
ஆசிரியர் மாணிக்கத்தின் வகுப்பு என்றாலே, அவருடைய மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இருப்பர். ஏனென்றால், பள்ளியில் நடப்பில் தீர்மானிக்கப்பட்ட பாடத்திட்டங்களைச் சொல்லித்தருவதோடு நிற்காமல், அவ்வப்பொழுது அவருடைய வகுப்பு நேரத்தில் குழு விவாதம் அல்லது கவிதை / கட்டுரைப் போட்டிகளை நடத்தி, மாணவர்களே சுயமாகச் சிந்தித்து எழுதவும், பேசவும் வாய்ப்பளிப்பார்.
அதைப்போல, அன்றும் அவர் தன் மாணவர்களிடத்தில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பேசுமாறு ஒரு அறிவிப்பைக் கொடுத்தார்.
"இன்று நகரம் மற்றும் மாநகரப் பகுதிகளில் உள்ள மக்கள், சொந்தமாகத் தனிவீடுகளைக் கட்டி குடியேறுவதைத் தவிர்த்து, அபார்மெண்டுகள் எனப்படும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீட்டை வாங்கி வசிப்பதைப் பார்க்க முடிகிறது. மாநகரங்களின் முக்கியப் பகுதிகளில் குடியேற விரும்புகிறவர்களுக்கு, இந்தக் குடியிருப்புகளே மிகவும் வசதியான வழியாக இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த அடுக்கு மாடி வீடு குடியிருப்பு வாழ்க்கை முறையைப் பற்றி உங்களுடைய கருத்தைச் சுருக்கமாக சொல்லுங்கள். அது சாதாரண வாக்கியமாகவோ, கவிதையாகவோ கூட இருக்கலாம்" என்று மாணவர்களிடம் சொன்னார்.