சிறுகதை - ஜீவகாருண்யம்!

ஓவியம்; ஓவியர்
ஓவியம்; ஓவியர்
Updated on

முப்போகமும் விளையும் ஊத்துமலை கிராமத்தில், புத்திசிகாமணி மிகப் பெரிய விவசாயி. மனைவி மதிவதனி, மகன்கள் குமார், சேகர் ஆகிய நால்வரோடு அமைந்த எளிமையான குடும்பம். மூத்தவன் குமார் பத்தாம் வகுப்பும் இளையவன் சேகர் எட்டாம் வகுப்பும் படித்து வந்தனர். குமார் விவசாயத்தை வெறுப்பவன். சேகரோ விவசாயத்தை மிகவும் நேசிப்பவன்.

ருமுறை, ஊரில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. இருபது ஏக்கரில் பயிரிடும் புத்திசிகாமணி இரண்டு ஏக்கரில் மட்டுமே பயிர் செய்திருந்தார். கிணற்றில் போதிய தண்ணீர் இல்லா ததே இதற்குக் காரணம். கம்பு, சோளம், கேழ்வரகு, சிறிதளவில் காய்கறிகளைப் பயிரிட்டிருந்தார்.

பயிர்களின் கதிர் முற்றிய பருவத்தில், பறவைகள் கூட்டம் கூட்டமாக புத்திசிகாமணியின் தோட்டத்துக்குப் படையெடுக்கத் தொடங்கின. மாலை நேரத்தில், மகன்களோடு தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த புத்திசிகாமணி, பறவைகளின் கூட்டத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார்.

நாம் கஷ்டப்பட்டு விவசாயம் செய்த தானியங்களை எல்லாம் பறவைகளே கொத்திக்கொண்டு போய்விடுமே என யோசித்தான் குமார். தனது அப்பாவிடம் பறவைகளை விரட்ட காவல் போடும்படி கூறினான். உடன் வந்துகொண்டிருந்த சேகர், காவல் வேண்டாம் என்று மறுத்தான்.

சேகரை உற்று நோக்கிய புத்திசிகாமணி, “ஏண்டா, அப்படிச் சொல்றே?” என்று கேட்டார்.

“ஊரெல்லாம் பஞ்சமாக இருக்கிறது. நிறைய விவசாயிகள் விவசாயமே செய்யவில்லை. நம்மைப் போன்ற ஒரு சிலரே செய்திருக்கும் விவசாய நிலங்களை நோக்கி உணவுக்காகப் பறவைகள் பயணப்படுகின்றன. நாமே அவற்றை விரட்டி விட்டால், உணவுக்காக அவை எங்கே போகும்? அவை சாப்பிட்ட மிச்சமே நமக்குப் போதும்.”

குமாரும் புத்திசிகாமணியும் மௌனமாகப் பார்த்துகொண்டிருந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
செய்வது ரொம்ப சுலபம். சுவையோ ஆஹா அருமை!
ஓவியம்; ஓவியர்

“இரண்டு வருடங்களுக்கு நாம் உணவு உண்ண வீட்டில் தானியங்கள் நிறைய இருக்கின்றன. நாம் ஏன் இந்தக் கொடிய பஞ்ச காலத்தில் விளைந்திருக்கும் குறைந்த தானியங்களுக்கு ஆசைப்பட வேண்டும்? இவ்வருடம் நாம் விவசாயமே செய்யவில்லை என நினைத்துக் கொள்வோமே...” என்ற சேகர் ஆவலாக அப்பாவின் முகத்தைப் பார்த்தான்.

குமார் எரிச்சலடைந்தான். ஆனாலும் அப்பா என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலில் காத்திருந்தான். ஆனால் அவர் ஒன்றும் பேசவில்லை.

மீண்டும் சேகரே பேசத் தொடங்கினான்,

“அடுத்த பருவத்தில் மழை நன்றாகப் பெய்யலாம். இந்தக் கொடிய நிலைமை மாறும். பஞ்சம் விலகும். எங்கும் பசுமை விரியும். இரைக்காக நம் தோட்டத்துக்கு வந்த பறவைகள் போட்ட எச்சம் நாம் பயிர் செய்த நிலம் மட்டுமல்லாது, பயிர் செய்யாத நமது பக்கத்து விளை நிலத்திலும் விழுந்திருக்கும். அடுத்ததாக நாம் செய்யும் வேளாண்மையில் நிறைய விளைச்சல்களுக்கு இவை எல்லாம்  உதவும். இழந்ததை விட அதிகமாகவே நாம் தானியங்களை மீட்டெடுப்போம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றான்.

சேகரின் தோளைத் தொட்டுப் பாராட்டிய புத்தி சிகாமணி, “உன் விருப்பம் என் விருப்பம்” எனக் கூறியவாறே இரண்டு மகன்களின் தோள்களிலும் கை போட்டுக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தார்.

பறவைகளின் ‘கீச்கீச்’ ஒலிகள் எல்லாப் பக்கங்களிலும் பயணித்துக்கொண்டிருந்தன!

-பெ. திவ்யா

logo
Kalki Online
kalkionline.com