
அன்பு, மென்மை மற்றும் அக்கறையின் அடையாளமான அழகு மலர் ரோஜா. உலகில் 150க்கும் மேற்பட்ட வகைகளில், பல வண்ணங்களில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. இது ரோசசி குடும்பத்தை சேர்ந்தது. ரோஜா மலரின் தாயகம் ஆசியா. ஒரு சில ரோஜா மலர்கள் வெவ்வேறு வகையான தாயகத்தை கொண்டுள்ளவை. ரோஜா என்ற வார்த்தை இலத்தீன் மொழியில் இருந்து வந்தது. ரோஸ் என்ற பெயர் பிரெஞ்சு மொழியிலிருந்து வந்தது. இலத்தீன் மொழியில் ரோஜா என்பதற்கு அன்பு என்று பொருள்.
35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே ரோஜாவின் படிவத்தை கண்டறிந்துள்ளனர். அந்தளவிற்கு மிகப்பழமையான மலர். தற்போதைய ரோஜா மலர்கள்
1000 ஆண்டுகளுக்கு முந்தைய வகையைச் சார்ந்தவை.
ரோஜாவின் ஒவ்வொரு வர்ணத்திற்கும் ஒரு அடையாளம் உள்ளது. ரோஜாக்கள் சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, மஞ்சள், ஊதா, ஆரஞ்சு போன்ற பல நிறங்களில் உள்ளன. ஒவ்வொரு நிறமும் ஓர் உணர்வினை வெளிப்படுத்துகிறது. சிகப்பு ரோஜாக்கள் - காதலை குறிக்கும், பிங்க் நிறம் - ஆனந்தத்தை குறிக்கும், வெள்ளை நிறம் - தெய்வீகத்தையும், அமைதியைபும் குறிக்கும். மஞ்சள் நிறம் - நட்பை குறிக்கும், ஆரஞ்சு நிறம் - ஆர்வத்தை குறிக்கும்.
உலகிலேயே பெரிய ரோஜா செடி ‘லேடி பேங்க்சியா’ வகை (Lady Banksia) ஆகும். . இங்கிலாந்தின் தேசிய மலராக ரோஜா உள்ளது. ரோஜா பூ உற்பத்தியில் நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ரோஜா தோட்டம்தான் இந்தியாவிலேயே மிகப்பெரியது. கடல் மட்டத்திலிருந்து 2200 மீ. உயரத்தில் இருக்கும் இந்த தோட்டத்தில் 1900க்கும் மேற்பட்ட வகையான ரோஜா மலர்கள் பூக்கின்றன. உலகிலுள்ள அனைத்து ரோஜா நாற்றுகளும் இங்கு வரவழைக்கப்பட்டு வளர்க்கப் படுகின்றன. இதில் 'ஹைபிரிட்' வகைகள் வாடாமல் பல நாட்கள் இருக்கும். 10 ஏக்கர் பரப்பளவில் அடுக்கடுக்காக மலைச்சரிவில் அமைந்துள்ளது இந்த ரோஜாத் தோட்டம்.
டேவிட் ஆஸ்டின் என்ற ரோஜா வளர்ப்பாளர் 15 வருட உழைப்பில் 'ஜூலியட்' என்ற ரோஜா வகையை உருவாக்கினார். இது 15.8 மில்லியன் டாலர்களுக்கு 2006ம் ஆண்டு விலை போனது. இதுதான் உலகிலேயே மிக விலை உயர்ந்த ரோஜா. பல்வேறு வகையான ரோஜாக்களை கலந்து இதனை உருவாக்கியுள்ளனர். அப்போதைய இந்திய மதிப்பில் ரூ 90 கோடிகள்.
இந்த ரோஜாவானது பூப்பதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். நீங்கள் எப்பேர்ப்பட்ட மோசமான மனநிலையில் காணப்பட்டாலும், உடனடியாக இந்த பூவின் மணம் உங்களை மாற்றிவிடுமாம். அதனால்தான் இதற்கு ஜுலியட் ரோஜா என்று பெயர் வந்துள்ளது. மிகவும் அரிதாக பூக்கும் பூ என்பதால் தற்போது இதன் விலை 130 கோடி என்று கூறப்படுகின்றது.