
ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் ஒரு பாம்பு இனம் பிளாக் மாம்பா (Black Mamba) உலகில் மிக மிக அதிக விஷத்தன்மை உடைய பத்து பாம்புகளில் பிளாக் மாம்பாவும் ஒன்று. இந்த பாம்பைப் பற்றிய பல தகவல்களை இப்ப நாம தெரிஞ்சுக்கலாமா குட்டீஸ்?
பிளாக் மாம்பா பாம்பானது சராசரியாக எட்டு முதல் பதிமூன்று அடி நீளமுடையதாகக் காணப்படுகின்றன. பிளாக் மாம்பா பாம்புகள் ஆலிவ் கிரீன், கிரேயிஷ் பிரௌன் மற்றும் டார்க் ஆலிவ் நிறம் என பலவிதமான நிறங்களில் காணப்படுகின்றன. இப்பாம்புகளின் வாய்க்குள் உள்ள பகுதிகள் கறுப்புநிறத்தில் அமைந்துள்ள காரணத்தினால் இவை பிளாக் மாம்பா என அழைக்கப்படுகின்றன.
பிளாக் மாம்பாவின் விஷமானது இருபது நிமிடங்களுக்குள் ஒரு மனிதனைக் கொன்றுவிடும் அளவிற்கு வீரியமுடையது. ஒருமுறை இவை கொத்தினால் சுமார் 120 மில்லிகிராம் விஷமானது வெளியேறும். சுமார் பத்து மில்லிகிராம் விஷமே ஒரு மனிதனைக் கொல்லப் போதுமானது. பிளாக் மாம்பா பாம்பு யாரையாவது தாக்க நினைத்தால் தலையை தன் உடல் அளவில் மூன்றில் ஒரு பங்கு உயரத்திற்கு உயர்த்திப் பின்னர் பின்பக்கமாகச் சாய்த்து கோபமாக “ஹிஸ்” என்று பெரும் சத்தத்தை எழுப்பும். அப்போது அது தன் வாயைத் திறக்கும். வாய்க்குள் உள்ள கறுப்புப்பகுதியையும் அதன் கொடிய விஷப்பற்களையும் காட்டி நம்மை பயமுறுத்தும்.
இவை ஒரு மணிநேரத்தில் சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓடும் தன்மை படைத்தவைகளாக விளங்குகின்றன.
பிளாக் மாம்பா பாம்புகள் இரவு பகல் என இரண்டு வேளைகளிலும் சுறுசுறுப்பாகத் தங்களுடைய உணவை வேட்டையாடும் இயல்புடையவை. இவை விஷத்தை உயிரினங்களின் மீது செலுத்தி அவற்றைச் செயலிழக்கச் செய்துவிடும். பறவை போன்றவற்றைக் கொன்றதும் அவற்றை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் இயல்பும் இப்பாம்பிற்கு உண்டு. இவை நிலத்தில் வாழும் காட்டு அணில் போன்றவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. சில சமயங்களில் மட்டுமே பறவைகளைப் பிடித்துச் சாப்பிடுகின்றன. இவற்றின் பார்வை மிகவும் கூர்மையாக அமைந்துள்ளதால் பறவைகள், பல்லிகள் போன்ற தனது உணவினை மிகத் துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கி அவற்றைச் செயலிழக்கச் செய்து சாப்பிடும் திறனும் பெற்றுள்ளன.
பிளாக் மாம்பா பாம்புகள் கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு எத்தியோப்பியா முதல் தென் மேற்கு ஆப்பிரிக்கா வரை உள்ள பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தியாவில் இப்பாம்புகள் இல்லை.
பெண் பிளாக் மாம்பா பாம்பானது கருவுற்ற பின்னர் ஐம்பத்தி ஐந்து நாட்கள் கழித்து சுமார் பத்து முதல் இருபத்திஐந்து முட்டைகளை இடுகின்றன. பிளாக் மாம்பா குட்டிகள் முட்டையிலிருந்து வெளியே வந்த உடனேயே சிறு சிறு பிராணிகளைத்தானே பிடித்துச் சாப்பிடும் திறமை உடையவை. பிறந்த பிளாக் மாம்பா குட்டிகள் சுமார் ஐம்பத்தியோரு சென்டிமீட்டர் நீளமுடையவைகளாக உள்ளன. ஒரே வருடத்தில் இவை சுமார் ஆறு அடிகள் அளவிற்கு வளர்ந்து விடுகின்றன.
பிளாக் மாம்பா பாம்புகள் அதிகபட்சமாக சுமார் பனிரெண்டு ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. அனைத்து ஊர்வனவற்றைப் போல பிளாக் மாம்பா பாம்பானது குளிர்ந்த இரத்தத்தை உடைய ஓர் உயிரினம். எனவே இவை உடல் சூட்டைப் பெற சூரிய ஒளியை நம்பியிருக்கிறது. பகல் நேரங்களில் இவை தனது உடலை சூரிய ஒளியானது படும்படி வைத்துக்கொள்ளும்.
இரவு நேரங்களில் தரைப்பகுதியில் இருக்கும் குழிக்குள் பதுங்கிக் கொள்ளும். மேலும் இவை பாறைகள் மற்றும் உடைந்து விழுந்த பெரிய மரக்கிளைகளுக்குள்ளும் மறைந்து கொள்ளும். இவை தரையிலிருந்து சுமார் மூன்று அடி உயரத்திற்குத் தனது தலையை உயர்த்தும் வல்லமை பெற்றுள்ளது. மேலும் இவை தரையில் ஓடும் சமயங்களில் தனது தலையை சுமார் ஐம்பது சென்டிமீட்டர் உயரத்திற்குத் தூக்கியபடி ஓடும் ஆற்றலையும் பெற்றுள்ளது.