

"என்னங்க நம்ம விக்கியப் பார்த்தீங்களா?" என்றாள் சுமதி.
"இல்லையே... வீட்டிலதானே இருந்தான்? எங்க போனான்?யாருக்கும் பொறுப்பே கிடையாது! அவனை யாருமே பாத்துக்கறது இல்லை."
"ஆமா, அவன் எங்க கிட்ட எங்க ஒட்டறான் பாருங்க! நீங்கதான் அவனைச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்கீங்க. அந்தத் திமிர்லதான் சொல்லாம கொள்ளாம ஓடிருக்கான்" என்றாள் சுமதி.
அனைவரும் அக்கம் பக்கத்துத் தெரு முழுவதும் தேடினார்கள். எல்லோரும் "நாங்க பாக்கலையே" எனக் கையை விரித்தார்கள்.
திடீரென மழை மேகங்கள் சூழ்ந்து இருட்டியது; இடி மின்னல் தாக்கியது. பருவம் தவறிய வானிலையால் காற்று சீறிப்பாய்ந்தது. சாலைகளில் மரங்கள் சாய்ந்தன! உடனே மின்வாரியத்தின் மெயின் லைன் நிறுத்தப்பட்டது. இருட்டு... எங்கும் இருட்டு!
சுமதி தன் கணவர் பாஸ்கரைக் கூப்பிட்டாள்: "போங்க... மழையைப் பார்க்காதீங்க! போய் நீங்களும் தேடுங்க."
"சரி, ரெயின்கோட்டை எடு. செல்போன் கூட வேலை செய்யல. நடந்தாவது போய் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்திட்டு வரேன்," என்றார் பாஸ்கர்.
"சரிங்க, விக்கியோட போட்டோ சுவத்துல மாட்டிருக்கே, அதை எடுத்திட்டுப் போங்க. போலீஸ் ஸ்டேஷன்ல அடையாளத்துக்குக் கேட்பாங்க," என்றாள் சுமதி.
கடும் இருட்டில் பாஸ்கர் கிளம்பினார். வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஸ்டேஷனுக்கு நடந்தே வந்தார்.
"வணக்கம் இன்ஸ்பெக்டர், உங்களத்தான் பார்க்க வந்தேன். நான் பாஸ்கர்."
"என்ன விஷயம்?" என இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"ஒன்னுமில்லீங்க..." என்று போட்டோவைக் காண்பித்து, "இவன் எங்க விக்கி. ஈவினிங்லேர்ந்து காணாம போயிட்டான். அவனைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுங்க," என்றார்.
போட்டோவைப் பார்த்ததும் இன்ஸ்பெக்டர் சிரித்தார். "அட! நல்ல மழை... அதோட நனைஞ்சு, மரமெல்லாம் விழுந்தபோது கத்திக்கிட்டே ஸ்டேஷன் பக்கம் வந்தாப்ல. என்னோட மகனுக்குப் பொமரேனியன் குட்டிதான் பிடிக்குமேன்னு நான் தான் தூக்கிக்கிட்டுப் போனேன். அதோட அவனுக்கு இன்னைக்குப் பர்த்டே வேற! அதனால நான்தான் தூக்கிட்டுப் போய் நல்லாத் துவட்டி, சாம்பிராணி எல்லாம் போட்டு, சாப்பாடு கொடுத்து அவன்கிட்ட கொடுத்தேன். வாங்க, ஸ்டேஷன் பின்னாடிதான் குவார்ட்டர்ஸ்..." என அழைத்துப்போனார்.
"இல்ல சார்... என்னோட பையனுக்குப் பிரமோஷன் கிடைச்சிருக்கு. பெங்களூரு போறான். நாங்களும் அங்கே போறோம். ரிட்டர்ன் வர ஆறு மாசம் ஆகும். மேலும் என்னோட ஒய்ப்-க்கு நாய்கள்னாலே பிடிக்காது. அதனால உங்க பையனுக்குப் பர்த்டே கிப்டா விக்கி இங்கேயே வளரட்டும்! என்னைப் பார்த்தா என்னோட ஓடி வந்துடுவான். நீங்களே வச்சுக்கோங்க" எனச் சொல்லிவிட்டு மழை நின்றதும் நிம்மதியுடன் வீட்டுக்குப் புறப்பட்டார் பாஸ்கர்.