அரசர் தெனாலிராமனுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் இருவர் மட்டும் தனிமையில் இருந்தனர். பல விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது, செய்யும் தொழில் குறித்து பேச்சு வந்தது.
அரசர் கூறினார், "தொழில்களிலேயே திருடுவதுதான் மிகவும் சுலபமான வேலை,".
வேறு யாராவது இருந்திருந்தால் அரசர் கூறியதற்கு ஒத்துப் போய் தலையாட்டி இருப்பார்கள்.
விவேகம் நிறைந்த தெனாலிராமன் கூறினான், "அரசே ! எந்த வேலையும் சுலபம் இல்லை, திருடுவது உட்பட..!"
அரசருக்கு தெனாலிராமன் கூறியதில் உடன் பாடு இல்லை. திருடுவது சுலபம் என்று நிரூபித்துக் காட்டுவதாக சவால் வேறு விட்டார். செயலில் இறங்க தயார் ஆனார். அன்று இரவே பாத்திரக் கடையிலிருந்து, ஒரு பாத்திரத்தை வெற்றிகரமாக திருடிக் கொண்டு வருவதாக கூறினார்!
"சரி", என்றான் தெனாலிராமன். கூடவே, அரசர் மாறு வேடத்தில் செல்வது உசிதம் என்று யோசனை கூறினான்.
அன்று இரவு உற்சாகத்துடன் மாறு வேடத்தில் திருட சென்றார் அரசர்.
பாத்திர கடை ஒன்றின் உள்ளே புகுந்த அரசர் செயலில் இறங்கினார். அங்கே பல பாத்திரங்கள் அடுக்கி வைக்கப் பட்டு இருந்தன ஒன்றின் மேல் ஒன்றாக. அங்கே இருந்த பெரிய பாத்திரத்தைப் பார்த்ததும் அரசருக்கு அதை திருடி எடுத்து செல்ல வேண்டும் என்ற ஆசை அதிகம் ஆனது ( அரசரும் மனிதர் தானே). எடுத்தும் விட்டார்.
செம்மையாக மாட்டிக் கொண்டார். கூடிய கூட்டத்தில் , இரண்டு தர்ம அடியும் கொடுத்தனர்.
விபரீதம் ஏதாவது நடக்கும் என்று எதிர் பார்த்த தெனாலிராமன் அரசர் அறியா வண்ணம் பின் தொடர்ந்து வந்தான் சிறிது தொலைவில். அங்கு தோன்றி தெனாலிராமன், திருடனை ( மாறு வேடத்தில் இருந்த அடையாளம் தெரியாத அரசரை) தனியாக அழைத்து சென்று விட்டான்.
நடந்தது இது தான்... திருட்டு குறித்த எந்த அனுபவமும் இல்லாத அரசர் கீழே கவிழ்த்து வைத்து இருந்த, அவர் திருட ஆசைப் பட்ட அந்த பெரிய பாத்திரத்தின் மேலே அடுக்கி வைத்து இருந்த பல பாத்திரங்களை கவனிக்காமல், பெரிய பாத்திரத்தை கைகளால் பிடித்து இழுத்தார். மேலே அடுக்கி வைத்து இருந்த பாத்திரங்கள் பெருத்த சப்தங்களோடு கீழே விழ, திருடன் பிடிபட்டான்.
மறு நாள் தெனாலிராமனைப் பாராட்டி தக்க சன்மானம் அளித்து, அனுபவம் பட்ட அரசர் ஒப்புக் கொண்டார் எந்த தொழிலும் சுலபம் இல்லை, திருடுவது உட்பட என்று.