
கமலாவும், பேபியும் ஒரே வகுப்பில் படித்து வந்தார்கள். இருவரும் ஒன்றாய் தான் வீட்டுப் பாடங்கள் கூட எழுதுவார்கள். ஒன்றாவே பள்ளிக்குச் செல்வார்கள். ஒரு வயதான பெண்மணி அவர்களை வழிநடத்திச் செல்வாள். இரண்டு இரண்டு பேராக ஒரே வரிசையில் வண்டி தொடர் போல தினமும் அழைத்துச் செல்வாள். ஸ்கூல் ஆயா என்பதுதான் அவளின் பட்டப்பெயர். அது 'இஸ்கோல் ஆயா' என்றும் திரிந்திருந்தது.
கையில் ஒரு நீண்ட குச்சியை வைத்திருப்பாள். அக்கம் பக்கம் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தால் குழந்தைகளை அந்த குச்சியால் செல்லமாக முதுகில் தட்டி, சரியா பாத்து நடந்து வா என்பாள். வண்டித் தொடர் மாதிரி செல்லும் பிள்ளைகள் ஒவ்வொரு வீட்டிற்கும் முன்னே நின்று நின்று செல்ல வேண்டும். சில குழந்தைகள் அடம்பிடிக்கும். சில குழந்தைகள் சந்தோஷமாக வரும்.