சிறுவர் சிறுகதை: "ஆக்ராவில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?" அக்பர் கேள்விக்கு பீர்பால் சொன்ன கணக்கு!

Akbar's test to Birbal
Akbar and Birbal stories
Published on

அக்பர் நாட்டின் பரிபாலனத்தில், பீர்பாலின் ஆலோசனையைக் கேட்பது வழக்கம். இது அரசவையிலிருந்த மற்ற மந்திரிகளுக்கு பீர்பாலின் மீது பொறாமையைத் தோற்றுவித்தது. “அரசர், பீர்பாலின் சொல்படி நடக்கிறார். நம்மிடம் ஆலோசனை கேட்பதில்லை. ஆகவே, அவரிடம் நம்முடைய குறையைத் தெரிவிப்பது” என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஒரு நாள் அரசவை கூடியபோது, மந்திரிகள் அக்பரிடம், “நீங்கள் உங்களுடைய சந்தேகங்களை எப்போதும் பீர்பாலிடம் மட்டும் கேட்கிறீர்கள். எங்களிடமும் கேட்கலாமே! உங்கள் மனதில் எழுகின்ற சந்தேகங்களுக்கு எங்களாலும் பதில் அளிக்க முடியும்” என்றனர்.

மந்திரிகளின் குறைகளைப் பொறுமையாகக் கேட்ட அக்பர் சொன்னார்: “எந்தக் கேள்விக்கும் பீர்பால் தக்க பதிலை வைத்திருக்கிறார். அவரால் என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வைக்க முடிகிறது.”

“இல்லை, எங்களாலும் முடியும்,” என்றனர் அமைச்சர்கள்.

“நல்லது, அப்படியானால், ஆக்ராவில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன். அப்படி உங்களால் பதிலளிக்க முடியவில்லை என்றால், அந்தக் கேள்விக்கு பீர்பாலின் பதிலைக் கேட்பேன்,” என்றார் அக்பர்.

மந்திரிகள் கூடிப் பேசினார்கள். பல வழிகளிலும் யோசித்துப் பார்த்தார்கள். அரசர் கொடுத்த ஒரு வாரக் கெடு முடிவிற்கு வந்தது.

“காக்கைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பறந்து கொண்டிருக்கும். அவை நிலையாக ஒரே இடத்தில் இருக்காது. ஆகவே, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது இயலாத காரியம். இந்தக் கேள்விக்கு பீர்பாலாலும் தகுந்த விடையளிக்க முடியாது. வேறு வழியில்லை, அரசரிடம் எங்களால் முடியவில்லை என்று ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். பீர்பால், என்ன பதிலளிக்கிறார் என்று பார்ப்போம்,” என்று முடிவெடுத்தனர்.

மகாராஜாவிடம், தங்களால் ஆக்ராவில் இருக்கும் காக்கைகள் எண்ணிக்கையைக் கணக்கிட முடியவில்லை என்றனர் மந்திரிகள்.

அக்பர், பீர்பாலிடம், “ஆக்ராவில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன என்று உங்களால் சொல்ல முடியுமா? வேண்டுமானால், கணக்கிட ஒரு வாரம் அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றார்.

இதையும் படியுங்கள்:
கஷ்டமான பாடம் ஈஸியாக மாற... டாப் 5 சீக்ரெட் டிப்ஸ்!
Akbar's test to Birbal

“நீண்ட அவகாசம் வேண்டாம், மகாராஜா. நாளை காலை உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்,” என்றார் பீர்பால்.

மற்ற மந்திரிகளுக்கு இந்தப் பதில் ஆச்சரியமாக இருந்தது. ஆக்ராவில் பறக்கும் எல்லா காக்கைகளையும் பிடித்து, கூண்டில் அடைத்து, எண்ணிப் பார்ப்பது என்றால் கூட ஒரு நாள் போதாதே. பின்னர் எப்படி பீர்பால், ஒரு நாளில் பதில் சொல்வார் என்று யோசித்தார்கள்.

அடுத்த நாள் அரசவை கூடியது. பீர்பாலின் பதிலைக் கேட்க எல்லோரும் ஆவலாக இருந்தார்கள்.

“என்ன பீர்பால், காக்கைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து விட்டீர்களா?” என்று கேட்டார் அக்பர்.

“ஆமாம், மகாராஜா, ஆக்ராவில் நாற்பத்து நான்காயிரத்து எழுநூற்று முப்பத்து நான்கு காக்கைகள் இருக்கின்றன,” என்றார் பீர்பால்.

“நீங்கள் சொன்ன எண்ணிக்கை சரியா? தவறென்றால், அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவிக்க நேரிடும்,” என்றார் அரசர்.

“என்னுடைய எண்ணிக்கையில் தவறில்லை,” என்றார் பீர்பால்.

“காக்கைகளின் எண்ணிக்கையை அரசு கணக்கிடும் போது, அரசு எண்ணிக்கை, உங்களுடைய எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தால்?” என்று கேட்டார் ஒரு அமைச்சர்.

“அப்படியிருந்தால், மற்ற ஊர்களிலிருந்து காக்கைகள் தங்களுடைய உறவினர்களைப் பார்க்க ஆக்ரா வந்திருக்கும். நான் கணக்கெடுக்கும் போது, மற்ற ஊர்களிலிருந்து உறவினர் வீட்டிற்கு வந்துள்ள காக்கைகளின் எண்ணிக்கையைச் சேர்க்கவில்லை. அவற்றைச் சேர்க்கவும் கூடாது. ஏனென்றால், அவை ஆக்ராவைச் சேர்ந்தவை அல்ல,” என்றார் பீர்பால்.

“ஒருவேளை, உங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால்?” என்றார் அக்பர்.

“நான் கணக்கெடுத்தப் பிறகு, சில காக்கைகள், தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வெளியூர் சென்றிருக்கும்,” என்றார் பீர்பால்.

வாய் விட்டுச் சிரித்தார் அக்பர். மந்திரிகளைப் பார்த்துச் சொன்னார்: “ஆக்ராவில் இருக்கும் காக்கைகளின் எண்ணிக்கையை நான் கேட்டேன். இந்தக் கேள்வியால், அரசுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ என்ன நன்மை? அந்தக் கணக்கெடுப்பு ஒரு தேவையற்ற வேலையல்லவா? அதனைப் புரிந்து கொண்ட பீர்பால், அதை நமக்குப் புரிய வைக்கும் விதமாகத் தக்க பதிலை அளித்துள்ளார். இப்போது, உங்களுக்குப் புரிந்திருக்கும், நான் ஏன் பீர்பால் கருத்துக்குச் செவி சாய்க்கிறேன் என்று.”

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: செய்யும் தொழிலே தெய்வம்!
Akbar's test to Birbal

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com