சிறுகதை; தென்னை மரமும், வாழை மரமும்!

Coconut tree and banana tree...
Coconut tree and banana tree...
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ரு தோட்டத்தில் புதிதாக வாழைக்கன்று ஒன்று  நடப்பட்டது. ஏற்கெனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று, தென்னங்கன்றிடம் கேட்டது, ‘நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே?’

தென்னங்கன்று சொன்னது:

‘ஒரு வருஷம்.’

‘ஒரு வருஷம்னு சொல்றே... ஆனா என்னைவிடக் கொஞ்சம்தான் உயரமா இருக்கே! எதாச்சும் வியாதியா?’ கேட்டுவிட்டு  ஏதோ பெரிய நகைச்சுவையைச் சொல்லி விட்டதுபோலச்  சிரித்தது. 

தென்னங்கன்றோ அதைக்  காதில் வாங்காததுபோலப் புன்னகைத்தது. ஒவ்வொரு நாளும் வாழைக்கன்றின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றை விட உயரமாக வளர்ந்துவிட்டது. வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. 

ஒரு வருடத்துக்குள் தென்னங்கன்றைவிட வாழைக்கன்று இரு மடங்கு உயரமாகிவிட்டது. தினமும் தென்னங்கன்றைப் பார்த்து கேலி செய்து, சிரிப்பது மட்டும் குறையவேயில்லை.

‘கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ? ஒரு லெவலுக்கு மேல வளர விடாம தட்டியே வச்சிருக்காரே!’

‘நீ  இருக்குற மண்ணில்தான்  நானும் இருக்கேன். உனக்குக் கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது. நான் மட்டும் எப்படி வளந்துட்டேன்! உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல’ என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது.

தென்னங்கன்றிடம் இருந்து புன்னகையைத் தவிர வேறெந்தப் பதிலும் வரவில்லை.

இன்னும் சிறிது காலம் சென்றது.  வாழை மரத்திலிருந்து குலை ஒன்று வெளிப்பட்டது.  அது பூவும்,  காய்களுமாக அழகாக மாறியது. அதனுடைய பெருமை இன்னும்  அதிகமானது.  இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது.

நல்ல உயரம்; பிளவுபடாத அழகிய இலைகள்;  கம்பீரமான குலை. வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது.  இப்போது காய்கள் முற்றின.

ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய்ச் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான். தென்னை மரத்தைத்  திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

வாழைக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? அதன் பெருமை அடங்குவதற்குள் திடீரென இன்னொரு மனிதன் கத்தியுடன் வந்தான். முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள, வாழையின் குலைகளை வெட்டி எடுத்தான். வாழைமரம் கதறியது; அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது; மரண பயம் வந்துவிட்டது; அது பயந்தபடியே  அடுத்த காரியம் நடந்தது.

இதையும் படியுங்கள்:
வெப்பம் நம்மை மட்டுமா சுடும்? ஐந்தறிவு ஜீவன்கள் என்ன செய்யும்?
Coconut tree and banana tree...

ஆம். வாழை மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டது! ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுரிக்கப்பட்டது. தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது.  அதன் புன்னகைக்கு  என்ன  அர்த்தம்  என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.

ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல? கவலைப்படவேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம், வேகமாகவே காணாமல் போகும்.

ஒரு காரியத்தின் துவக்கத்தைவிட அதன் முடிவே நல்லது. பெருமையுள்ளவனைக் காட்டிலும் பொறுமையுள்ளவனே உத்தமன்!

logo
Kalki Online
kalkionline.com