

மனித வாழ்வோடு ஐக்கியமானவை மரங்கள் என்பது நீங்கள் அறிந்ததுதானே குட்டீஸ்! அதனால்தான், 'தொட்டில் தொடங்கிச் சுடுகாடு வரை' - அதாவது மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை மரங்களின் உதவியுடனேயே வாழ வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது. நாம் உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனை அவை வெளிவிட்டு, நாம் வெளிவிடுகின்ற கார்பன்-டை-ஆக்சைடை அவை உள்ளிழுத்துக் கொள்கின்றன. இதிலிருந்தே நமக்கும் அவற்றுக்குமுள்ள தொடர்பு தெளிவாகிறது!
மரங்களைப் பற்றிய சில சுவாரசியமான விபரங்களைச் சற்றே பார்ப்போமா?
மரங்களின் அதிசயம்
மரங்கள் நீண்ட காலம் வாழக்கூடியவை; பத்தல்ல, நூறல்ல, ஆயிரம் ஆண்டுகள் கூட வாழக்கூடியவை! உறுதியான நடு மரத்தில், கிளைகளும் இலைகளுமாக விளங்குவதே நல்ல மரத்தின் இலக்கணம். கீழே உள்ள வேர் அதனைத் தாங்கிப் பிடித்துக் கொள்ளும். உலகில் எத்தனை மர வகைகள் உள்ளன தெரியுமா குட்டீஸ்? வாயைப் பிளக்காதீர்கள்! ஒரு லட்சம் வகையான மரங்கள் பூமியெங்கும் பரவியுள்ளனவாம்!
மரங்களும் பருவ காலங்களும்
ஓர் ஆண்டின் நான்கு பருவங்கள் மரங்களைக் கொண்டுதான் கணக்கிடப்படுகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்:
வசந்த காலம்: மரங்கள் துளிர்க்க ஆரம்பிக்கும்.
கோடை காலம்: பூத்துப் பிஞ்சாகி, காய்த்துப் பழுக்கும்.
இலையுதிர் காலம்: பழங்கள் பறிக்கப்பட்டு, இலைகளும் உதிர ஆரம்பிக்கும்.
குளிர்காலம்: இது மரங்கள் ஓய்வெடுக்கும் காலம். இக்காலத்தில் இலைகளின்றி, கிளைகள் மட்டும் தனித்து நிற்கும்.
மரங்களை ஏன் பாதுகாக்க வேண்டும்?
உயிர் காற்று: ஒரு ஹெக்டேரில் (சுமார் இரண்டரை ஏக்கர்) உள்ள வளர்ந்த மரங்கள், ஒவ்வோர் ஆண்டும் 45 மனிதர்கள் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனைத் தருகின்றன.
புவி வெப்பம் குறைப்பு: புவி வெப்பமடைவதற்குக் காரணமான கார்பன்-டை-ஆக்சைடை மரங்கள் சேமித்துக்கொள்வதால், பூமியின் வெப்பம் பெருமளவு குறைக்கப்படுகிறது.
இயற்கை சுத்திகரிப்பு: காற்றிலுள்ள அசுத்த வாயுக்களைச் சுத்தம் செய்யும் பணியையும் மரங்களே செய்கின்றன.
நிழலும் குளிர்ச்சியும்: சூரியனின் வெப்பத்திலிருந்து உயிரினங்களைக் காப்பதோடு, மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் மரங்களே 'ஏர் கண்டிஷனர்' போலச் செயல்படுகின்றன.
மண் பாதுகாப்பு: மரங்களின் வேர்கள் மண்ணை இறுகப் பிடித்துக் கொள்வதால், சத்துள்ள மேல் மண் மழையாலோ காற்றாலோ அரித்துச் செல்லப்படாமல் தடுக்கப்படுகிறது.
உயிரினங்களின் இல்லம்: பறவைகள், குரங்குகள், பூச்சிகள் போன்ற பல உயிரினங்களுக்கு மரங்களே வீடாக அமைகின்றன.
மரங்களின் மூன்று பெரும் பிரிவுகள்
அகல இலை மரங்கள்: ஓக், பிர்ச் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. இவை குளிர்காலத்தில் இலைகளை உதிர்க்கும். இதில் சுமார் 25,000 வகைகள் உள்ளன.
பனை வகை மரங்கள்: இதில் 3,000 வகைகள் உள்ளன. இவை பெரும்பாலும் வெப்பமான இடங்களில் வளர்கின்றன.
கூம்பு வடிவ இலை மரங்கள்: இவை ஆண்டு முழுவதும் பசுமையுடன் இருக்கும். இவை பூப்பதில்லை; கூம்புகள் மூலம் விதைகளைப் பரப்பி இனப்பெருக்கம் செய்கின்றன.
உலகிலேயே உயரமான மரம்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 'கடற்கரைச் செம்மரம்' (Coast Redwood) தான் உலகிலேயே உயரமானது. இதன் உயரம் 370 அடி (112 மீட்டர்)! இது அமெரிக்காவின் புகழ்பெற்ற லிபர்டி சிலையை விடவும் உயரமானது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
கொசுறுச் செய்தி
ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு வகை முள் மரம், ஒட்டகச்சிவிங்கிகள் போன்ற விலங்குகள் தன்னை உண்ண வரும்போது, ஒருவித கசப்பான வேதிப்பொருளைச் சுரந்து அவற்றைச் சாப்பிட முடியாமல் செய்துவிடுமாம்! அதுமட்டுமல்லாமல், ஒரு வகை வாயுவை வெளிப்படுத்தித் தன்னைப் சுற்றியுள்ள மற்ற மரங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துவிடுமாம்!
என்ன குட்டீஸ்! தகவல் தெரிந்ததும் மரக்கன்று நடும் உற்சாகத்தோடு கிளம்பிட்டீங்களா? ஜமாயுங்க!
குட்பை குட்டீஸ்! - டில் நெக்ஸ்ட்!