சிறுகதை - சுழல் கோப்பை!

Running race...
Short story
Published on

கேசவன் மனம் வெதும்பினான். ‘‘எப்போதுமே இரண்டாவது இடம்தானா? சே! எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் மாதவன்தானே முதலில் வருகிறான்!’’

மாதவனுடைய சுறுசுறுப்பு, அன்பான பேச்சு, களையான முகம், இனிமையான குரல் – இவற்றைப் பாராட்டாதவர்களே அந்தப் பள்ளியில் இல்லை. ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவன் தங்கள் பாடங்களில் அதிக மதிப்பெண் வாங்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும் அவனுடைய விளையாட்டுத் திறன் கண்டு வியக்கவே செய்தார்கள்.

கேசவன், மாதவனைக் காட்டிலும் படிப்பில் கெட்டிதான். அவனுடைய அப்பா ஒரு டாக்டர். அவனை நன்றாகப் படிக்க வைத்தார். கேசவனிடம் அவருக்குத் தனிப்பாசம், செல்லம் எல்லாம் உண்டு. ஒரே பிள்ளையாயிற்றே!

மாதவன் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுடைய அப்பாவுக்கு ரயில்வேயில் வேலை. தவிர அவர் முன்னாள் விளையாட்டு வீரரும் கூட. ‘புலிக்குப் பிறந்தது பூனையாகாது’ என்பது போல மாதவனும் இரண்டு வருடங்களாக சாம்பியன்ஷிப் பட்டத்தையும், அதற்கான கோப்பையையும் பெற்று வந்தான். இது மூன்றாவது வருடம். இந்த வருடமும் அவன் சாம்பியனாகி விட்டால், கோப்பை அவன் வசமாகிவிடும்.

மாதவன் வருவதற்கு முன் கேசவன்தான் அப்பள்ளிக்கூடத்து சாம்பியன். இரண்டு வருட வெற்றிக்குப் பின் மூன்றாவது வருட வெற்றியில் சுழல் கோப்பை தன் வசமாகிவிடும் என்ற நினைப்பில் கேசவன் இருந்தபோது மாதவன் அப்பள்ளியில் சேர்ந்து, தன் திறமையைக் காண்பித்து சாம்பியனானான். அப்படி ஆரம்பித்து வளர்ந்ததுதான் மாதவன் மீதான வெறுப்பு.

‘‘மாதவா, நீ மெடிகல் செக்கப் பண்ணிக்கிறாயோ?’’ என்று ஒருநாள் கேசவன் கேட்டான்.

‘‘இல்லேடா. இந்த வயசிலே எதுக்கு செக்கப்?‘‘ என்றான் மாதவன்.

‘‘சேச்சே! அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. மாதவா. நமக்குத் தெரியாமல் நோய்க் கிருமிகள் நம் உடலுக்குள் இருக்கலாமே.’’

‘‘அப்படியானால் சரி, செக்-அப் பண்ணிக்கறேன். ஏன் கேசவா, உன் அப்பா டாக்டர்தானே? அவர் கிட்டயே பண்ணிக்கலாமா? எவ்வளவு ஃபீஸ் கேட்பார்?’’ சிரித்துக் கொண்டே கேட்டான் மாதவன்.

‘‘சேச்சே; நமக்குள் எதற்கடா ஃபீஸ்? என் அப்பாகிட்டே நான் சொன்னால் உனக்கு இலவசமாகவே பார்ப்பார்,‘‘ என்று கூறிய கேசவன், மாதவனுடைய சம்மதத்தைப் பெற்றுக் கொண்டான்.

அன்றிரவு கேசவன் தன் தந்தையிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தான். அவர் குழப்பத்தில் ஆழ்ந்தார்.

மறுநாள் மாதவன் அவருடைய நர்ஸிங்ஹோமுக்கு வந்தான். அவனுடைய கள்ளம், கபடமற்ற சிரிப்பைக் கண்டு மனம் நெகிழ்ந்தார் டாக்டர். தயக்கத்துடன், ‘‘மாதவா’’ என்றழைத்தார்.

‘‘என்ன டாக்டர்?’’

