கதைகள் பாதி நிஜங்கள் மீதி!

அறிவியல் கற்பனை!
கதைகள் பாதி நிஜங்கள் மீதி!
Published on

டிங்... டிடிங் என்று மணியடித்ததும் பேனாவைக் கீழே வைத்துவிட்டுப் பெருமூச்சு விட்டார் மோனா. அதெப்படி முக்கியமான கட்டத்தை நெருங்கும்போது ஏதாவது தொந்தரவு வந்துவிடுகிறது? கதவைத் திறந்தார்.

மஞ்சள் கவுன் அணிந்த ஒரு குட்டிப் பெண், நீள நீளமாகப் பறக்கும் தலைமுடியுடன் நின்றுகொண்டிருந்தாள்.

‘வணக்கம் மோனா! உள்ளே வரலாமா?’

மோனா யோசித்து பதிலளிப்பதற்குள் கதவைத் தள்ளியபடி உள்ளே நுழைந்துவிட்டாள் அந்தச் சிறுமி.

மோனா விழித்தார். ‘யார் நீ?’

‘உங்களுக்கே என்னைத் தெரியவில்லையா? நன்றாக யோசித்துப் பாருங்கள். என் கண்கள், என் தலைமுடி, என் கவுன்...’

‘மன்னிக்கவும். தெரியவில்லை. எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?’

அந்தச் சிறுமி புன்னகைத்தாள். ‘ரொம்ப நேரமாக ஒரு கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் நீங்கள் தவித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். சரி, நேரில் வந்து உதவலாம் என்று வந்துவிட்டேன்.’

மோனா திடுக்கிட்டார். ‘நான் கதையை முடிக்காமல் இருப்பது உனக்கு எப்படித் தெரியும்?’

அந்தச் சிறுமி கைகளைக் கட்டிக்கொண்டு புன்னகைத்தாள். காற்றில் அசைந்து ஆடும் அவள் தலைமுடியைப் பார்த்தும் மோனாவுக்குத் தெரிந்துவிட்டது.

‘அப்படியானால்... இது உண்மையா?... சாஷா! நீயா?’

சாஷா மோனாவின் அருகில் வந்து நின்று நிமிர்ந்து பார்த்தாள். ‘அப்பாடா, இப்போதாவது தெரிந்ததே!’

‘இதென்ன கனவா! போன மாதம் நான் எழுதிய கதாபாத்திரம் அல்லவா நீ? உனக்கு எப்படி உயிர் வந்தது?’

‘நான் மட்டுமல்ல. இதுவரை நீங்கள் உருவாக்கிய அத்தனை கதாபாத்திரங்களும் என்னைப் போலவே உயிருடன் இருக்கிறார்கள்.’

திகைத்து நிற்கும் மோனாவைப் பார்த்து புன்னகைத்தாள் சாஷா. ‘மனிதர்கள் மட்டுமல்ல, நீங்கள் உருவாக்கிய மரம், செடி, பூ, காடு, கட்டடம், ஊர், உலகம் அனைத்தும் உயிருடன் இருக்கின்றன.’

மோனா நெருங்கி வந்து தயங்கித் தயங்கி சாஷாவின் கையைத் தொட்டுப் பார்த்தார். பிறகு அவளுடைய தலையைத் தடவிப் பார்த்தார். கன்னத்தில் உள்ள குழிகூட அச்சு அசலாகத்தான் எழுதியதைப் போலவே இருக்கிறதே!

‘என்னால் நம்ப முடியவில்லை சாஷா. நான் இங்கே இருப்பது உனக்கெப்படித் தெரியும்?’

‘ஹும், உருவாக்கியவரே என்னை மறந்துபோனால் நான் என்னதான் செய்வது? ஆனாலும் நான் உங்களை மறக்கவில்லை. நீங்கள் ஒவ்வொரு முறை புதிய கதை எழுதும் போதும், நான் அருகில் இருந்து பார்த்துக்கொண்டே  இருப்பேன். புதிய கதாபாத்திரங்களை நீங்கள் உருவாக்கும்போது, எனக்குப் புதிய நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள் என்று மகிழ்ந்துபோவேன்.’

சாஷாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது மோனாவுக்கு. ‘இவ்வளவு அழகான ஒரு குட்டிப் பெண்ணை எப்படி மறந்தேன்’ என்று யோசித்தார். சாஷாவின் கையைப் பிடித்துத் தன் அருகில் உட்கார வைத்துக்கொண்டார் மோனா.

‘ரொம்ப ரொம்ப சாரி சாஷா! இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நான் உன்னை மறந்திருக்கவே மாட்டேன். சரி, சொல்லு. நீ எங்கே வசிக்கிறாய்?’

