
மயூரபுரி என்ற தேசத்தின் அடர்ந்த காட்டில் ஒரு துறவி குடில் அமைத்து, தவம் இயற்றி வந்தார். குடில் அருகில், ஒரு சிறிய ஓடை இருந்தது. நாள்தோறும் அதில் அதிகாலையில் குளித்துவிட்டு வருவார்.
அப்படி குளிக்கும் பொழுது, ஒரு கொக்கு அவரையேப் பார்த்துக் கொண்டிருக்கும். கொக்கிற்கு துறவி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. ஓடையிலிருந்து குடிலுக்கு அவ்வப்போது வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. நாளடைவில், துறவியின் நற்பண்புகளையும், பழக்கவழக்கங்களையும் பார்த்த கொக்கு, தாமும் அவரைப் போலவே வாழ வேண்டும் என்ற எண்ணம் அதன் மனதிற்குள் ஏற்பட்டது.
அதனைச் செயல்படுத்தும் வகையில், துறவி தியானத்தில் அமரும்பொழுது, பக்கத்திலேயே கொக்கும் தியானத்தில் அமர்ந்துவிடும். இதனால் கொக்கு இரை தேடும் எண்ணத்தை விட்டது. அதன் காரணமாக உடல் மெலிந்துவிட்டது. மிகவும் வாட்டமாக, நடக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
துறவி கொக்கிடம், "கொக்கே, நீ ஏன் உடலை வருத்திக் கொள்கிறாய்? உணவை எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே?" எனக் கேட்டார்.
"வேண்டாம்! நானும் உங்களைப் போலவே சாத்வீகமாக இருக்கப்போகிறேன்" என்றது. "கொக்கே! அது உன்னால் முடியாது" என்றார் துறவி. "என்னால் முடியும்" என்றது கொக்கு.
"இதோ பார்! கொக்கே! இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு இயல்பான குணத்தையும், உணவுப் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளான் இறைவன். அதனை மீறுவது இயற்கையை எதிர்த்துப் போராடுவது போலாகும். அது உன் வாழ்க்கைக்கு நல்லதல்ல" என்றார்.
"இல்லை! என்னால் முடியும்" என்றது கொக்கு.
இப்படி உரையாடல் நடக்கும்போதே திடீரென பெருமழை பெய்ய, ஓடை நிரம்பி துறவியின் குடிலுக்கருகே வெள்ளம் பெருக்கெடுத்தது. அதில் நிறைய மீன்கள் துள்ளிக் குதித்தவாறே ஓடி வந்தன. சட்டென ஒரு பெரிய மீனைத் தன் அலகால் கவ்விக்கொண்டது கொக்கு.
துறவி சிரித்தவாறே கொக்கைப் பார்த்தார். கொக்கு, தன் இயல்பான குணத்தை மாற்றமுடியவில்லை என ஒப்புக்கொண்டு ஓடையை நோக்கி பறந்து சென்றது.