‘‘வந்து... என் மகனைப் பற்றி நினைக்கவே எனக்கு வெட்கமாக இருக்கப்பா. உனக்கு மெடிக்கல் செக்கப் செய்யறாப்பல செஞ்சு, உன் உடம்பிலே ரத்தம் கெட்டுப் போயிருக்குன்னு சொல்லச் சொன்னாம்ப்பா அவன்.’’

‘‘ஏன் அப்படிச் சொன்னான் அவன்?’’

‘‘இந்த வருடமும் நீ விளையாட்டில் சாம்பியனானால், சுழல் கோப்பை உன் வசமாகி விடுமாம்; அதைத் தடுக்கத்தான் இப்படி யோசனை.’’

‘‘சரி டாக்டர், நாம ஒண்ணு பண்ணுவோம்,‘‘ என்று கூறிய மாதவன், அவரிடம் தன் திட்டத்தைச் சொன்னான்.

மறுநாள் பள்ளியில் கேசவனைப் பார்த்த மாதவன், ‘‘ கேசவா, எனக்கு ரத்தம் கெட்டுப் போயிருக்காம். உன் அப்பா டெஸ்ட் பண்ணிட்டுச் சொன்னார். ஏதேனும் அடிபட்டால், காயத்தில் ரத்தம் உறையாமல் போய்க்கொண்டே இருக்குமாம்… அதனால நான் எந்த விளையாட்டுப் போட்டியிலும் கலந்துக் கொள்ளக் கூடாதாம்.’’

‘‘ஐயையோ! அப்படியா?‘‘ என்று போலியாகப் பரிதாபப்பட்டான் கேசவன்.

‘‘அதற்கு என்ன பண்ண முடியும் கேசவா; முதலில் உடம்பைத்தானே பார்த்துக் கொள்ள வேண்டும்?’’ என்று மாதவன் பதிலளித்தான்.

டாக்டரிடம் தான் விவரித்த திட்டப்படி மாதவன் வேறு ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விட்டான். அதே சமயத்தில் கேசவனுடைய அப்பா ஐந்து கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஒரு வீட்டில் குடியேறினார். அதனால் மாதவனை சந்திப்பது கேசவனுக்கு இயலாததாக இருந்தது. இது கேசவன், டாக்டர், இருவருக்கும் வெவ்வேறு விதத்தில் நிம்மதியாக இருந்தது.

ஒருநாள் மாலை மாதவன் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. கேசவனின் அப்பா வந்திருந்தார்.

‘‘வாங்க டாக்டர்’’ – வரவேற்றான் மாதவன்.

‘‘பேசறதுக்கு நேரமில்லை மாதவா, சீக்கிரம் வா.’’ என்று கூப்பிட்டபடி மாதவனைக் காரில் ஏற்றிக் கொண்டார் டாக்டர். போகிற வழியில், ‘‘போல்வால்ட் ப்ராக்டிஸ் செய்யும்போது கேசவன் உயரத்திலிருந்து தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது மாதவா. மல்டிபிள் ஃப்ராக்சர்,’’ என்றார் டாக்டர்.

‘‘ஐயோ!’’ பதறினான் மாதவன். ‘‘எப்படி அவன் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்…? கடவுளே!‘‘

இதையும் படியுங்கள்:
What can Superpowers do to you if you had them?!
Running race...

‘‘அவன் இரண்டு மாசம் படுக்கையில்தான் இருக்கணும்.’’

நர்ஸிங்ஹோமுக்குள் கார் நுழைந்தது. மாதவன் உள்ளே ஓடினான். கேசவனைப் படுக்கையில் பார்த்ததுமே அவன் கண்களில் நீர் துளிர்த்தது. கேசவனும் ‘கோ’வென்று கதறி விட்டான். ‘‘என்னை மன்னிச்சிடு மாதவா. அப்பா எல்லாவற்றையும் சொன்னார். உன்னை ஓடவிடக் கூடாது என்று நினைத்த என்னால் ஓட முடியாமல் போய்விட்டது! போட்டியில்தான் திறமை வளரும்; பொறாமையால் அல்ல என்று நான் தெரிந்து கொண்டேன்?’’

மாதவன் ஆதரவாகக் கேசவனை அணைத்துக் கொண்டான். ‘‘விரைவில் உன்னால் ஓட முடியும், கவலைப்படாதே,’’ என்று ஆறுதல் சொன்னான் மாதவன்.

கேசவன் வெகுநேரம் அழுது கொண்டிருந்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com