இளைஞர்கள் இடையே மிகப்பிரபலமான உறியடி விளையாட்டு... உங்களுக்கு தெரியுமா?

உறியடி...
உறியடி...Image credit - dailythanthi.com
Published on

றியடித்தல் சில இடங்களில் பானை உடைத்தல் என்றும் அழைக்கப்படுகிறது.  கண்ணன் பிறந்த நாளில்  நடைபெறும் விளையாட்டுதான் உறியடி. கிருஷ்ண ஜெயந்திக்கு இளைஞர்களால் விளையாடப்படும் மிக பிரசித்தமான விளையாட்டு உறியடி. 

உறியடி விளையாடும் முறை: இந்த விளையாட்டை விளையாட இரு மூங்கில் கம்புகள் நடப்பட்டு அவற்றிற்கு இடையே கயிற்றை கட்டி கயிற்றின் நடுவே மண்பானையை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விடுவர். சற்று தூரம் தள்ளி எல்லை கோடுகள் போடப் பட்டிருக்கும். 

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் அனைவரும் அந்த எல்லை கோட்டில் வரிசையில் நிற்க வேண்டும். கலந்து கொள்பவர்களின் கண்களை ஒருவர் துணியால் கட்டி அவர்கள் கையில் ஒரு நீளமான கம்பை கொடுத்து அவர்களால் திசையினைக் கண்டுபிடிக்க முடியாதவாறு நான்கைந்து சுற்றுகள் சுற்றி விடுவார். இவ்வாறு சுற்றி விடுவதால் பானை இருக்கும் திசையை அவ்வளவு எளிதாக குறிப்பால் அறிய முடியாது. 

குறிப்பிட்ட நேரத்திற்குள் பானை இருக்கும் திசையை நோக்கி சென்று கையிலுள்ள கம்பினால் யார் பானையை உடைக்கிறார்களோ அவரே போட்டியில் வென்றவராவர். அவருக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

பானையை உடைப்பது அவ்வளவு எளிதன்று. ஏனெனில் சுமார் 20 அடி உயரத்தில் பானையை உரி கயிற்றால் கட்டி தொங்க விட்டிருப்பர். மேலும் கண்ணை கட்டி இருப்பவர் கம்பினால் பானையை அடிக்கும் போது தொங்கும் பானையை ஒருவர் கீழும் மேலுமாக ஏற்றி இறங்குவார். அதனால் அது அடிப்பவர்க்கு மேலும் சிக்கலைத் தரும். அதாவது  கண்ணை கட்டி கொண்டே ஏறி இறங்கும் பானையை குறிபார்த்து அடித்து உடைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பானையை உடைப்பது மட்டுமல்லாமல் எல்லைக் கோட்டை தாண்டாமல் பார்க்க வேண்டும். 

இவ்வாறு பானையை குறிப்பிட்ட நேரத்திற்குள் உடைப்பதற்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். வெற்றி பெற்றவருக்கு பரிசுகளும், பணமுடிப்புகளும் கொடுக்கப்படும். 

ஒவ்வொரு நாட்டிலும் இதே விளையாட்டு ஒரு சில மாற்றத்தோடு உலகெங்கும் விளையாடப்படுகிறது. இந்தியாவில் குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் கிருஷ்ண ஜெயந்தியின் போது இந்த விளையாட்டு பள்ளியில் விளையாடப்படுகிறது.

உயரத்தில் தொங்கும் வெண்ணெய் பானையை பல மாணவர்கள் ஒன்று சேர்ந்து பிரமிடு போல் ஒருவர் மீது ஏறி நின்று உயரத்தில் இருக்கும் பானையை எடுப்பார்கள். இதை மனித பிரமிடு என்று அழைக்கிறார்கள்.

விளையாட்டின் பயன்கள்: இந்த விளையாட்டு இயங்கி கொண்டிருக்கும் பொருளின் மீது குறி வைத்து தாக்கும் திறமையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தி தன்னம்பிக்கையை கொடுக்கிறது. 

இதையும் படியுங்கள்:
எல்லாவற்றிலும் உள்ள நல்லவற்றைப் பாருங்கள்!
உறியடி...

இந்த விழாவின் பின்னணி தத்துவம்: பானை என்பது பரம்பொருள். அது நமக்கு எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது. பரம் பொருளின் காலடியை சேர எத்தனை எத்தனை அலைகழிப்புகளில் சிக்கி அல்லாட வேண்டியிருக்கிறது. இந்த தடைகளை மீறி கடந்து தட்டு தடுமாறி பரம்பொருளை நெருங்க வேண்டியுள்ளது. பரம்பொருளில் சேரவேண்டும் என்ற ஒரே சிந்தனை, அகங்காரம் என்னும் உறியடி பானையை உடைக்க வைக்கும். அகங்காரம் போய்விட்டால் இறையருளும், முக்தி என்னும் பாக்கியமும் தேடிவரும். 

இது போன்ற விளையாட்டுகளை நம் சந்ததியினருக்கும் சொல்லிக் கொடுப்போம். தோல்விகளையும் நம்பிக்கையால் வெல்லும் ஊக்கத்தை அள்ளிக் கொடுப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com