

கடம்பூர் ஊருக்கு வெளியே அழகான தோட்டம் ஒன்று இருந்தது. அங்கு எல்லா வகையான மரங்களும், எல்லாவிதமான பயிர் வகைகளும் செழித்து வளர்ந்திருந்தன. தோட்டத்தை ஒட்டி இருந்த சாலை வழியே தேரை ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தத் தோட்டத்தைப் பார்த்தவுடன் அது வியப்பில் அப்படியே நின்றுவிட்டது.
சிறிது நேரம் கழித்து மெதுவாக அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்தது. அங்கு தவளை ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது. தவளையைப் பார்த்த தேரை, “இந்த அழகான தோட்டம் உங்களுடையதா?” என்று கேட்டது.
“ஆமாம், என்னுடையதுதான்! இந்தத் தோட்டம் இவ்வளவு அழகாக இருப்பதற்கு என்னுடைய கடின உழைப்பே முக்கிய காரணம்,” என்றது தவளை.
“எனக்கும் இப்படி ஒரு தோட்டம் அமைத்துக் கொடுப்பாயா?” என்று கேட்டது தேரை.
இதைக் கேட்ட தவளை, உடனே சில விதைகளைக் கொடுத்தது. “நீ இருக்கும் இடத்திற்குச் சென்று இதை மண்ணில் புதைத்து வை! உனக்கும் சீக்கிரம் ஒரு தோட்டம் உருவாகிவிடும்,” என்றது.
“எவ்வளவு சீக்கிரம் தோட்டம் உருவாகும்?” என்று கேட்டது தேரை.
“வெகு விரைவில்!” என்றது தவளை.
உடனே தேரை ஓட்டமும் நடையுமாகத் தான் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றது. அங்கு விதைகளைப் புதைத்துவிட்டு, “விதைகளே, இப்போதே வளருங்கள்!” என்றது.
சிறிது நேரம் கழித்து வெளியே சென்றுவிட்டு வந்த தேரை, விதைகள் புதைத்த இடத்தைப் பார்த்தது. ஆனால், விதைகள் வளரவில்லை. உடனே விதைகளுக்குப் பக்கத்தில் சென்று, அந்த இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே, “விதைகளே, சீக்கிரம் வளருங்கள்!” என்றது. அப்போதும் விதைகள் வளரவில்லை.
ஆத்திரமடைந்த தேரை, கோபமாக, “விதைகளே, வளருங்கள்!” என்று கத்தியது. அப்போது அங்கே தவளை வந்தது. தேரையின் சத்தம் கேட்டு அது வேகமாக ஓடி வந்தது. “ஏன் இப்படிச் சத்தம் போடுகிறாய்? உன்னுடைய சத்தத்தைக் கேட்டு விதைகள் பயந்து கொண்டு வெளியே வரவில்லை,” என்றது தவளை.
“என்னுடைய விதைகள் பயத்தால் வளரவில்லையா?” என்று கேட்டது தேரை.
“ஆமாம்! இந்த விதைகளை அதன் போக்கில் விட வேண்டும். சூரிய ஒளி அந்த விதைகள் மேல் பட வேண்டும்; மழை நீரும் பட வேண்டும். அப்போதுதான் விதைகள் வளரும்,” என்றது தவளை.
இரவு முழுவதும் தேரை அந்த விதைகளையே பார்த்துக் கொண்டிருந்தது. 'பயத்தால் விதைகள் வளரவில்லை' என்று நினைத்து, ஒரு மெழுகுவர்த்தியை எடுத்துக் கொண்டு விதைகளுக்கு அருகில் சென்றது. அங்கு அமர்ந்து கதை, கவிதை படித்துக் காட்டியது. அடுத்த நாள் பாட்டுப் பாடியது; வயலின் வாசித்துக் காட்டியது. இப்படியே நாட்கள் சென்றன. ஆனால், விதைகள் வளரவில்லை. “இதற்கு மேல் என்ன செய்வது?” என்று அழுதபடியே தூங்கிவிட்டது தேரை.
ஒரு நாள் அதிகாலையில் தேரையின் வீட்டு வழியே வந்த தவளை, தேரையை எழுப்பியது. “தேரையே, தேரையே... எழுந்திரு! உன் தோட்டத்தைப் பார். விதைகள் சிறு துளிர்களாக அரும்பி வெளியே வந்திருக்கின்றன!” என்றது.
ஆச்சரியமடைந்த தேரை, ஓடிச் சென்று பார்த்தது. அங்கு அழகாக, சின்னச் சின்னப் பச்சை நிறத் துளிர்கள் அரும்பியிருந்தன. “என்னுடைய விதைகள் இப்போது பயப்படாமல் வளர்ந்துவிட்டன!” என்று சந்தோஷத்தில் கத்தியது தேரை.
“இப்போது உனக்குச் சந்தோஷம் தானே? நல்ல தோட்டம் கிடைத்ததா?” என்றது தவளை.
“ஆமாம்! நீங்கள் கூறியது மிகவும் சரி. கடின உழைப்பு நிலத்தைத் தயார் செய்யும்; ஆனால், 'பொறுமை' மட்டுமே அதன் பலனை அறுவடை செய்ய உதவும்" என்றது தேரை.