
ஒரு பெரிய இராஜ்ஜியத்தில் சோமதத்தன் என்ற கட்டிடக் கலை நிபுணர் இருந்தார். அரசரின் அன்பிற்கும், மதிப்பிற்கும் பாத்திரமான சோமதத்தன், அரச குடும்பத்திற்கான மாடமாளிகைகள், அரண்மனைகள், அரசப் பிரதிநிதிகளின் இல்லங்கள், கோவில்கள், பூங்காக்கள் ஆகியவற்றை வடிவமைத்து உருவாக்குவதில் நிபுணர். அவருடைய மேற்பார்வையில் உருவான கட்டிடங்கள் தரமானதாக இருந்தன.
மற்றவர்கள் ஏதும் குற்றம் சொல்ல இடம் கொடுக்காமல் தரமான பொருட்களையே கட்டிடம் கட்ட உபயோகிப்பார். அவரின் கீழ் பலர் வேலை செய்து வந்தாலும், சோமதத்தன் மேற்பார்வை, வேலை தொடங்கி, செய்து முடித்த பணியை, அரசு அதிகாரியிடம் ஒப்படைக்கும் வரை இருக்கும். அவரின் நேரடிப் பார்வையில் எல்லா செயல்களும் நடப்பதால், அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணி அப்பழுக்கற்றதாக இருப்பதுடன், தரமும் ஒப்பற்றதாக இருக்கும்.