வணங்கும் பூச்சியைப் பற்றித் தெரியுமா குட்டீஸ்?

Praying Mantis
Praying Mantis
Published on

ஒரு பூச்சி பார்ப்பதற்கு தங்கள் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி வைத்து கடவுளை நாம் வணங்குவதைப் போன்ற நிலையில் அமர்ந்திருக்கும். இதனால் இவை பிரேயிங் மாண்டிஸ் [Praying Mantis] என்று அழைக்கப்படுகின்றன. இந்த வணங்கும் பூச்சிகளைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோமா குட்டீஸ்.

உலகத்தில் மொத்தம் ஆயிரத்தி எழுநூறு வகையான பிரேயிங் மாண்டிஸ்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் மிக அதிகபட்சமாக ஆசியக் கண்டத்திலும் மற்றும் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மாண்டிஸ் பூச்சிகள் பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. கரோலினா மாண்டிஸ் எனும் ஒரு வகையான பூச்சி இரண்டு அங்குல அளவில் காணப்படுகிறது. சைனீஸ் பிரேயிங் மாண்டிஸ் பூச்சிகள் ஐந்து அங்குல அளவிற்கு வளர்கின்றன. பதினெட்டு அங்குல அளவுடைய பிரம்மாண்டமான மாண்டிஸ் 1929 ஆம் ஆண்டில் சீன நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனர்கள் மாண்டிஸ் முட்டைகள் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ ஆற்றலுடையது என்று நம்புகிறார்கள்.

பிரேயிங் மாண்டிஸ் முகமானது முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கும். முன்னங்கால்கள் வளைந்து வணங்குவதைப் போல காணப்படும். மாண்டிஸ் கண்கள் மிகப்பெரியதாக காணப்படுகிறது. இவைகளால் தங்கள் கண்களை 360 டிகிரி கோணத்திற்கு சுழற்ற இயலும். மாண்டிஸ்கள் கூர்மையான பார்வையைப் பெற்றுள்ளன. இவற்றால் சுமார் அறுபது அடி தொலைவு வரை உள்ள பொருட்களையும் தெளிவாகப் பார்க்க முடியும். பூச்சி இனத்தில் மாண்டிஸ் மட்டுமே தங்கள் தலையை முழுவதுமாக எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சுழற்றிப் பார்க்க முடிந்த ஒரு உயிரினம். வீட்டு ஈக்களால் தங்கள் தலையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே திருப்ப முடியும்.

பிரேயிங் மாண்டிஸ்கள் பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று விடுகின்றன. இதனால் இவை விவசாயிகளின் நண்பனாகப் போற்றப்படுகின்றன.

மாண்டிஸ்கள் தங்கள் இரண்டு முன்னங்கால்களையும் தங்கள் உணவுப் பூச்சிகளைப் பிடிக்க பயன்படுத்துகின்றன. சிறிய வகை மாண்டிஸ் பூச்சிகள் கிரிக்கெட் பூச்சி, ஈ போன்றவற்றைச் சாப்பிடுகின்றன. பெரிய மாண்டிஸ்கள் வெட்டுக்கிளிகள், அந்திப்பூச்சிகள், கிரிக்கெட் பூச்சிகள் போன்றவற்றை பிடித்துத் தின்னும் ஆற்றலுடையவையாக விளங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
குவா குவா வாத்துகள்... சுவாரஸ்ய குறிப்புகள்!
Praying Mantis

மாண்டிஸ்கள் தாங்கள் இருக்கும் இருப்பிடத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் உடல் நிறத்தை மாற்றிக் கொள்ளுகின்றன. இதனால் இவை பிற உயிரினங்களின் கண்களில் படாமல் மறைந்து கொண்டு தங்களுக்கு வேண்டிய உணவைப் பிடிக்க முடிகிறது. மேலும் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. இவற்றால் அடர்ந்த பிரௌன் நிறம் முதல் இலைகளைப் போன்ற பச்சை நிறம் என பல வண்ணங்களில் தங்கள் உடல் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

பெண் மாண்டிஸ்கள் நூற்றுக்கணக்காக முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் மூன்று வாரங்களிலிருந்து ஆறு மாதங்கள் இடைவெளியில் சீதோஷண நிலைக்கு ஏற்றவாறு பொரியும். இவற்றிலிருந்து பிறந்த நிம்ப்கள் பார்ப்பதற்கு மிகச்சிறிய மாண்டிஸ்களைப் போலவே காணப்படும். மாண்டிஸ்களின் வளர்ச்சிப்பருவம் முட்டை, நிம்ப், முதிர்ந்த நிலை என்ற மூன்று நிலைகளை உள்ளடக்கியது. முட்டையிலிருந்து வெளியே வந்த மாண்டிஸ்கள் முழு வளர்ச்சி அடைவதற்கு முன்னர் தங்கள் தோலை பனிரெண்டு முறை உதிர்க்கின்றன. பிரேயிங் மாண்டிஸ்கள் சாதாரணமான சூழ்நிலையில் பத்து முதல் பனிரெண்டு மாதங்கள் வரை வாழ்கின்றன. சில பகுதிகளில் இவை அதிகபட்சமாக பதினான்கு மாதங்கள் வரை வாழ்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com