
ஹாய் குட்டீஸ்!
ஆணவத்தால் அழிந்த காக்கை பற்றிய கதைதான் இது. பேராசை பெரு நஷ்டம். வாங்க குட்டீஸ், கதையைப் பார்ப்போமா!
ஒரு காட்டில் ஒரு காக்கா வாழ்ந்து கொண்டிருந்தது. அது உணவுக்காக ரொம்பவும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டுச் சாப்பிட்டு வந்தது. ஒரு நாள் அது ஓய்வெடுக்க ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தது. அப்போது அதோட தலைக்கு மேலே ஒரு குட்டி செம்மறி ஆடு பறப்பதுபோல தெரிந்தது. "என்னடா இது அதிசயம், செம்மறி ஆடு பறக்குது?" என்று பார்த்தால், அதை ஒரு பெரிய கழுகு தூக்கிட்டுப் போனது.
"என்னடா இது, நம்மளும் தான் நல்லா பறக்கிறோம்; நமக்கு ஏன் இந்த சிந்தனையே வரல, நல்லா இதை ஒரு மாசத்துக்கு வைத்துச் சாப்பிடலாமே?" என யோசித்துக்கொண்டு, ஒரு வாரம் முழுக்க ஆடுகள் இருக்கும் இடத்தை தேடி அலைந்தது. ஒரு வழியாக, ஒரு பெரிய ஆட்டுக்கூட்டத்தை கண்டுபிடித்தது காக்கா.
பகலில் ஆடுகள் குறைவாக இருந்ததால், மாலை நேரம் வரட்டும், எல்லா ஆடுகளும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழு கொழுத்து இருக்கும் என அங்கிருந்த மரத்திலேயே காவல் இருந்தது காக்கா. செம்மறி ஆடுகளும் மாலை நேரம் ஆனதும் அந்தக் கொட்டிலுக்கு வந்தடைந்தன. அப்போது காக்காவுக்கு வேறு யோசனை ஒன்று உதித்தது.
"கழுகு தூக்கிச் சென்றது சின்ன குட்டி ஆடுதானே! அது மூளை இல்லாமல் தூக்கிச் சென்றுவிட்டது. நாம் தான் அதி புத்திசாலி ஆயிற்றே! நல்ல பெரிய கொழுத்த ஆட்டை தூக்கிவிட வேண்டியதுதான்" என முடிவு செய்தது. அந்தக் கூட்டத்தில் பெரிய செம்மறி ஆட்டைத் தேடி, கண்டுபிடித்தது.
ஆட்டின் அருகில் சென்று, எப்படித் தூக்கிச் செல்லலாம் என ஒத்திகை பார்த்தது. அதன் அலகுகளை விரித்து சரி செய்தது. கால்களை ஆட்டைத் தூக்குவதற்கு சரியாக எப்படிப் பிடிக்கலாம் என மடக்கிப் பார்த்தது. "சரி, இனி ஆட்டின் மேல் ஏறி தூக்கிட்டுப் போக வேண்டியதுதான்" என முடிவுக்கு வந்தது.
ஆட்டின்மேல் உட்கார்ந்து, அதன் கழுத்தில் தன்னுடைய அலகால் கவ்வ முயற்சி செய்தது. காகத்தால் அதைச் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு வகையிலும் தனது அலகை விரித்து, விரித்துப் பார்த்து முயன்றது. ஆனால், அதனால் முடியவில்லை. "சரி, இது வேலைக்கு ஆகாது. இனி சின்ன ஆட்டுக்குட்டியை தூக்கிட்டுப் போக வேண்டியதுதான்" என எண்ணியது.
உடனே காகத்தால் செம்மறி ஆட்டின் மேலிருந்து வெளியே வர முடியவில்லை. இறக்கையை விரித்துப் பறக்க முயற்சி செய்தும் பறக்க முடியவில்லை. காகத்தோட கால்கள் செம்மறி ஆட்டின் கடினமான ரோமங்களில் மாட்டிக்கொண்டன.
செம்மறி ஆட்டின் மேல் இருந்த காகத்தால் கால்களை சிறிதும் அசைக்க முடியவில்லை. யாரோ வருவதை உணர்ந்த காகம், தன் இறக்கைகளை அசைக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தது. கூடாரத்திற்கு வந்த அதன் உரிமையாளர், காகம் அசையாமல் இருந்ததைக் கண்டு, அதன் அருகில் சென்றார். தன்னுடைய ஆட்டைக் கடிக்க முயற்சி செய்திருப்பதைப் பார்த்த அவர், காகத்தைப் பிடித்து, அதன் கால்களில் கயிற்றைக் கட்டி, தனது குழந்தைகளுக்கு விளையாடக் கொடுத்தார். இப்போது காக்கா மாட்டிக்கொண்டு பரிதவித்தது. தப்பிக்கவே முடியவில்லை.
ஆகையால் குட்டீஸ், நமக்கு என்ன முடியுமோ அதைச் செய்தால் மட்டும்போதும். அதுவே நமக்கு நன்மை பயக்கும். அதைவிடுத்து, மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சிசெய்வதோ, அதில் நம்மால் முடியாத ஒன்றிற்கு பேராசைப்படுவதோ, விபரீதத்தில்தான் முடியும் என இக்கதை உணர்த்துகிறது.