விலையில்லாப் பரிசு

சிறுகதை
விலையில்லாப் பரிசு
gokulam strip
gokulam strip

ஓவியம்: பிள்ளை

 “அட! என்னங்கப்பா பிள்ளைகளா? எல்லாரும் என்னென்னமோ வச்சிருக்கீங்க. உங்கக் கையில!”

“ஐயா உங்களுக்குப் பிறந்த நாள் விழான்னு கேள்விப் பட்டோம். அதான் நாங்க உங்களுக்குப் பரிகள் கொண்டு வந்திருக்கோம்.”

கதிரவன் மேல்நிலை பள்ளி ஆசிரியர். 

“வேண்டாம்ப்பா. இந்தப் பரிசு எல்லாம். உங்களுக்கே அது வினையாக முடியும். நீங்க என்ன கொண்டு வந்திருக்கீங்கன்னு கூட நான் பார்க்க விரும்பலை. தயவு செய்து எடுத்துட்டு போயிடுங்க. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. அப்புறம்…” என நிறுத்தினார்.

“ஐயா…?”

“நீங்க இவ்வளவு தூரம் வந்து உங்களை நான் சும்மா திருப்பி அனுப்பறது மனசுக்குச் சங்கடமாகத்தான் இருக்கு. இருங்க வரேன்.”

அருகில் இருந்த டீக்கடைக்கு  அருகில் அழைத்துச் சென்றவர் டீயும் பிஸ்கெட்டும் வாங்கிக் கொடுத்தார்.

பின்பு, “தம்பிகளா.. நீங்கள் எனக்கு ஏதாவது பரிசு தரவேண்டும் என்றால் அது விலை மதிக்க முடியாத பரிசாகவே இருக்கணும். இதெல்லாம் எனக்கு வேண்டாம் கிளம்புங்க” என்றவர் வேகமாக திரும்பி விட்டார்.

“என்னடா இது? இத்தனை தெனாவட்டா பேசறாரு?”

‌”டேய் மரியாதையா பேசுடா.”

“அவர் சொன்னதை யோசிச்சீங்களாடா நீங்க?”

“வந்துட்டாருய்யா கருத்து கண்ணாயிரம்.”

“இருடா என்ன சொல்ல வரான்னு பார்ப்போம். நீ சொல்லுடா.”

"ஒருத்தருக்கு ஒரு பொருளைக் குடுக்குறோம்னா ஏதோஒரு வகையில் அதை வாங்குபவர்கள் கடன்பட்ட நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். அதைத்தான் ஐயா குறிப்பிட்டார்.”

“புரியலைடா.”

“நம்மிடம் இந்தப் பரிசுகளை அவர் வாங்கியிருந்தால் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, கண்டிக்கவோ அவர் யோசிக்க வேண்டியிருக்கலாம். நம்மீது மாணவர் என்ற உறவைத் தாண்டி வேறொரு பற்று உருவாகிவிடும். அது நம் எதிர்காலத்தையும் பாதிக்கும். தவறுகளைத் தொடர ஒரு சுதந்திரத்தைக் கொடுத்து விடும். அதைத்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார். யோசிங்க உங்களுக்கும் அது சரியாகவேப் படும்.”

“இவன் பெரிய காந்தியவாதி மாதிரி பேசறான்டா. நீங்க வாங்கடா.”

“எப்படியோப் போங்க.”

“சரிடா. இது நாம பங்குப் போட்டு வாங்கினது. என்ன செய்யறது?”

“அப்படியே வைப்போம். ஆண்டு விழாவுக்குப் பயன்படுத்திக்கலாம்…”

“வாங்கடா சினிமாக்கு வர்றீங்களாடா?”

“டேய் மீண்டும் சொல்றேன் ஐயா சொன்னதை யோசிங்கடா.”

“என்னடா உன் பிரச்னை?”

“அவர் விலைமதிப்பில்லா பரிசுக் கேட்டாரே அது…”

“அதுக்கு நாங்க எங்கே போறதுடா?”

“முட்டாள்களே அவர் கேட்டது. இந்த ஆண்டு பொதுத் தேர்வில் நாம் எடுக்கும் மதிப்பெண்களைத்தான். இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு. இப்பொழுது படிக்க ஆரம்பித்தால் கூட நம்மால் முடியும். சும்மா தேர்ச்சி பெறுவதைவிட கதிரவன் ஐயாவோட பிள்ளைங்க ஏதோ சாதித்து விட்டாங்க என்ற அடையாளத்தோட தேர்ச்சி பெறுவோம். நம்மைப் பெற்றவங்கள விட நம்முடைய ஆசிரியருக்கு அது பெரும் பேரைத் தரும்.  நாம் நூத்துக்கு நூறு வாங்கலேன்னாலும் பெருமைப் படற அளவுக்காவது தேர்ச்சி பெறனும்டா. அதைத்தான் ஐயா சொல்றாரு. நாம
இன்றுமுதல் குழுவாச் சேர்ந்துப் படிப்போம்..."

“ஆமான்டா இவன் சொல்றது சரிடா. நாம செய்றோம். அந்த விலைமதிப்பில்லா பரிசை ஐயாவுக்குக்குத் தர்றோம்!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com