
மட்டம் போட்டு பள்ளிக்கு
பட்டம் ஒன்று வாங்கினேன்
வீடு வந்து நூலிணைத்து
மொட்டைமாடிக்கோடினேன்
தட்டிகொடுத்து தட்டிகொடுத்து
மெல்ல மெல்ல ஏற்றினேன்
வாலைக் குழைத்து வாலைக் குழைத்து
விறுவிறுவென பறந்தது
மேலே மேலே போகணும்னு
அடமும் கூட பிடித்தது
பறக்கும் ஆசை தணியவில்லை
வட்டமிட்டு திரிந்தது
என்ன வேண்டும் பட்டத்திற்கு
சட்டென்றெனக்கு புரிந்தது
இந்தா உனக்கு விடுதலை
விட்டு விட்டேன் நூலினை
நீல வானில் சிவப்பு பட்டம்
சிட்டென மறைந்து போனது
பட்டத்திற்கு விடுதலையளித்து
பள்ளி சிறைக்கு திரும்பினேன்
இதயம் கொஞ்சம் கனத்தது
இருந்தும் எங்கோ இனித்தது
ஜடப்பொருள் என்று கவிஞனுக்கு
உலகில் எதுவும் இல்லையே
மனம் வராது அவனுக்கு
எதற்கும் கொடுக்க தொல்லையே