
அருணனும் வருணனும் நல்லூரில் வாழ்ந்து வந்தார்கள். பெற்றோர்கள் இல்லாத அவர்களை சீத்தாப்பாட்டி தான் வளர்த்து வந்தாள். சகோதரர்கள் இருவரும் பிரம்மபுரியில் உள்ள குருகுலத்தில் சேர்ந்து படிக்க விரும்பினர்.
“சரிதான் பேரப்பசங்களா ! நானும் எவ்வளவு நாள் தான் உங்களைப் பார்த்துக் கொள்ள முடியும் ? நீங்கள் பிரம்மபுரிக்குச் சென்று கல்வியும் தொழிலும் கற்று வாழ்க்கையில் முன்னேறுங்கள்” எனச் சீத்தாப்பாட்டியும் அவர்கள் பயணத்துக்கு ஏற்பாடு செய்தாள்.
அருணனும் வருணனும் புறப்படும் முன் பாட்டியின் காலில் விழுந்து வணங்கினார்கள். கட்டி அணைத்த பாட்டி, “இந்தாங்க, இதைப் பத்திரமா வச்சுக்கோங்க “ என்று சொல்லி ஒரு சுருக்குப் பையையும் ஒரு சிறு மூட்டையையும் கொடுத்தாள்.
”என்ன பாட்டி இது ?” என்றான் அருணன்.
குரலைத் தாழ்த்தி கிசுகிசுப்பாகப் பேசினாள் பாட்டி.