இந்தியாவிலுள்ள பல பொறியியல் கல்லூரி மற்றும் அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு உடைக் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பலதரப்பட்ட ஃபேஷன்களில் ஆடைகளை அணிகிறார்கள்.
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் தனித்துவமான பண்டிகைகளின் போது, மற்றும் சில கல்லூரி நிகழ்வுகளின் போதும் மாணவிகள் புடவைகள், குர்தாக்கள், சல்வார்கள், லெஹங்கா போன்ற பாரம்பரிய உடைகளை அணிகிறார்கள். இவை இந்தியாவில் தயாராகும் உடைகள் மற்றும் கைவினைத் திறன் மீதான ஆழமான ஈடுபாட்டைக் குறிக்கிறது. மேலும் அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் உதவுகிறது.
போஹோ என்று அழைக்கப்படும் போஹேமியன் உடைகள் ஒரு வேடிக்கையான மற்றும் சுதந்திரமான ஆடைகளைக் குறிக்கிறது. நீளமான மேக்ஸிகள், வண்ணமயமான ஸ்கர்ட்டுகள், லேஸ் அல்லது எம்பிராய்டரி கொண்ட மென்மையான மேலாடைகளைக் குறிக்கிறது. இவை பெரும்பாலும் பருத்தி அல்லது கைத்தறி போன்ற இயற்கையான துணிகளில் தயாராகின்றன. வெப்பமான க்ளைமேட்டுக்கு ஏற்றவையாக இருக்கும். இவற்றில் பூக்கள், பலவித வடிவங்கள் டிசைன் செய்யப்பட்டு, பல்வேறு வண்ணங்களில் வருகின்றன. இதனுடன் பெரிய தொப்பிகள், அழகிய ஆபரணங்களையும் மாணவிகள் அணிந்து கொள்கிறார்கள்.
தெரு உடைகள், இளம் பெண்களின் மிகப் பிடித்தமான உடையாக இருக்கிறது. பார்ப்பதற்கு சாதாரண ஆடைகளைப் போன்று தோன்றினாலும் இவை ஸ்டைலிஷ் ஆகவும் நவ நாகரிகத் தோற்றத்துடனும் இருக்கும். ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்றவற்றுடன் டி-ஷர்ட்டுகள் கிராப்ட் டாப்ஸ், பெரிய சட்டைகள் போன்றவற்றை அணிந்து கொள்கிறார்கள். பெரிய ஹூடிகள், கிராபிக் டீஸ், டெனிம் அல்லது பலாசோ பாண்ட்டுகள், இதற்கு மேட்ச் ஆக வண்ணமயமான டிசைன் கொண்ட குர்த்தாக்களை அணிகிறார்கள். காலணிகளைப் பொருத்தவரை ஸ்னீக்கர்கள், ஸ்லிப் ஆன்கள், செருப்புகள் போன்றவை இதற்கு மேட்ச் ஆக இருக்கிறது. சிலர் ஸ்டேட்மென்ட் காதணிகள், பேக் பேக்குகள், நவநாகரிக சன் கிளாஸ்கள் போன்றவற்றை மேட்ச் ஆக அணிந்து கொள்கிறார்கள்.
மேற்கத்திய மற்றும் பாரம்பரிய உடைகளின் கலவையை ஃப்யூஷன் உடைகளாக அணிகிறார்கள். பெரும்பாலும் பலாசாவுடன் கிராப் டாப்ஸ் ஜீன்ஸ் உடன் பாரம்பரிய குர்தா போன்றவை பாரம்பரியத்தையும் நவீன பாணியையும் ஒன்றாகக் கலந்து கொள்கிறார்கள்.
விளக்கக் காட்சி, ஃபேஷன் ஷோக்கள் மற்றும் தொழில் முறை நிகழ்வுகளுக்கு கல்லூரி பெண்கள் நேர்த்தியான முறையான ஆடைகளை தேர்வு செய்கிறார்கள். வடிவமைக்கப்பட்ட பிளேசர்கள், புது பாணியில் அமைந்த ஆடைகள், அதிநவீன ஜம்ப் சூட்டுகள் போன்றவற்றை அணிந்து கொள்கிறார்கள். இவை அவர்களின் தன்னம்பிக்கையையும் நேர்த்தியையும் வெளிப்படுத்துவதோடு பார்க்கவும் மிகவும் கம்பீரமாக தோற்றமளிக்கச் செய்கிறது.