
தன் பேச்சை முடித்துவிட்டு பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் அமைதியாக மேடையிலிருந்து வந்து அமர்ந்தான் மதன்.
மேடைத் தலைவர் எழுந்து வந்து கைகுலுக்கி மிகவும் பாராட்டினார் மதனை.
திடீரென்று மயான அமைதி. பல வருடங்கள் பின் நோக்கி நினைவலைகளில் நீந்தி சென்று கொண்டிருந்தான் மதன்.
***
"என்னடா தூக்கம், எழும்புடா"?
"நான் தூங்கவில்லை சார்"
மதனை யாரும் " டா" போட்டு அழைப்பதில்லை. நெருங்கிய நண்பர்கள் கூட. ஐந்தாம் வகுப்பு… சமய பாடம்.
ஆசிரியர் மீண்டும் அதட்டினார். "சொல்லுடா ஒரு தேவாரம்! வகுப்புக்கு முன்னால் போய் சொல்லு!" மீண்டும் அதே அதட்டல்!
மற்ற மாணவர்களுக்கு முன் நின்ற மதனுக்கு பாதங்கள் நடனமாடத் தொடங்கின. கால்களில் சிறு ஈரமும் கண்களில் சில ஈரமும்... நல்ல வேளை யாரும் கவனிக்கவில்லை.
மதன் தேவாரம் பாட முயன்றான். சத்தம் வரவில்லை.