

ஜனவரி மாதம் வந்தாலே எல்லோருக்கும் குஷிதான்; குறிப்பாகத் தமிழ்நாட்டில் தொடர்ந்து விடுமுறை நாட்கள். போகி, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம் எனத் தொடர்ந்து பண்டிகைகள் வருவதால், சிறுவர் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்பவர்கள் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.
இது ஒரு அறுவடைத் திருநாள்; சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது தமிழ் பழமொழி. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த விளைபொருட்களைச் சந்தையில் விற்று, தங்கள் உழைப்பிற்கான பலனைப் பெறும் காலம் இது. அறுவடை செய்த புதிய அரிசியை வைத்து வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் செய்து, சூரியனுக்கு நைவேத்தியம் படைத்து மகிழ்வார்கள்.
தமிழ்நாடு வீரத்திற்குப் பெயர் போனது. பொங்கல் பண்டிகையின் போது வீரம் மிக்க இளைஞர்கள் 'ஜல்லிக்கட்டு' விளையாடுவது வழக்கம். இதைக் காண வெளிநாட்டவர் கூட வந்து உற்சாகமாகப் பங்கு பெறுவார்கள்.
பொங்கல் அன்று கரும்பு மிக முக்கியமானது. சிறுவர், சிறுமியர் கரும்பை விரும்பிச் சுவைப்பார்கள். பொங்கலைப் போலவும், கரும்பின் சுவையைப் போலவும் இனி வரும் வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே அனைவரும் இதைக் கொண்டாடுகிறார்கள்.
குறிப்பு: கேரளாவில் பொங்கல் அன்றுதான் 'மகர ஜோதி' நிகழ்வு நடைபெறுகிறது. இதேபோல் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம் என இந்தியா முழுவதும் இது வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல் அன்று கிராமங்களில் மாடுகளைக் குளிப்பாட்டி, மாலை அணிவித்து, அலங்காரம் செய்து அவற்றை 'மகாலட்சுமியாக' வழிபடுவார்கள்.
விவசாயிகளின் வாழ்க்கை சூரியனையும் மாட்டையும் சுற்றியே அமைந்துள்ளது.
மாடுகள் இல்லையென்றால் நிலத்தை உழ முடியாது. இன்று டிராக்டர்கள் வந்திருந்தாலும், பல கிராமங்களில் இன்னும் ஏர் பிடிக்க மாடுகளே பயன்படுகின்றன.
பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என அனைத்தையும் எந்தப் பலனும் எதிர்பாராமல் மாடுகள் நமக்குக் கொடுக்கின்றன.
மாடுகள், ஏர்க்கலப்பை மற்றும் விவசாய உபகரணங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்நாள் அமைகிறது. பல இடங்களில் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, குடும்பத்தினருடன் கிராமத்தைச் சுற்றி வந்து மகிழ்வார்கள். நம் நாட்டில் பசுவை 'காமதேனு' என்று போற்றி வணங்குகிறோம்.
இந்நாளில் மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்குச் சென்று மகிழ்வார்கள். நகரங்களில் வசிப்பவர்கள் மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம் போன்ற பொது இடங்களுக்குத் தங்கள் குடும்பத்தினருடன் செல்வார்கள். சினிமா ரசிகர்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி; தங்களுக்குப் பிடித்தமான நடிகர்களின் திரைப்படங்களைத் திரையரங்குகளில் கண்டு மகிழ்வார்கள்.
கிராமங்களில் காணும் பொங்கலை 'உழவர் திருநாள்' என்றும் அழைப்பார்கள். இது விவசாயிகளின் கடின உழைப்பை நினைவூட்டும் நாள்.
விவசாயி தன் வேர்வையைச் சிந்திப் பயிரை வளர்க்கிறான்.
ஆரம்பம் முதலே அவனுக்குப் பல போராட்டங்கள்: நல்ல விதை மற்றும் உரங்கள் கிடைப்பதில் சிரமம், அதிக விலை, கடன் சுமை எனப் பல இன்னல்கள்.
இயற்கைச் சீற்றங்கள், போதிய மழையின்மை அல்லது கனமழையினால் பயிர் சேதமடைதல் எனப் பல சவால்களைச் சந்திக்கிறான்.
இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் நமக்காக உழைக்கும் உழவர்களைப் போற்றும் விதமாகவே 'உழவர் தினம்' கொண்டாடப்படுகிறது.