
அவள் ஒரு கொடை வள்ளல் கொய்யா மரம்
பார்ப்பேன் அவளை பள்ளிக்கு போகையில் அனுதினம்
பத்து கிளை கைகளோடு நிற்பாள் நிழல் தந்து
பழம் ஒண்ணொண்ணும் வெளிர் பச்சை பந்து
தின்ன வரும் கிளி கூட்டம் பழங்களை கொத்தி
சொல்லவேண்டாம் அணில்களின் அட்டகாசம் பத்தி
மரத்திலேறி பறிக்கும் பள்ளிக்கூட பசங்கள்
தோன்றிக்கொண்டே இருக்கும் கிளைகளில் பழங்கள்
பாரக்கவில்லை இவளை வெறும் மரமாய்
பாவித்தோம் பூமா தேவியின் கரமாய்
ஒரு நாள் அவள் வீட்டின் அதிபன்
அழைத்து வந்தான் ஒரு மர அறப்பன்
வெட்ட துவங்கினான் அவள் கரங்களை
மறந்து அவள் தந்த அளவற்ற பழங்களை
பறவைகள் கதறி பறந்தன நாலா புறமும்
பார்த்திட, கரையும் கல் போன்ற மனமும்
உதிர்ந்த இலைகள் முறிபட்ட கிளைகள்
மிதிபட்ட பிஞ்சு காய்கள் பழங்கள்
மரம் நின்ற இடம் மாறிற்று போர் களமாய்
குழந்தைகள் கண்கள் ஆயிற்று குளமாய்
மறுநாள் வந்த போது அந்த பக்கம்
இல்லை கிளிகள் அணில்கள் சத்தம்
அப்படி ஒரு நிசப்தம் நெஞ்சை அழுத்தும்
இப்போது நினைத்தாலும் எனக்கு இதயம் கனக்கும்