சிறுவர் கதை: பகையும் நட்பாகும்!

Tamil Children's story pagaiyum natpaagum
Two boys
Published on

கிராமத்திலிருந்து மாமா வருகிறார் என்றாலே சுப்ரமணியனுக்குக் கொண்டாட்டம்தான். அவனுக்குப் பிடித்த பனங்கிழங்கு, சில்லுக் கருப்பட்டியெல்லாம் வாங்கி வருவார். அதோடு, சென்னையில் சில பொழுதுபோக்கு இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் செய்வார்.

அவர் வந்த தினம் ஞாயிற்றுக்கிழமை. பொருட்காட்சி சாலைக்குப் போகலாம் என்ற சுப்ரமணியனின் யோசனையை மாமா ஏற்றுக் கொள்ள, அவ்வாறே இருவரும் போனார்கள். ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். ஐஸ்க்ரீம் ஸ்டாலிலிருந்து ஆளுக்கு ஒரு கோன் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு, அருகில் இருந்த மணல் பரப்பில் அமர்ந்து கொண்டார்கள். சுப்ரமணியன் ஆவலுடன் ஐஸ்க்ரீமை சுவைக்க ஆரம்பித்தான். அப்போது அந்த பக்கமாக ஒரு சிறுவன் வேகமாக ஓடிப்போக அவனுடைய கால் செருப்பு பட் பட்டென்று அடித்து மணலை வாரிவிட்டது. அந்த மணல் துகள்கள் அப்படியே கொத்தாக இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸ்க்ரீம் மீது வந்து விழுந்தன.

சுப்ரமணியனுக்கு முகம் வாடிவிட்டது. மாமாவுக்கோ ஏகப்பட்ட கோபம். ‘‘டேய் தம்பி. மெதுவாகப் போகத் தெரியாது? ஐஸ்க்ரீமைப் பாழ்பண்ணிட்டியே‘‘ என்று உரக்கக் கத்தினார்.

அந்தப் பையனோ, ‘‘சாரி அங்கிள். தெரியாம பண்ணிட்டேன்‘‘ என்று கேட்டு, சுப்ரமணியனிடமும் திரும்பி, ‘‘சாரி, ஃப்ரண்ட்...’’ என்று வருத்தம் தெரிவித்தான்.

ஆனால் மாமா விடுவதாக இல்லை. ‘‘நீ ஏன் அப்படி ஓடினே?’’ என்றே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது நடுத்தர வயதுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ‘‘என்ன சரவணா, என்ன ஆச்சு?’’ என்று அந்தப் பையனைப் பார்த்துக் கேட்டார்.

‘‘அப்பா, நான் ஓடி வந்ததிலே மணல் சிதறி இவங்க சாப்பிட்டுகிட்டிருந்த ஐஸ்க்ரீம்ல விழுந்திட்டுது. அதுக்குதான் இந்த அங்கிள் கோபிச்சுக்கறார். நானும் சாரி கேட்டுட்டேன் அப்பா’’ என்றான் சரவணன்.

‘‘ஏன் சார், இவன்தான் சாரி கேட்டுட்டானே, இன்னும் எதுக்காக இவனை கோவிச்சுக்கறீங்க? வேணும்னா உங்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்திடறேன்,’’ என்று சமாதானமாகப் பேசினார், சரவணனின் அப்பா. ஆனால் கோபம் குறையாமல் மாமா வாதாட, பதிலுக்கு அவரும் சண்டைக் குரலில் பேசினார்.  

சிறுவர்கள் இருவரும் அதிர்ச்சியுடன் பெரியவர்களைப் பார்த்தார்கள். தன்னால் இந்தப் பையனுக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட முடியாமல் போய்விட்டதே என்று சரவணன் வருத்தப்பட்டான். சுப்ரமணியனும் தன் மாமா கொஞ்சம் ஓவர்தான் என்று நினைத்துகொண்டான். பக்கத்திலிருந்த சிலர் வந்து சமாதானப்படுத்தியதில் ஒருவழியாக சண்டை ஓய்ந்தது.

பொருட்காட்சிசாலையை முழுமையாக சுற்றிப் பார்த்துவிட்டு, பேருந்து நிறுத்தத்தை நோக்கிப் போனார்கள் மாமாவும், சுப்ரமணியனும். ஏகப்பட்ட கூட்டம். ஒரு பேருந்து வந்தபோது, சுப்ரமணியன், ‘‘மாமா, நீங்க முன் பக்கமா ஏறுங்க; நான் பின்பக்கமா ஏறறேன். ஆளுக்கு ஒரு சீட் கிடைச்சா, டக்குனு பக்கத்து சீட்டைப் பிடிச்சுக்கலாம்,’’ என்றான்.

இதையும் படியுங்கள்:
The Adventure of Hanuman and the Lost Ring!
Tamil Children's story pagaiyum natpaagum

அதன்படி இருவரும் ஆளுக்கு ஒர் இரட்டை இருக்கையைக் ‘கைப்பற்றினார்கள்’. உடனே, மாமா, ‘‘மணி, இங்க வா, என் பக்கத்திலே வந்து உட்காரு,’’ என்று அழைத்தார். அவனோ, ‘‘வேண்டாம் மாமா, அதோ வராரே அவருக்கு அந்த சீட்டைக் கொடுத்திடுங்க,’’ என்றான். கூடவே, ‘‘டேய், சரவணா, இங்க வா,’’ என்று ஐஸ்க்ரீம் சண்டைக்குக் காரணமான பையனைக் கூப்பிட்டான். அவனும் ஓடிவந்து அமர்ந்துகொண்டான். சிறுவர்கள் இருவரும் எந்தப் பகையும் இல்லாமல் சிரித்துப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

மாமா திரும்பிப் பார்த்தார். சுப்பிரமணியன் குறிப்பிட்டது சரவணனின் அப்பாவை! பளிச்சென்று சண்டையை மறந்த மாமா, அவரை வலிய கூப்பிட்டுத் தன் பக்கத்தில் அமருமாறு சொன்னார். அவரும் வெட்கத்துடன் சிரித்தபடி அமர்ந்து கொண்டார். உடனேயே இருவரும் நண்பர்களாகவும் ஆகிவிட்டார்கள். 

சிறு பையன்கள் தங்களுக்கு அன்பையும், நட்பையும் மறைமுகமாக போதித்ததை எண்ணி முதலில் வெட்கப்பட்டார்கள். பின் நல்ல நண்பர்களும் ஆனார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com