‘மினர்வா என்றதோர் உலகம் இருக்கிறது. அங்கே மோகா ஊர் என்னும் இடத்தில் வசிக்கிறேன். நீங்கள் முன்பொரு கதையில் உருவாக்கிய ஊர் அது. ரோபோவுடன் கதை பேசுவோம். எல்லாரும் ஜாலியாக மகிழ்ச்சியாக இருப்போம்.’

நினைத்துப் பார்க்கவே உற்சாகமாக இருந்தது மோனாவுக்கு. ‘நான் எழுத, எழுத அங்கே புதியவர்கள் சேர்ந்து கொண்டே இருப்பார்களா?’

‘ஆமாம். மோகா ஊருக்குப் பக்கத்தில் மோ என்ற இன்னோர் ஊரும் இருக்கிறது. அங்கே எல்லாரும் பாதி பாதியாக இருப்பார்கள். பாதி மரம், பாதி ஊர், பாதி ஆப்பிள், பாதி மனிதர்கள்.’

‘ஐயோ, ஏன்?’

‘என்னைக் கேட்டால்? எழுத ஆரம்பித்துவிடுவது. பிறகு பாதியில் விட்டுவிடவேண்டியது. இப்படி நீங்கள் பாதி பாதியாக உருவாக்கிய அனைவரும் மோ ஊரில் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் முழுக்க உருவாக்கினால்தான் மோனா ஊருக்கு வருவார்கள்.’

‘அச்சச்சோ, இது தெரிந்திருந்தால் பாதியில் விட்டிருக்க மாட்டேனே!’

‘அதனால்தான் நேரில் பார்த்து சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். போன வாரம் மோ ஊர் போயிருந்தபோது அங்குள்ளவர்கள் என்னிடம் பேசினார்கள். ‘எப்படியாவது இந்த மோனாவைப் பார்த்து எங்களை முழுமையாக எழுதி முடிக்கச்சொல், அப்போதுதான் நாங்கள் முழுமையடைய முடியும்’ என்றார்கள்.’

மோனா சாஷாவின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்தார். ‘பயப்படாதே சாஷா. நீ  சொன்னதை எல்லாம் நினைவில் வைத்துக்கொள்கிறேன்.’

‘ஓ, நன்றி, நன்றி மோனா!’ என்று கன்னம் சிவக்கப் புன்னகைத்தாள் சாஷா. ‘இனி உங்களை இப்படித் தொந்தரவு செய்யமாட்டேன். நான் கிளம்பவா?’

அப்போதுதான் சட்டென்று அந்த ஐடியா வந்தது மோனாவுக்கு. ‘ஒரு நிமிஷம் இங்கே இரு. இந்தக் கதையை முடித்து விட்டு வருகிறேன். அதுவரை இந்தக் கொய்யாப் பழத்தைச் சாப்பிடு.’

சாஷாவை உட்கார வைத்துவிட்டு தன் மேஜையை நெருங்கினார் மோனா. கடகடவென்று இரண்டு வரிகள் எழுதினார்.

சாஷாவை நெருங்கினார். ‘ம், இப்போது கிளம்பலாமா?’

சாஷா விழித்தாள்.

‘ஏன் சாஷா நான் உன்னுடன் வரக்கூடாதா?’

‘ஆனால் நீங்கள் எப்படி வரமுடியும்?’

‘ஏன் முடியாது? நான் இப்போது எழுதி முடித்த கதையின் முடிவில் என்னையும் ஒரு கதாபாத்திரமாக நுழைத்து விட்டேன். எனவே இனி என்னாலும் மோகா ஊர் வரமுடியும். நான் உருவாக்கிய அனைவரையும் வந்து பார்க்க வேண்டும். கையோடு பேப்பர், பேனா இருப்பதால் அப்படியே மோ ஊர் போய் அங்குள்ள அனைவருக்கும் முழு உருவம் கொடுத்துவிடலாம். அதற்கெல்லாம் நீதான் எனக்கு உதவி செய்யவேண்டும் சாஷா. செய்வாயா?’

சாஷா துள்ளி குதித்தாள்.

‘என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். நான் சொல்லும் வரை திறக்கவேண்டாம்.’

மோனா கண்களை மூடிக்கொண்டார். சாஷாவின் மென்மையான கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்.  இனம் தெரியாத புதிய சிலிர்ப்புடன் சாஷாவுடன் புறப்பட்டார் மோனா.

சில விநாடிகளில் அந்த அறையில் இருந்து இருவரும் மறைந்து போனார்கள்.

அடுத்த நாள் காலை அவரது அறையைத் திறந்த மோனாவின் மனைவி கென்ஸி, தனது கணவரைக் காணாது ஊரெங்கும் தேடினார். இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com