தெனாலிராமன் கதை: கூண்டுக் கிளி!


The story of thenali Raman
children story...
Published on

காட்டில் வேட்டையாடிய வேடன் ஒருவன் ஒரு அழகான கிளியை பிடித்து அரண்மனைக்கு வந்து அரசனுக்கு பரிசாக கொடுத்து சென்றான். அந்த அழகான கிளி அரசனை மிகவும் கவர்ந்தது. அதெற்கென வெள்ளியிலே ஒரு கூண்டு செய்யச்சொல்லி அதில் அக்கிளியை விட்டு வளர்த்து வந்தான்.

அரசிக்கும் அந்த கிளி ரொம்பவும் பிடித்திருந்தது. இருவருமாக சேர்ந்து கொண்டு அக்கிளிக்கு நல்ல நாமாக்களையெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். அதுவும் அவர்கள் சொல்லியப்படியே பேசியது. ரங்கா! ரங்கா! என்றது. ராமா! ராமா! என்றது. சிவசிவா என்றது. இப்படி அது கடவுள் நாமாக்களை வெகு அழகாக உச்சரிப்பதை கண்டு அரசனும், அரசியும் மிக்கமகிழ்ச்சி அடைந்தார்கள்.

இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அந்த கிளிக்கு மதுரமான பழங்களையும் இனிப்பான தின்பண்டங் களையும், ஆசையாக ஊட்டி வந்தார்கள். அதுவும் நன்கு கொழு கொழுவென்று வளர்ந்தது.

அப்பொழுதுதான் தெனாலிராமன் தன் பூஜையை முடித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். நெற்றியில் திருநீறும், குங்குமப்பொட்டும், மார்பில் சந்தணமும் காதில் பூவுமாக இருந்தான்.

“பாவம் பறந்து திரியும் கிளியை பிடித்து இப்படி கூண்டில் அடைத்து விட்டீர்கள்” என்று பரிதாபப்பட்டான். “எங்கும் சுதந்திரமாக பறந்து திரியும் பட்சியாயிற்றே இது” என்றான்.

“அதிருக்கட்டும்! இதோ பார் தெனாலி ராமா! இந்த கிளி கடவுளிடம் எத்தனை பக்தியாய் இருக்கிறது தெரியுமா? எப்போது பார்த்தாலும் அது கடவுள் நாமத்தையே உச்சரிக்கிறது? அது செய்யும் பக்தியில் கால் பங்கு கூட உனக்குக் கிடையாது. பட்டை பட்டையாய் விபூதியை உடல் முழுவதும் பூசிக்கொண்டால் மாத்திரம் போதுமா!” என்றான் அரசன்.

அந்த கிளியை பெருமையாகச் சொல்லி, தெனாலிராமனை மட்டம் தட்டினான் மன்னன். அதற்குள் அரசியும் வந்து விட்டாள். ”நம் கிளியின் பக்தியைப் பற்றி தெனாலிராமனிடம் சொன்னீர்களா?” என்று மன்னனிடம் கேட்டாள்.

“ஆமாம், அதைப்பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்!” என்றான் மன்னன். அதற்குள் அந்தக்கிளியும் “ரங்கா! ரங்கா! ராமா! ராமா! சிவசிவா” என்றது.

“கேட்டாயா! எங்கள் கிளிக்குக் கடவுள்பால் எத்தனை பக்தி தெரியுமா?” என்று இருவரும் சேர்ந்து சொன்னார்கள். “அப்படி சொல்லவே சொல்லாதீர்கள்!” என்றான் தெனாலிராமன்.

என்ன! இப்படி சொல்கிறானே இவன்! என்று இருவரும் ஒருவர்க்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“ஏதோ நீங்கள் தரும் இனிப்பான பழங்களுக்கு ஆசைப்பட்டு நீங்கள் சொல்லி கொடுத்தது போல் அப்படிச் சொல்கிறதே யொழிய, உண்மையில் அதற்கு பக்தியும் கிடையாது; ஒன்றும் கிடையாது. இருக்கவும் முடியாது!” என்று அடித்துப் பேசினான் தெனாலிராமன்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: முயற்சி செய்தால் எதிலும் வெற்றியே!

The story of thenali Raman

“அப்படிச் சொல்லாதே தெனாலி ராமா! காதுபட கேட்டும் நீ அப்படிச் சொல்கிறாயே! எப்போதும் அதன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் கடவுள் நாமம்தான். நீயே நேரில் கேட்டும் இப்படிச் சொல்கிறாயே! என்று சற்று கோபமாகவே கேட்டான் மன்னன்.

“அவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்து விட்டீர்களா நீங்கள்?” என்று கேட்டபடி அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்த பூனையொன்றைப் பிடித்துக் கொண்டு வந்தான் அவன். அக்கிளிக் கூண்டின் அருகில் கொண்டுபோய் பூனையை சீற விட்டான். அவ்வளவுதான் அக்கிளி படபடவென்று இறக்கைகளை அடித்துக் கொண்டது! கீச்கீச் என்று அலறவும் தொடங்கியது.

“இப்போது அக்கிளியை கடவுள் நாமத்தை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் என்றான் தெனாலிராமன்.

“ஏன் சொல்லுமே! என்று கூறி இருவரும் திரும்ப திரும்ப கடவுள் நாமங்களை சொல்லிக் காட்டினார்கள். ஆனால் கிளியோ, தன்னை பார்த்து அப்பூனை நாக்கை குழைப்பதைக் கண்டு கீச்கீச் சென பெருங்குரலெடுத்துக் கத்தியது!

அப்போதுதான் அரசனுக்கும், அரசிக்கும் ஒருவாறு விளங்கியது. “தெனாலிராமா நீ சொன்னதும் சரிதான் என்றார்கள். அப்பேர்ப்பட்ட கிளி நமக்கு எதற்கு!”என்று சொல்லிக் கொண்டே அக்கூட்டை திறந்து விட்டான் தெனாலிராமன்.

கிளி ‘ஜிவ்’வென்று மேலே பறந்து சென்றது. பூனையும் ஏமாந்து ஓடியது. “அதுவும் சரிதான் என்றனர் அரசனும், அரசியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com