ஒரு ஆப்பிளை கடிக்கும்போதோ அல்லது ஒரு மாம்பழத்தின் சாற்றை உறிஞ்சும்போதோ, ஒரு வாழைப்பழத்தை சுவைக்கும்போதோ இவையெல்லாம் எங்கே முதன்முதலாக விளைந்தது என்பது பற்றி யாராவது சிந்திருப்போமா? நம் நாட்டில் விளையும் பல பழங்களின் பூர்வீகம் வெளிநாடுகள்தான். அங்கே முதன்முதலாக விளைந்து பின் இங்கே வளர்ந்தவைகள் அவைகள்.
மனிதர்களால் பயிர் செய்யப்பட்ட மிகப்பழமையான பழம் மாதுளம் பழம்தான். இதனுடைய பூர்வீகம் ஆப்கானிஸ்தான் மற்றும் பெர்சியா. இது அந்நாளில் மிகவும் பிரசித்தி பெற்ற பழம். சாலமன் மன்னன் தன்னுடைய தோட்டத்தில் பிரத்தியேகமாக "சிகப்பு மாதுளை " மரங்களை வளர்த்து வந்தாலும். அதன் பிறகு இப்பழம் எகிப்தில் விளைவிக்கப் பட்டு பின் உலகெங்கும் வியாபாரம் செய்த பிறகு உலகெங்கிலும் பரவியது.ஒரு சராசரி அளவுடைய மாதுளையில் 600 விதைகள் அல்லது முத்துகள் இருக்கும். பெரிய மாதுளையில் 1400 முத்துகள் வரை இருக்கும். மாதுளை ‘வைட்டமின் சி, கே’ மற்றும் போலேட், நார்ப் பொருட்கள் நிரம்பியது.
அன்னாசி பழத்தின் தாயகம் பிரேசில், கொலம்பஸ் தான் இப்பழத்தை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். இந்தியாவிற்கு இப்பழம் 5 ம்நூற்றாண்டில் போர்ச்சு கீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு மற்ற ஆசிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவியது. போர்ச்சுகீசியர் அன்னாசிப் பழத்தை தவிர்த்து பப்பாளி பழத்தையும், சீத்தாப்பழத்தையும் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார்கள். பப்பாளியின் பூர்வீக இடம் மெக்ஸிகோ. சீதாப்பழத்தின் தாயகம் அமெரிக்கா.
ஆசியாவின் ராஜா என்று அழைக்கப்படும் "மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். மாம்பழம் இந்தியாவில் விளைந்தாக பல இதிகாசங்கள் கூறுகின்றன. காளிதாசனின் மேகதூதத்திலும், இராமயணத்திலும் இப்பழத்தை பற்றிய செய்திகள் உள்ளன. தற்போது மாம்பழத்தில் 5000 வகைகள் உள்ளன. உலகின் பழைய பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. இதன் பூர்வீகம் இந்தியா. பின்னர் இது அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிவாளிகளின் பழம் வாழையின் அறிவியல் பெயர் ‘மூசா செபியண்டம்’. இதன் பொருள் என்ன தெரியுமா? ‘புத்திசாலிகளின் கனி’ என்பதாகும். தாவரவியல் அடிப்படையில் வாழை ஒரு மூலிகையாகவே கருதப் படுகிறது. உலகிலேயே அதிகம் விற்பனையாகும் பழம் வாழைப்பழம்தான்.
பழங்களின் ராஜா ஆப்பிள் முதன்முதலாக விளைந்த இடம் காகாசஸ் மலைத்தொடர் இது ரஷ்யாவில் உள்ளது. இப்பழம் கற்காலத்தில் இருந்தே பயிர் செய்யப்பட்டு வருகிறது. ஆப்பிள் மரம் ஆண்டிற்கு சுமார் 400 ஆப்பிள்கள் வரை காய்க்கும். சூப்பர் மார்க்கெட்டுகளில் சுமார் 6 மாதம் முதல் 12 மாதம் வரை பராமரிக்கப்பட்டு ஆப்பிள்கள் விற்கப்படுகின்றன.
திராட்சை பழங்களை பற்றி பைபிளில் பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் பூர்வீகம் காஸ்பியன் கடல் பகுதி. இதன் படிவங்கள் முதன் முதலாக எகிப்து மற்றும் சிரியாவில் 4 ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது. இது விதை மூலம் வளர்வதில்லை செடி மூலம் வளர்கிறது. அதனால் இதை செடி என்றும் கொடி என்றும் கூறுகிறார்கள்.
கோடையில் ஏற்படும் எல்லா பிரச்னைகளிலிருந்தும் நம்மைக் காக்கிறது தர்பூசணி. உடல் சூட்டைத் தணிக்கும்; வெப்பம் மிகுந்த இந்தக் காலத்தில் இது நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.இந்த தர்பூசணிப்பழத்தின் பூர்வீகம் எகிப்து. இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து தான் உள்ளது.
சப்போட்டா பழத்தின் பூர்வீகம் அமெரிக்கா. அதேபோல கொய்யாப் பழத்தின் பூர்வீகமும் அமெரிக்கா தான், கொய்யாப் பழம் 17 ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது இதன் விளைச்சலில் நம்பர் ஒன் இந்தியாதான். நாம் எலுமிச்சையே ‘விட்டமின் சி’. மிகுந்த கனியாக நினைக்கிறோம். ஆனால் ஆரஞ்சில் அதைவிட 1.5 மடங்கு ‘விட்டமின்-சி’ உள்ளது. கிவி பழத்தில் ஆரஞ்சைவிட இரு மடங்கு ‘விட்டமின்-சி’ காணப்படுகிறது. அனைத்தையும்விட அதிகமாக கொய்யாப்பழத்தில் எலுமிச்சையைப்போல சுமார் 6 முதல் 7 மடங்கு ‘விட்டமின்-சி’ காணப்படுகிறது. சராசரியான ஒரு கொய்யாப்பழத்தில் 377 மில்லிகிராம் ‘விட்டமின்-சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆரஞ்சு பழத்தின் பூர்வீகம் தென் சீனா ஆனால் உலகெங்கிலும் இப்போது பயிராகிறது. ஆனால் ஆரம்பத்தில் இது பணக்காரர்கள் மட்டுமே உண்ணும் பழமாக இருந்தது. அக்காலத்தில் இங்கிலாந்தில் கண்ணாடி மாளிகை பண்ணைகளில் தான் இது பயிர் செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் ஆரஞ்சு ஒரு காட்டுச் செடியாக கேட்பாரற்று இந்தியாவில் பரந்து கிடந்த உள்ளது. வியாபார நோக்கில் இந்தியா வந்த அரேபியர்கள் தங்களது நாட்டிற்கு எடுத்துச் சென்று பயிரிட்ட பின்னர் தான் உலகெங்கிலும் ஆரஞ்சு பயிரிடப்பட்டடது. தற்போது அமெரிக்க ஆரஞ்சு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
உலகம் முழுவதும் புகழ்பெற்ற பழம் என்றால் அது தக்காளிதான். தக்காளியில் 94.5 சதவீதம் தண்ணீர் உள்ளது. தக்காளி மத்திய அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் 1893-ல் தக்காளி, காய் கறியா, பழமா என்று வழக்கு நடத்தப்பட்டு, அது காய் கறியின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.