு கூடையில் மற்ற மீன்களுடன் கொட்டினர். வந்த பின் காப்போம் மீன், வந்த பின் காத்துக் கொள்வோம் என்ற தனது தவறான முடிவை எண்ணி வருந்தியது.
நாம் நமது வாழ்க்கையில் வரும் முன் காப்போம் என்ற வழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மேற்கண்ட கதையில், வரும் முன் காப்போம் மீன் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தன்னைக் காத்துக் கொண்டது. வந்தபோது காப்போம் மீன் சில காயங்களை எதிர்கொண்டு பின்னர் தன்னைக் காத்துக் கொண்டது. வந்தபின் காப்போம் மீன் தனது வாழ்க்கையையே இழந்து விட்டது.
நாம் நமது வாழ்க்கையில் எதிர்காலத்திற்கு முன்னரே தயார் செய்து கொள்வோம். அதன் மூலம் நம்மால் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.